சிறப்பு பலன்கள்

சிம்மம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

பராபவ வருடம் - 14.04.2026 முதல் 13.04.2027 வரை

முனைவர் கே.பி.வித்யாதரன்

இருளில் இருக்கிறேன் என்று கவலைப் படாதே... இருளும் விடியலை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது என்ற தத்துவத்தை உணர்ந்த சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். சொந்த ஊர் பிரச்சினைகளில் தலையிட்டு முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். அதே சமயம் சின்னச் சின்ன கருத்து மோதல்களும் வரும். கவலை வேண்டாம். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். மகளின் திருமணம் கைகூடி வரும். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். சொத்து விஷயத்தில் வெற்றியுண்டு. புது வாகனத்தில் வலம் வருவீர்கள்.

          

குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் லாப வீட்டில் இருப்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மகளின் திருமணம் கைகூடி வரும். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு பகவான் விரய வீடான 12ம் வீட்டுக்கு வருவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரும். குல தெய்வப் பிரார்த்தனைகள் மன நிம்மதியை தரும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குரு பகவான் ராசிக்குள் வருவதால் உடல் சோர்வு, மன உளைச்சல் வந்து போகும். பண வரவு ஓரளவு இருக்கும்.

ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 7ம் வீட்டிலும், ராசிக்குள் கேதுவும் தொடர்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் அதிகரிக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 6ம் வீட்டுக்கும், கேது 12ம் வீட்டுக்கும் வருவதால் வேற்று மதத்தினர்,மொழியினரால் ஆதாயமுண்டு. சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து புது சொத்து வாங்குவீர்கள்.

சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: சனி பகவான் 8ம் வீட்டில் தொடர்வதால் வீண் வறட்டு கவுரவத்துக்காக செலவு செய்யாதீர்கள். மனைவிக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். சில சமயங்களில் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற போராட வேண்டியது வரும். இல்லத்தரசிகளுக்கு மனக்குழப்பம், தடுமாற்றங்கள் நீங்கும். குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு பக்குவப்படுவீர்கள். சிலர் சுய தொழில் தொடங்க வங்கிக் கடனுதவியை நாடுவீர்கள்.

கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மறதி, மந்தம், பார்வைக் கோளாறு வந்து போகும். உயர்கல்வியில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து லாபமீட்டுவீர்கள். செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். உணவுப் பொருட்கள், கெமிக்கல், இரும்பு, மரவகைகளால் லாபமடைவீர்கள்.

புதிய நிறுவனங்களிலிருந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் நிர்வாகத் திறமையை அங்கீகரிப்பார். பணிச்சுமை இருக்கும். கணினி துறையினருக்கு, நெடுநாள் போராட்டத்துக்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தடைகள் எதுவானாலும் சமாளித்து வெற்றி காணும் மன வலிமையை தருவதாக அமையும்.

பரிகாரம்: கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தூரத்தில் அருள்பாலிக்கும் கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரரை ஏதேனும் ஒரு பிரதோஷ காலத்தில் சென்று வணங்குங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT