வார ராசிபலன்கள்

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ செப்.3 - 9

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் மற்றவர்களைப் பற்றி புரிந்து கொள்ள பல சூழ்நிலைகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வர். மாமியார் - மருமகள் உறவு கற்கண்டாய் தித்திக்கும். அதனால் இல்லத்தில் மகிழ்ச்சியே. தொழில்-வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும்.

வரவேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். கவலை வேண்டாம். தேக்கி வைத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய முற்படுவது நல்லது. நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சமயமாக இது இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த பனிச்சுமை குறையும். சக பணியாளர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும்.

வேலை விஷயமாக வெளியூர் வெளி மாநிலங்களுக்கு சென்று வர வேண்டி வரும். பெண்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். பெரியோர் பேச்சு கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் பெற்றோர்களிடம் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். கல்வி அல்லாது பிற துறைகளிலும் சாதிப்பீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.

சுவாதி: இந்த வாரம் மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட மனதில் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.

விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே சுமூகமான உறவு இருக்கும். சிறுவர்களால் ஒரு சில பிரச்சனைகள் தலை தூக்கலாம். அவற்றை பதட்டம் இல்லாமல் சரி செய்ய முயலுங்கள். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். தொழில் - வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.

புதிய முயற்சிகலில் இறங்குவதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். எனினும் சளைக்காமல் கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

சக பணியாளர்கள் உதவுவார்கள். பெண்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி வரலாம். நீண்ட நாட்களாக தேடிய பொருள் ஒன்று கிடைக்கும். விஷேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புவதன் மூலம் உங்கள் மதிப்பு உயரும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

அனுஷம்: இந்த வாரம் மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்திதரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். கிளைகளை விரிவுபடுத்த முழு கவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.

கேட்டை: இந்த வாரம் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனநிலை இருக்கும். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். மனக்கவலை குறையும். சந்திரன் சஞ்சாரத்தால் பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சுப்பிரமணியருக்கு அரளி மாலை போட்டு வழிபடுங்கள் நல்லவை நடக்கும்.

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வேலை செய்வீர்கள். ரகசியங்களை காப்பாற்றுவீர்கள். குடும்பம் சுமூகமான சூழ்நிலையில் இருக்கும். வீடு தேடி வந்து உங்களுக்கு நல்வாக்கு சொல்வார்கள். வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் சிலருக்கு வரலாம். மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழிலில் சக பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உங்கள் பேச்சுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து தொழிலை விரிவுபடுத்துவது பற்றி பேச்சை தொடங்குவார்கள் நன்மையில் முடியும். உத்தியோகத்தில் மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். நிலுவையில் இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

சில வாய்ப்புகள் உங்களுக்கு தட்டிப்போனதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது உங்களுக்கு நன்மை செய்வார்கள். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை வராது. மாணவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஆசிரியரின் கவனம் உங்கள் மேல் இருக்கும்.

மூலம்: இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண் பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

பூராடம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வீடு, மனை பற்றிய கவலை குறையும். குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வந்தால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT