சிறப்பு பலன்கள்

மீனம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

பராபவ வருடம் - 14.04.2026 முதல் 13.04.2027 வரை

முனைவர் கே.பி.வித்யாதரன்

அவமானத்தை அனுபவமாகக் கொண்டு தன்மானத்தை தகுதியாக்கிக் கொண்டு இலக்கை நோக்கி பயணித்து கொண்டே இருக்கும் மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு 12-வது ராசியில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். முகத்தில் தெளிவு பிறக்கும். பழைய பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். திடீர் பணவரவால் கொஞ்சம் சேமிப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிக அக்கறை காட்டுவீர்கள். உங்களின் உழைப்பையும், தியாகத்தையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இளைய சகோதரரால் விரயச் செலவுகள் இருந்தாலும், ஆதரவு உண்டு. சிலர் சொந்த ஊரில் வீடு கட்டுவார்கள்.

          

குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது குடும்பத்தினரை நினைத்து வருந்துவீர்கள். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு 5ம் வீட்டுக்கு செல்வதால் தொட்ட காரியம் வெற்றியடையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வெகுநாட்களாக இழுபறியாக இருந்து வந்த பூர்வீகச் சொத்து, இப்போது கைக்கு வரும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குரு பகவான் 6ம் வீட்டுக்கு செல்வதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உறவினர்கள், பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.

ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் தொடர்வதால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சுபச் செலவுகளால் கையிருப்பு கரையக் கூடும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வாகனம் வீண் செலவு வைக்கும். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 11ம் வீட்டுக்கும், கேது 5ம் வீட்டுக்கும் வருவதால் தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். முகத்தில் உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும்.

சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: ராசிக்குள் ஜென்மச் சனியாக சனி பகவான் தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் அவ்வப்போது வந்து போகும். நினைத்தபடி எந்த வேலையும் முடியவில்லையே என வருந்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். நடைபயிற்சி, யோகா, தியானம் செய்யுங்கள். வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன சுப காரியங்கள் மனநிம்மதியை தரும். இல்லத்தரசிகளுக்கு, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

கன்னிப் பெண்களுக்கு குழப்பம், தடுமாற்றங்கள் நீங்கும். எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். கல்யாணம் சிறப்பாக நடக்கும். மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்று செயல்படுங்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.

புது சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏஜென்ஸி, புரோக்கரேஜ், கல்வி நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு இனி முழுமையாக இருக்கும். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் மற்றவர்கள் வியக்கும்படி நடந்து கொள்வீர்கள். மேலதிகாரி உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

சம்பளம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம். கணினி துறையினருக்கு பெரிய நிறுவனத்திடம் இருந்து வாய்ப்புகள் வரும். அதிக நேரம் கண் விழித்து வேலை செய்யாதீர்கள். பார்வைக் கோளாறு, முதுகு வலி வரக் கூடும். கலைத் துறையினருக்கு நெடுநாளாக காத்திருந்த வாய்ப்புகள் இப்போது கதவைத் தட்டும். மனக் கசப்பில் இருந்த சக கலைஞர்கள் இனி வலிய வந்து பேசுவர். மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அனுபவங்கள் பல தந்து அதன் மூலம் உங்களைச் செம்மைப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: மதுரை- ராமேஸ்வரம் ரோட்டில் 35 கி.மீ தூரத்திலுள்ள முத்தனேந்தல் என்ற ஊரில் இருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில், ஒரு கி.மீ சென்றால் ஆழிகண்டேஸ்வரர் தலத்தை அடையலாம். அங்குள்ள இடைக்காடர் சித்தரை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் சென்று வணங்குங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT