அலைகள் இல்லாத கடலும் இல்லை, கவலைகள் இல்லாத மனிதனும் இல்லை, இதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் எதிர் கொண்டு வாழும் மேஷ ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு 11-ம் ராசியில் லாப ஸ்தானத் தில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகளெல்லாம் இனி நிறைவேறும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். நல்ல லாபமும் உண்டு. திடீர் பண வரவு உண்டு. கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு பிரபலங்களின் உதவியுடன் நல்ல கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். அடிக்கடி கோபப்படாதீர்கள். வயிற்று வலி, மூச்சுத் திணறல் நீங்கும்.
குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குருபகவான் 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் குழப்பம் நிகழும். சகோதர வகையில் மனக் கசப்புகள் வரும். சொத்துப் பிரச்சினைகள் தலை தூக்கும். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு பகவான் 4-ம் வீட்டுக்கு செல்வதால் சொந்த பந்தங்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அரசு வேலைகளை அலைந்து திரிந்து முடிப்பீர்கள்.
புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடி பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. தாயாருக்கு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். 31.10.26 முதல் 25.01.27 வரை குரு பகவான் அதிசாரமாக 5-ம் வீட்டுக்கு செல்வதால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலையுயர்ந்த ஆபரணம்- அணிகலன்களை வாங்குவீர்கள்.
ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 11-ம் வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் தொடர்வதால் வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சொந்த ஊரில் கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் இனிவரும். கடன் தொல்லைகள் அடியோடு விலகும். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 10-ம் வீட்டுக்கும், கேது 4-ம் வீட்டுக்கும் வருவதால் அரைகுறை யாக நின்ற வேலைகள் முழுமையடையும்.
சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: உங்களின் விரய வீடான 12-ல் சனிபகவான் தொடர்வதால் ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள். அரசு விஷயங்களில் கவனம் தேவை. அனுமதி பெறாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். அண்டை வீட்டாரின் தேவையறிந்து உதவி செய்வீர்கள். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் அமைதி திரும்பும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அடகில் வைத்திருந்த நகைகளை மீட்பீர்கள். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். கன்னிப் பெண்களுக்கு கல்லூரி படிப்பில் வெற்றியுண்டு. தடைபட்ட கல்யாணம் இனி விமர்சையாக நடக்கும். மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.
புரியாதவற்றை வகுப்பாசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையை அதிகப்படுத்த புது யுக்திகளை கையாளுவீர்கள். வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. கூட்டுத்தொழில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வார். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் ஆதாயம் பெறும். எலக்ட்ரிக்கல், உணவு வகைகளால் அதிக லாபம் உண்டாகும்.
உத்தியோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும். பணிச் சுமை அதிகரிக்கும். கணினி துறையினருக்கு அயல்நாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு திறமைக்கேற்ப வாய்ப்பு கிட்டும். மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு செலவுகளாலும், பயணங்களாலும் உங்களை அலைக்கழித்தாலும், பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக் கொடுக்கும்.
பரிகாரம்: விழுப்புரத்திலிருந்து (30 கி.மீ) திருக்கோவிலூர் செல்லும் வழியில் அரகண்டநல்லூரில் இறங்கி கிழக்கே 2 கிமீ தொலைவில் அருள்பாலிக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை ஒரு சனிக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.