புகழ்ச்சியில் வளர்பவனுக்கு தான் பிறர் துணை தேவை... முயற்சியில் வளர்பவனுக்கு தன்னம்பிக்கையே துணை என்ற வரிகளுக்கேற்ப தன்னம்பிக்கையோடு செயல்படும் துலாம் ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். தேங்கிக் கிடந்த பல காரியங்களை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை அகலும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனி நல்ல விதத்தில் நடக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் நீண்ட நாள் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர, சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். தாய் வழிச் சொத்து கைக்கு வரும்.
குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். புது எண்ணங்கள் தோன்றும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு 10ம் வீட்டுக்கு செல்வதால் சொந்த வீடு வாங்க முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குருபகவான் லாப வீடான 11ம் வீட்டுக்கு செல்வதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். வங்கியில் வாங்கியிருந்த வீட்டுக் கடனை அடைப்பீர்கள். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள்.
ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 5ம் வீட்டிலும், கேது 11ம் வீட்டிலும் தொடர்வதால் பாதியிலேயே நின்றுபோன வீட்டை இனி முழுமையாக கட்டி முடிப்பீர்கள். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 4ம் வீட்டுக்கும், கேது 10ம் வீட்டுக்கும் வருவதால் வேலைச் சுமை அதிகரித்தாலும் மகிழ்ச்சி கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.
சனியால் ஏற்படும் பலன்கள்: சனி பகவான் 6ம் வீட்டில் தொடர்வதால் முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டாகும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். ஊரில் செல்வாக்கு உயரும். கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். இளைய சகோதர, சகோதரிகளுக்கு தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் இனி கைகூடி வரும். இல்லத்தரசிகளின் மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். கணவர் வழியில் உதவிகள் உண்டு. பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள்.
கன்னிப் பெண்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மனதுக்குப் பிடித்த மாப்பிள்ளை அமைவார். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைவீர்கள். வகுப்பாசிரியரின் அன்பை பெறுவீர்கள். புரியாதவற்றை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். வியாபாரிகள் புது யுக்திகளை கையாளுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டு. போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு சலுகைகளை அறிவிப்பீர்கள். சிலர் பழைய கடையை மாற்றியமைப்பீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்தி விடுங்கள்.
உணவு, கெமிக்கல், மோட்டார் உதிரி பாகங்கள் மூலம் லாபமடைவீர்கள். நீண்ட நாளாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தங்கள் இப்போது கைக்கு வரும். உத்தியோகத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயரதிகாரிகள், உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாவீர்கள்.
சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு தள்ளிப் போன வாய்ப்புகள் இனி தேடி வரும். வீண் விமர்சனம், வதந்திகளை தாண்டி முன்னேறுவீர்கள். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டு கவலைகளை நீக்கி செல்வ செழிப்பையும் செல்வாக்கையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணம்- காரைக்கால் ரோட்டில் உள்ள திருநீலக்குடியில் இருந்து 5 கி.மீ தூரம் பயணித்து அங்குள்ள கைலாசநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்குங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.