வலைஞர் பக்கம்

செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்திய சுதந்திரம் 18 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாளில் 1965 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய உரை முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் குறித்தே இருந்தது. அதனால்தான் இந்த உரையை, ‘பள்ளத்தாக்கில் போர்’ என்கிற அத்தியாயத்தின் கீழ் பிரசுரித்து உள்ளது, இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்.

இந்த உரை மிகவும் சுருக்கமானது; ஆனால் மிகவும் சூடானது. ‘பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை’ என்று ஆணித்தரமாக முழங்குகிறார் சாஸ்திரி. இதில் இருந்துதான் ‘செங்கோட்டை முழக்கம்’ - விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இனி வரும் ஆண்டுகளில் பிரதமர்கள் ஆற்றிய சுதந்திர தின உரைகள் வெற்று சம்பிரதாயமாக இல்லாமல், முற்றிலும் வேறு தளத்தில் ஆவேசத்துடன் ஒலிக்கத் தொடங்கின. இந்தத் தொடரில் இதைத்தானே நாம் எதிர்பார்த்தோம்? இதோ தொடங்கி விட்டது... உண்மையான ‘முழக்கங்கள்’!

1965 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆற்றிய சுதந்திர தின உரை: சில நாட்களுக்கு முன்பு, கட்ச், ரான் (Rann) பகுதியை பாகிஸ்தான் தாக்கியது. இந்தத் தாக்குதலை நாம் தேவையான அளவுக்கு சந்தித்தோம். கட்ச் பகுதியில் இருந்து முழுவதுமாக பாகிஸ்தான் திரும்பிச் சென்றால் ஒழிய, அதனுடன் பேச்சு நடத்த மாட்டோம் என்பதைத் தெளிவாக உணர்த்திவிட்டோம். இது நடந்து விட்டது. கட்ச் பகுதியில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கி விட்டது. கட்ச் பகுதியில் பாகிஸ்தான் படையோ காவல் துறையோ முகாமோ இல்லை. இந்தப் பகுதி இப்போது முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் அமைதிக்கு இடையூறு நேரக் கூடாது என்று விரும்புவதால் இந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. இந்த உடன்படிக்கையை அமல் செய்வது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோதே, காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவியது. நன்கு தெரிந்தே, ஊடுருவல் என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து உள்ளூர் வேட்டைக்காரர்கள் காஷ்மீரில் ஊடுவினார்கள் என்று கூறுவது அபத்தம். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்த தாக்குதலின்போது அதன் உள்நாட்டில் நிகழ்ந்த ஒரு எதிர்ப்பைக் காரணமாகக் காட்ட முயல்கிறது பாகிஸ்தான். காஷ்மீரில் பிரச்சினையைப் பெரிதாக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இந்தச் சூழ்நிலையில், பேச்சுக்கு அறவே இடம் இல்லை. அது குறித்து சிந்திக்கவும் கூட முடியாது. ("there is absolutely no scope for talks. We cannot even think it.") நாம் காஷ்மீரில் அமைதியை விரும்புகிறோம். ஆனால் நாம் தாக்கப்படும் போது, படைகளை, படையோடு சந்திப்பது அரசின் பொறுப்பு ஆகிறது. ("when we are attacked, it becomes the responsibility of the Government to meet force with force.")

காஷ்மீர் மக்கள் இந்த நிலைமையை துணிச்சலுடன் சந்தித்து வருகிறார்கள். ஊடுருவல் சக்திகளுக்கு எதிராக காஷ்மீரின் முஸ்லிம்கள் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஒன்றாக இணைந்து நிற்கிறார்கள். ஊடுருவல் சக்திகளை வெளியே எறிவதில் வைராக்கியத்துடன் இருக்கிறார்கள்.

ஜி.எம்.சாதிக் தலைமையிலான காஷ்மீர் அரசு நிலைமையைத் துணிச்சலுடன் கையாண்டு இருக்கிறது. அரசாங்கம் மற்றும் காஷ்மீரத்தின் சகோதர சகோதரிகளின் வீரதீரத்தைப் பாராட்டுகிறேன். இந்த நாடு இவர்களின் பக்கம் உறுதியாக நிற்கிறது; நமது மொத்த வளமும் வலிமையும் இவர்கள் பக்கம் நிற்கும் என்று உங்கள் அனைவரின் சார்பாகவும் உறுதி அளிக்கிறேன்.

ஒருவர் விடாது ஊடுருவல்காரர்கள் அத்தனை பேரையும் நாம் வெளியே வீசுவோம். நமது காவல் துறையும் நமது ராணுவமும் துணிச்சலுடன் நமது எல்லையைப் பாதுகாத்து வருகின்றன. அவர்களுக்கு நாம் நன்றி உடையவர்கள் ஆவோம்.

நம் மீது மிகுந்த பொறுப்பு இருக்கிறது. நம்முடைய வேற்றுமைகளை நாம் மூழ்கடிக்க வேண்டும். போராட்டம், மறியல் ஆகியவற்றுக்கு இடமில்லை. எல்லையில் நிலவும் அச்சுறுத்தலை ஒழிக்க, நாம் அனைவரும் இணைந்து நடை போட வேண்டும். உள்நாட்டில் இடையூறுகள் இருந்தால், எல்லையில் எப்படி ஒத்த சிந்தையுடன் பாதுகாக்க முடியும்? மதவாதம் சாதியவாதத்தை நாம் ஒடுக்க வேண்டும்.

காஷ்மீரின் அசம்பாவிதங்கள் விரைவாக முடியாமல் போகலாம். ஊடுருவல்காரர்கள் ஓரிரு நாட்களில் பின்வாங்கிவிட மாட்டார்கள். இந்த அச்சுறுத்தல் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தனது படைகளைப் பயன்படுத்தி காஷ்மீரைத் தன்னுடன் நினைத்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. இதனை ஒரு கௌரவ பிரச்சினையாகக் கருதுகிறது.

நமது தேசத்துக்கு சுயமரியாதை இருக்கிறது. நமக்கென்று பொறுப்புகள் இருக்கின்றன. நமது எல்லையான காஷ்மீரில் இருந்து ஓர் அங்குலம் கூட பாகிஸ்தான் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று மிக உறுதியாய் கூறிக் கொள்கிறேன்.

ஒற்றுமை மற்றும் அமைதிக்கான எனது வேண்டுகோளை ஒவ்வொரு இந்தியரும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். நமது எல்லைகளை பாதுகாப்போம்; நமக்குத் தீங்கு விளைவிக்க எண்ணும் சக்திகளைத் தோற்கடிப்போம். நமது தேசியக் கொடியின் பெருமையை, தொடர்ந்து தக்க வைப்போம்.

இந்தியா தொடர்ந்து வளரும். மேலும் வளமை பெறும். ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

SCROLL FOR NEXT