சென்னை: பிறவி இதயக் குறைபாடு உள்ள 50 குழந்தைகளுக்கு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக தோல் வழியாக ஃபோன்டன் சிகிச்சை செய்து அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை உலக சாதனை படைத்துள்ளது.
உடலில் இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க ஒரே ஒரு இதய கீழறை மட்டுமே செயல்படும் சிக்கலான இதயக் குறைபாடுகளுடன் சில குழந்தைகள் பிறக்கின்றன. இக்குழந்தைகளுக்கு வழக்கமான திறந்த நிலை இதய ஃபோன்டன் அறுவைசிகிச்சைக்கு மாற்றாக கதீட்டர் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி 50 குழந்தைகளுக்கு தோல் வழியாக பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சை அளித்து அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை உலகளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து திரும்பும் இரத்தத்தை நேரடியாக நுரையீரலுக்கு திருப்பி விடுகிறது, இதன் மூலம் அந்த ஒற்றை இதயக் கீழறை ஆக்ஸிஜன் செறிவான இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துகிறது. அப்போலோவின் குழந்தைகளுக்கான இதயவியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவினரால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம், முன்னதாக எந்தவொரு அறுவை சிகிச்சை ஏற்பாடுகளும் இன்றி, அறுவை சிகிச்சையின் போது ரத்த நாளங்கள் வழியாக கதீட்டர்கள், வயர்கள் மற்றும் ஸ்டென்ட்களைப் பயன்படுத்தி ஃபோன்டன் வழிமுறையை முழுமையாகச் செய்து முடிக்க உதவுகிறது.
இதுகுறித்து குழந்தைகளுக்கான இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் சி.எஸ்.முத்துகுமரன் கூறுகையில், “ஒற்றை இதயக் கீழறை நோயுள்ள குழந்தைகளுக்கு ஃபோன்டன் கட்டத்துக்கு முன்பே பல பெரிய இதய அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது. உடற்கூறியலும், இரத்த இயக்கவியலும் பொருத்தமாக இருக்குமானால், கதீட்டர் அடிப்படையிலான இச்செயல்முறை மற்றொரு திறந்த நிலை அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஃபோன்டன் வழிமுறையைச் செய்ய வழிவகுக்கிறது. பெரிய இதய சிகிச்சைக்கு உட்பட்ட குழந்தைக்கு மற்றொரு அறுவை சிகிச்சையின் வலியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்” என்றார்.
இந்நிகழ்வில் அப்போலோவின் சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி, சென்னை அப்போலோ மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுசீலா நாராயணசாமி, இதய-மார்பறை அறுவை சிகிச்சை சேவைகள் இயக்குநர் டாக்டர் நெவில் ஏ.ஜி.சாலமன், அப்போலோ மருத்துவமனைகளின் செயல் உத்திகளுக்கான இயக்குநர் சிந்தூரி ரெட்டி மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டனர்.