எழுத்தாளர் பாவண்ணன்

 
வலைஞர் பக்கம்

“தீராத துன்பத்தை எழுதிக் கடக்கலாம்” - எழுத்தாளர் பாவண்ணன் நேர்காணல்

Guest Author

தமிழின் அத்தனை வகைமைகளிலும் எழுதி வருபவர் எழுத்தாளர் பாவண்ணன். 1982-இல் எழுத ஆரம்பித்த இவர், இரண்டே ஆண்டுகளில் இலக்கிய சிந்தனை விருது பெற்றவர். இதுவரை 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசு விருதுகள், சாகித்ய அகாடமி, கதா, இயல், விளக்கு, சூரிய விருதுகள் என ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். இனி பாவண்ணனுடன் பேசலாம்...

உங்களுக்குள் வாசிப்புலகம் எப்படி அறிமுகமானது?

“நான் பிறந்த வளவனூரில் என் பள்ளிக் கல்வியை முடித்தேன். எல்லா வகுப்புகளிலும் எனக்கு நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். எங்கள் தமிழாசிரியர்கள் பாடத்துக்கு அப்பால் பல பொதுவான செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறவர்களாக இருந்தனர். வாராந்திர நூலக வகுப்புகளில் படிக்க வேண்டிய நூல்களை தமிழாசிரியர்கள் எங்களுக்கு வழிகாட்டினார்கள்.

வாசிப்பில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை அறிந்த கண்ணன் என்னும் ஆசிரியர் தம் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, அவருடைய சேமிப்பில் இருந்த சிறார் புத்தகங்களையெல்லாம் என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். எங்கள் ஊர் நூலகத்தில் புணிபுரிந்த அண்ணன் பாண்டியன், என் ஆர்வத்தை அறிந்து பல புத்தகங்களைக் கொடுத்துப் படிப்பதற்கு உதவினார்.

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்து வந்த அக்கா ஒருவர், தான் படித்து முடித்த புத்தகங்களையெல்லாம் எனக்குக் கொடுத்துவிடுவார். வாசிப்பதில் இயல்பாகவே எனக்குள் இருந்த ஆர்வம் இப்படி பலர் எனக்குச் செய்த உதவிகளால் பெருகி வளர்ந்தது.”

உங்களுக்குள் எழுத்தை அடையாளம் கண்டது எப்படி?

“எங்கள் குடும்பத்தில் நான்தான் மூத்த பிள்ளை. எனக்கு இரு தம்பிகளும் இரு தங்கைகளும் இருந்தனர். ஒவ்வொரு நாளும் பொழுதுபோக்காக அவர்களுக்குக் கதைகளும் பாடல்களும் நானாகவே கற்பனையில் கட்டிச் சொல்வது வழக்கம். என் நண்பர்கள் வீடுகளும் ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட பெரிய குடும்பங்களாகவே இருந்தன.

அவர்களுடைய வீடுகளுக்குச் சென்றால், அந்த வீட்டுப் பிள்ளைகளும் “பாட்டு சொல்லுங்க மாமா, கதை சொல்லுங்க மாமா” என்று சுற்றிச் சூழ்ந்துகொள்வார்கள். அவர்களுடைய உற்சாகத்தைப் பார்த்து நானும் ஊக்கமுடன் கதையும் பாட்டும் சொல்லி அவர்களைச் சிரிக்கவைப்பேன். என் கற்பனையை வளர்த்துக்கொள்ள அது ஒரு பயிற்சி மாதிரி அமைந்தது.

பட்டப்படிப்புக்காக நான் கல்லூரியில் சேர்ந்தபோது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெ.தங்கப்பா. அவர் தமிழுலகம் நன்கறிந்த கவிஞர். மொழிபெயர்ப்பாளர். குழந்தைகளுக்காகவும் நிறைய எழுதியிருந்தார். ஒருமுறை அவர் எனக்கு ‘மழலை விருந்து’ என்றொரு புத்தகத்தைப் படிப்பதற்குக் கொடுத்தார். அதைப் படித்தபோது, சிறுபிள்ளைகளுக்கு நான் பாடிக் காட்டிய பாடல்களைப்போலவே இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.

புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க ஆசிரியர் அறைக்குச் சென்றபோது, அதை அவரிடம் குறிப்பிடவும் செய்தேன். உடனே, “நாளைக்கு உன் பாடல்களைக் கொண்டு வா, பார்க்கலாம்” என்று அவரும் ஆர்வத்துடன் சொன்னார். நான் எதையும் எழுதிச் சேமிக்கவில்லை என்றும் வாய்க்கு வந்தபடி பாடிவிட்டுச் சென்றுவிடுவேன் என்றும் சொன்னேன். அதைக் கேட்டு அவர் ஆச்சரியப்பட்டார்.

அடுத்த நாள் கல்லூரிக்குச் சென்றதும் முதல் வேலையாக தங்கப்பாவைச் சந்தித்து நான் எழுதிய அந்தப் பாடல்களைக் காட்டினேன். அவற்றைப் படித்துப் பாராட்டினார். எனக்குள் இருந்த எழுத்தாற்றலை முதன்முதலாகக் கண்டுபிடித்துச் சொல்லி ஊக்கப்படுத்தியவர் அவர்தான்.

சிறார் பாடல்களில் தொடங்கிய அந்தப் பயணம் பொதுவான மரபுவழிப் பாடல்கள், குறுங்காவியம், கதைக்கவிதை என பல வகைமைகளில் வளர்ந்து செல்லவும் அவரே காரணமாக இருந்தார். இப்படி ஏராளமாக எழுதி எழுதிப் பழகிக்கொண்டே இருந்ததால் மொழி எனக்கு மனப்பழக்கமாகிவிட்டது.”

எழுதுவதால் கிடைக்கும் உணர்வு எத்தகையது?

“ஒரு கோணத்தில் அதை ஒரு விடுதலை உணர்வு என்றும் சொல்லலாம். இன்னொரு கோணத்தில் தன்னம்பிக்கையை ஊட்டும் உணர்வு என்றும் சொல்லலாம். அதை என்னுடைய அனுபவத்தோடு இணைத்துக் கூறினால் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.

1981-ஆம் ஆண்டில் தொலைபேசித் துறையில் நான் இளநிலை பொறியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்கான பயிற்சியின் நிமித்தமாக ஐதராபாத் நகரத்தில் ஓராண்டு காலம் தங்கியிருந்தேன். அப்பயிற்சியில் இணைந்த சில நாட்களுக்குள்ளேயே எங்கள் அப்பா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக எனக்குக் கடிதம் வந்தது. ஏற்கெனவே அவர் பலமுறை மருத்துவமனையில் அப்படி சேர்க்கப்பட்டு குணமாகித் திரும்பி வந்திருக்கிறார். அவர் தையல் தொழிலாளி. அவருடைய வருமானத்தில்தான் குடும்பம் நடைபெற்றது.

ஒருமுறை மருத்துவமனைக்குச் சென்று திரும்பிவந்தால் அவர் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப சில வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும். வருமானமில்லாமல் அம்மா எப்படிக் குடும்பத்தை நடத்திச் செல்வார் என்னும் கேள்வி என்னைக் குடையத் தொடங்கியது. அந்த வேதனை, கடந்த கால வேதனைகளையெல்லாம் அடுக்கடுக்காக கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.

ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளையாக, அந்த நினைவுச்சுமையை என்னால் தாங்கமுடியவில்லை. தூக்கமில்லாத அன்றைய இரவு வேளையில் அந்த வேதனை என்னை வாட்டியெடுத்தது. தற்செயலாக அக்கணத்தில் மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாற்றில் எப்போதோ படித்த ஒரு வரி என் மனத்தில் தோன்றியது.

தீராத துன்பத்தை எழுதிக் கடப்பது தொடர்பான ஒரு வாசகம் அது. அதுவே எனக்கும் உகந்த வழி என எனக்குள் ஒரு குரல் சொன்னது. அது நள்ளிரவு நேரம். அறை நண்பர்கள் எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தனர். நான் அறைக்கு வெளியே வந்து சுவரோடு சாய்ந்து அமர்ந்தேன். என்ன எழுதலாம் என்று யோசிக்கத் தொடங்கியதுமே, இளநிலை பொறியாளருக்கான நேர்காணலுக்குச் சென்றுவந்த அனுபவம் என் நினைவில் நிழலாடியது.

அக்கணமே என் நோட்டைத் திறந்து அந்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதத் தொடங்கிவிட்டேன். எங்கும் நிறுத்தவில்லை. வார்த்தைக்காக யோசிக்கவும் இல்லை. எழுதிக்கொண்டே இருந்தேன். அதிகாலையில் கீழ்வானில் சூரியன் உதயமாகிற நேரத்தில் நான் அந்தக் கதையை எழுதி முடித்து தலைப்பைச் சூட்டினேன். அத்தருணத்தில் என் மனம் விவரிக்கமுடியாத ஒரு நிறைவுணர்ச்சியில் ததும்பிக்கொண்டிருந்தது.

வானில் எழுந்துவந்த சூரியனைப் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது. எழுதும் முன்பு என் நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்த துயரம் முற்றிலுமாகக் கரைந்துவிட்டிருந்தது. மாபெரும் விடுதலையுணர்வை உணர்ந்தேன். அதன் பொருள் துயரம் மறைந்துவிட்டது என்பதல்ல. துயரம் என்பது இந்த உலகில் காற்று, நீர், ஒளி, இருட்டு போல என்றென்றும் எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். என் வாழ்விலும் அது எப்போதும் இருக்கும். ஆனால் அதைக் கடந்து சென்று செயலாற்றும் கலையை எழுத்தின் வழியாகக் கற்றுக்கொண்டேன். அந்தப் பயிற்சி எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது.”

பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களைப் பாதித்தவர்கள் டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி என்பார்கள். நீங்கள் மட்டும் மாக்சிம் கார்க்கியைச் சொல்கிறீர்கள் எப்படி? அவரது துயர் மிகு வாழ்க்கையாலா?

“ரஷ்ய இலக்கிய வாசிப்பை நான் மாக்சிம் கார்க்கியிலிருந்து தொடங்கியதுதான் முதன்மையான காரணம். டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, துர்கனேவ், செகாவ் அனைவரையும் அதற்குப் பிறகே தேடித்தேடிப் படித்தேன். ஒருமுறை மாக்சிம் கார்க்கியின் சுயசரிதையை வாங்கிவந்து படித்தேன். அவருடைய சுயசரிதை மூன்று பகுதிகளால் ஆனது. அவை My Childhood, In the world, My universities என்னும் தலைப்புகளில் மூன்று புத்தகங்களாக தனித்தனியாக வந்திருந்தன. அதை ட்ரையலாஜி என்று சொல்வார்கள்.

கார்க்கி தன் வாழ்வில் அடைந்த துன்பங்களையெல்லாம் படிக்கப் படிக்க, நம்முடைய துன்பமெல்லாம் ஒரு துன்பமே இல்லை என்ற எண்ணமே எழுந்தது. அந்தச் சுயசரிதையைத் தொடர்ந்து இன்றுவரை நான் ஏராளமான சுயசரிதைகளைப் படித்துவிட்டேன். ஆயினும் என் மனத்துக்கு நெருக்கமாக கார்க்கியின் சுயசரிதையையே நினைக்கிறேன். அந்தச் சுயசரிதையைப் படித்திருக்காவிட்டால், அவர் எழுதிய வாசகத்தை நான் படித்திருக்க வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. அந்த வாசகம் ஒரு தீபமாக சுடர்விட்டு எனக்கு வழிகாட்டவில்லையென்றால் எனக்கு எழுத்தின் ஆற்றலைத் தெரிந்துகொண்டிருக்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்காது. பிறரைவிட கார்க்கியை நான் முதல்நிலையில் ஆதர்சமாகக் கருதுவதற்கு அதுதான் காரணம்.”

குழந்தைப் பாடல்கள் எழுதத் தூண்டுதல் எது அல்லது யார்?

என் இளமைக்காலத்தில் பல குழந்தைகளுக்கு நடுவில்தான் நான் எப்போதும் புழங்கியபடி இருப்பேன். தங்கப்பாவின் வழிகாட்டுதல், சிறார் பாடல்களைச் செறிவோடும் எளிய சொற்களோடும் அமைக்கும் கலையைக் கற்றுக்கொள்ள எனக்குத் துணையாக இருந்தது. சிறார்களுக்கான பாடல்தான் எழுத்தில் வெளியான என் முதல் படைப்பு. தமிழ்ச்சிட்டு என்னும் இதழில் சில பாடல்கள் வெளிவந்தன. எழுபதுகளில் புதுவையிலிருந்து வெளிவந்த சில சின்னச்சின்ன இதழ்களிலும் சில பாடல்கள் வந்தன. எனக்குத் திருமணமாகி மகன் பிறந்ததும் அவனுக்காக எண்ணற்ற பாடல்களை எழுதினேன். நான் பார்க்கும் குழந்தைகளே என்னை அவர்களுக்குரிய பாடல்களை எழுதவைக்கிறார்கள்.”

உங்கள் எழுத்தில் ரசனை சார்ந்த, விமர்சனக் கட்டுரைகள் 30-க்குமேல் நூல்கள் ஆகி உள்ளன. அதனை இலக்கிய இயக்கம் சார்ந்த பணியாக உணர்கிறீர்களா?

“ஆமாம். அதுவும் ஒருவகையில் இலக்கியத்தோடு தொடர்புடைய பணி என்றே நான் கருதுகிறேன். அவ்வகையில் நான் க.நா.சு.வை முன்னோடியாக எடுத்துக்கொள்வேன். நம் ரசனையை மேம்படுத்திக்கொள்ளவும் விமர்சனக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளவும் இசைவாக உலக இலக்கியம், உலகத்து சிறந்த நாவல்கள், சிறந்த பத்து இந்திய நாவல்கள், படித்திருக்கிறீர்களா, புகழ்பெற்ற நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள் என ஏராளமான புத்தகங்களை அவர் எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் வகுத்தளித்த வழியில் ஒவ்வொரு புத்தகத்திலும் அல்லது படைப்பிலும் நான் கண்டடைந்த அழகியல் அம்சத்தையும் வாழ்வியல் கூறையும் தொகுத்து கட்டுரைகளாக கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறேன். நூலாக்கம் பெற்ற கட்டுரைகளின் எண்ணிக்கையைவிட இன்னும் நூல்வடிவில் தொகுக்கப்படவேண்டிய கட்டுரைகள் ஏராளமாக உள்ளன.”

உங்களது முதல் நாவல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது. இரண்டாவது நாவல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது. மூன்றாவது நாவலுக்கு இலக்கிய சிந்தனை பரிசு கிடைத்தது. நீங்கள் மூன்று நாவல்களுக்குப் பிறகு ஏன் நாவல்களைத் தொடரவில்லை?

“நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான். என்னுடைய நான்காவது நாவலை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் நான் பணிபுரிந்துவந்த துறையில் கூடுதல் பொறுப்புகளோடு எனக்கு துணைக்கோட்டப் பொறியாளராக பதவி உயர்வு கிடைத்தது. அதற்கு முன்பே அந்தப் பதவி உயர்வை நான் தேவையில்லை என மறுத்திருந்தேன். ஆனால் இரண்டாவது முறையாக வந்தபோது துறைத்தலைவர் என் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பதவி உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அந்தப் பணியில் ஓய்வு நேரம் மிகமிகக் குறைவாகவே கிட்டியது. ஆழ்ந்து கவனம் செலுத்தவேண்டிய நாவல் பணியில் என்னால் மனமொன்றிச் செயலாற்ற இயலவில்லை.

இப்போது பணிநிறைவுக்குப் பிறகு அந்தச் சுமை விலகிவிட்டது. முற்றுப்பெறாத நாவலைத் தொடர்ந்து எழுதி முடிக்கும் முனைப்பில் இருக்கிறேன். விரைவில் எழுதிமுடிப்பேன்.”

கன்னடத்திலிருந்து நாவல்கள் நாடகங்கள் போன்று கவிதைகளை மொழிபெயர்க்காதது ஏன்?

“பணிநிறைவுக்குப் பிறகு சொந்த ஆக்கங்களைத் தவிர, வேறு திசைகளில் என் கவனம் இனி சென்றுவிடக்கூடாது என எனக்கு நானே ஒரு கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டேன். நான் எழுதவேண்டிய ஏராளமான படைப்புகள் இன்னும் எஞ்சியுள்ளன. இப்போதைக்கு அந்த முயற்சிகளில் மூழ்கியுள்ளேன். மொழிபெயர்க்கும் முயற்சியை நிறுத்தி வைத்திருப்பதற்கு அதுதான் காரணம்.”

உங்கள் படைப்புகளில் துயரம் பேசுபொருளாக உள்ளது. துயரமே கலைத்தன்மை கொண்டது என உணர்கிறீர்களா?

“பல படைப்புகளில் துயரம் என்பது மையப்பொருளாக இருப்பது உண்மைதான். ஆனால், ஒவ்வொரு படைப்பும் துயரத்தைக் கடந்து செல்லும் முயற்சியில் மனிதர்களிடம் தென்படும் ஆர்வத்தையும் உறுதியையும் இறுதியில் அவர்கள் அடையக்கூடிய வெற்றியையும் அடையாளப்படுத்துகிறது என்பதையும் நீங்கள் கவனிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.”

எப்படி வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் என்று நேர மேலாண்மை செய்கிறீர்கள்?

“புதிது புதிதாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம்தான் என்னை வாசிப்பை நோக்கிச் செலுத்திக்கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் நெருங்கிய நண்பர்களுடன் உரையாடும் தருணங்களில் புதிதாக வந்திருக்கும் புத்தகங்களைப்பற்றித் தெரிந்துகொள்வேன். எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவரும் புத்தக விமர்சனங்களையும் புதிய நூல்கள் பற்றிய குறிப்புகளையும் முடிந்தவரையில் படித்துவிடுவேன். அவற்றின் உதவியோடு, படிக்கவேண்டிய புத்தகங்கள் பற்றிய ஒரு தோராயமான பட்டியலை என்னால் உருவாக்கிக்கொள்ள முடியும். பிறகு அப்புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிப்பேன்.

பத்து புத்தகங்கள் வாங்கினால் உடனடியாக ஐந்து புத்தகங்களை மட்டுமே படிக்கமுடியும். அதற்கிடையில் புதிதாக வரும் ஏதோ ஒரு வேலையோ, அல்லது ஒரு பயணமோ, எழுதுவதற்குத் தோதாகக் கூடிவரும் மனநிலையோ, அந்த வாசிப்பு வேகத்தைத் தடுத்துவிடும். வேறு வழியில்லாமல், வாசிப்பதை அப்படியே நிறுத்திவிட்டு எழுத்தில் ஈடுபட்டுவிடுவேன். ஒன்றிலிருந்து விடுபட்டு இன்னொன்று என கூடுவிட்டு கூடு மாறிக்கொண்டே இருப்பதால் என் மனத்தில் சலிப்பு என்னும் சொல்லுக்கே இடமில்லை. ஒவ்வொரு பொழுதும் மாபெரும் செல்வத்துக்கு நிகரானது. அதை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது என்பது என் எண்ணம்.”

பொது வாசிப்புக்குரிய வணிக எழுத்து - தீவிர எழுத்து அல்லது நவீன எழுத்து இடையே உள்ள பரஸ்பர ஏளன, இளக்காரங்களைத் தவிர்க்க முடியாதா?

“ஒரு வாசகருக்கு, மதிப்பீடு சார்ந்த ஆழ்ந்த பயிற்சியோ, தெளிவோ இல்லாத நிலையில், இத்தகு கருத்துகளை எதிர்கொள்வதில் ஒரு குழப்பமோ தடுமாற்றமோ ஏற்படுவது இயற்கை. அந்நிலையில் அதை ஏளனமாகக் கணிக்கத் தோன்றுவதும் இயற்கையே. ஆனால் இடைவிடாத பயிற்சியின் வழியாக பக்குவமடையும் வாசகர்கள் எந்தக் கருத்தையும் தெளிவோடு எதிர்கொண்டு கடந்துசெல்வார்கள். பயிற்சியற்ற அல்லது ஒருபோதும் பயிற்சி பெற விழையாத வாசகர்கள் மட்டுமே எந்தக் கருத்தையும் உடனடியாக வம்புப்பேச்சாக மாற்றி அதில் திளைக்கத் தொடங்கிவிடுவார்கள்.”

இலக்கிய உலகிற்குள் குழு மனப்பான்மை தவிர்க்க முடியாதா?

“நம் சமூகத்தில், இலக்கிய வாசிப்பு என்பதே ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களின் ரசனை சார்ந்த தேர்வாக மட்டுமே இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்த செய்திதான். மாபெரும் மக்கள் தொகையைக் கொண்ட சமூகத்தில் அது ஒரு சின்னக் குழுதான். இவ்வகையில் இலக்கியம் எழுதுவதும் படிப்பதும் அந்தச் சின்னஞ்சிறு குழுவுக்குள் மட்டுமே நிகழும் செயல். ஆனால் ஒரு மொழியின் இலக்கியம்தான் ஒரு சமூகத்தின் மதிப்பை எல்லாக் காலகட்டத்திலும் நிலைநிறுத்துகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஹோமர், இலியட் போன்ற இலக்கியங்கள் இல்லையென்றால் கிரேக்கத்துக்கு என்ன மதிப்பு? ஷேக்ஸ்பியர் தொடங்கி டி.எஸ்.எலியட், ஈட்ஸ், ஆடென் போன்ற ஆளுமைகள் இல்லையென்றால் ஆங்கிலத்துக்கு என்ன மதிப்பு? டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, துர்கனேவ், செகாவ், கார்க்கி போன்றோரின் படைப்புகள் இல்லையென்றால் ரஷ்ய மொழிக்கு என்ன மதிப்பு எஞ்சியிருக்கும்? நம் சங்ககாலக் கவிஞர்கள், திருவள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள் போறோரின் படைப்புகளை அல்லவா தமிழ்ச்சமூகத்தின் முகமாக நாம் இன்றளவும் கூறிக்கொண்டுவருகிறோம்.

எல்லாச் சமூகத்திலும் இலக்கியத்தைப் படிக்கிற, விவாதிக்கிற, மதிக்கிற குழு என்பது எப்போதும் சிறிய அளவிலேயே இருக்கும். ஆனால் உலக அளவில் அந்த மையத்தைக் கொண்டே அச்சமூகத்தின் மதிப்பு கணிக்கப்படும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. எது இலக்கியம், எது இலக்கியமல்ல என்பதற்கான மதிப்பீடுகள் உறுதியானவை. ஒரு மாற்றுக் குறைவான தங்கத்தை யாரும் தங்கம் என அடையாளப்படுத்துவதில்லை. அப்படிப்பட்ட கறார்த்தன்மை இலக்கியத்துக்கும் உண்டு. மதிப்பீடுகள் சார்ந்த முடிவுகள் மாறும்போது குழுக்களும் விவாதங்களும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகின்றன.”

“உங்கள் பிஎஸ்என்எல் பணி வாழ்க்கை எந்த அளவுக்கு எழுத்துலக வாழ்வுக்கு உதவியது?

“என் பணி வாழ்க்கையை ஓர் இளநிலை பொறியாளனாகத்தான் தொடங்கினேன். நகரங்களை கேபிள் வழியாக இணைக்கும் பிரிவில் நான் சேர்ந்து பணியாற்றினேன். கர்நாடகத்தில் உள்ள எல்லா நகரங்களையும் எங்கள் குழு கேபிள் வழியாக இணைத்தது. கேபிள் செல்லமுடியாத மலைசார்ந்த பகுதிகளில் நுண்ணலை கோபுரங்களை எழுப்பி இணைத்தோம். கர்நாடகத்தை முழுமையாகச் சுற்றியலைந்து அறிய நான் மேற்கொண்ட பணியே எனக்கு நல்லதொரு வாய்ப்பை நல்கியது. நான் பதவி உயர்வு பெற்ற போது என் பணிகள் மேலும் விரிவடைந்து அது இந்தியா முழுவதும் பயணம் செய்ய வழிவகுத்துக் கொடுத்தது.

இமயமலை வரைக்கும் இரண்டுமுறை சென்று வந்திருக்கிறேன். இந்தியாவில் ஓடும் எல்லா முக்கியமான நதிகளையும் அருவிகளையும் பார்த்திருக்கிறேன். இந்தத் துறையில் இந்தப் பணியில் இல்லையென்றால் எனக்கு இத்தகு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்காது. ஒரு பயணத்தை வெறும் பயணமாக மட்டும் பார்க்கக்கூடாது. அது நம்மோடு நம் சமூகத்தில் சேர்ந்து வாழ்கிற மனிதர்களை அறிந்துகொள்ளும் வழி. ‘பாரடா உனது மானிடப்பரப்பை. பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்’ என்னும் பாரதிதாசனின் பாடல்வரியைத்தான் அடிக்கடி நினைத்துக்கொள்ளத் தோன்றும். இந்தத் துறையில் நான் பணி செய்யவில்லையென்றால், எனக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்காது.

இந்த அனுபவத்தோடு எங்கள் குடும்பமும் சுற்றமும் நல்லபடி வாழ்வதற்குப் போதுமான ஊதியத்தையும் கொடுத்திருக்கிறது. அதற்கு மேல் என்ன வேண்டும்? ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குக் கிடைத்த அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நம் தமிழ்ப்பெயர்கள் சூட்டி என் படைப்புகளில் உலவவிட்டபடி இருக்கிறேன். திட்டமிட்டதையெல்லாம் எழுதும் அளவுக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு குறையாக இருந்தாலும், கிடைத்த சிறுசிறு ஓய்வுப்பொழுதுகளையெல்லாம் எழுதுவதற்கும் வாசிப்பதற்குமே பயன்படுத்தி வந்திருக்கிறேன்.”

அண்மையில் சென்று வந்த வாழும் தமிழ் இலக்கிய விழா பங்கேற்பு அனுபவம் எப்படி?

“மிகச் சிறப்பானதொரு அனுபவம். ஏறத்தாழ ஓராண்டுக் காலம் அங்குள்ள விஷ்ணுபுரம் அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் அவ்விழாவிற்காகத் திட்டமிட்டு உழைத்திருக்கிறார்கள். அமர்வுகள் பழம்பெருமை மிக்கதொரு கட்டிடத்தின் இரு தளங்களில் நடைபெற்றன. மூன்றாவது தளம் உணவுக்கூடமாக இருந்தது. ஒரு நாளைக்கு எட்டு அமர்வுகள் என மொத்தம் பதினாறு அமர்வுகள் நடைபெற்றன. ஒவ்வொரு அமர்விலும் இரு தமிழ் எழுத்தாளர்களும் ஒரு அமெரிக்க எழுத்தாளரும் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் வாழும் புதிய தலைமுறையினரே அமர்வைப் பொறுப்பேற்று நடத்தினார்கள். அவர்கள் அனைவருமே ஒவ்வொரு எழுத்தாளரின் முக்கியமான படைப்புகளைப் படித்துவிட்டு வந்திருந்தார்கள். அவர்கள் எழுப்பிய வினாக்களிலிருந்து அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த உரையாடலை மேடையைவிட்டு இறங்கிய பிறகும் அவர்கள் எழுத்தாளர்களுடன் தொடர்ந்ததிலிருந்து அவர்களுடைய ஆர்வத்தையும் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர்களுடைய ஊக்கம் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. ஒரு தொடர் இயக்கம்போல இந்த அமைப்பு செயல்பட்டு இலக்கிய உலகில் ஆழ்ந்ததொரு தடத்தைப் பதிக்கும் என்றே நான் நம்புகிறேன்.”

எல்லாக் கலைஞர்களும் தங்கள் கலையை வெளிப்படுத்தும்போது இன்பம் அடைகிறார்கள். ஆனால் எழுத்தாளர்கள் மட்டும் துயரம் அடைகிறார்கள் என்பதை ஏற்கிறீர்களா?

“நான் உங்களிடம் மீண்டும் சொல்வது இதுதான்: இந்த உலகத்தில் துயரம் எப்போதும் இருக்கக்கூடிய ஒன்று. இந்த உலகில் காற்று, நீர், ஒளி, இருட்டு போல என்றென்றும் எல்லோரோடும் இருக்கும். எழுத்தாளன் வாழ்விலும் அது எப்போதும் இருக்கும். ஆனால் ஓர் எழுத்தாளன் அதைக் கடந்து சென்று செயலாற்றும் கலையை எழுத்தின் வழியாகக் கற்றுக்கொள்கிறான். அந்தப் பயிற்சி அவனுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது. அப்படித்தான் நான் புரிந்துகொண்டிருக்கிறேன்.”

இத்தனை நூல்கள், அனுபவங்கள் என்றான பிறகு இப்போது திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

“நான் ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதில்லை. இடைவிடாமல் என் பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதையே விரும்புகிறவன் நான். என் கவனம் முழுக்க என் முன்னால் விரிந்திருக்கும் பாதையின் மீதே பதிந்திருக்கும்.”

- அருள்செல்வன் | தொடர்புக்கு arulselvanakm4@gmail.com

SCROLL FOR NEXT