விடியல் என்பது கிழக்கில் அல்ல... நம் உழைப்பில் தான் உள்ளது என்பதை உணர்ந்து உழைக்கும் மகர ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு 2-வது ராசியில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதுப்பொலிவுடன் மிளிர்வீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும். வெளிவட்டாரத்தில் உங்களை பாராட்டும் அளவுக்கு முன்னேறுவீர்கள். குடும்பத்தில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுப காரியங்கள் இனி கைகூடி வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். வற்றிய பணப்பை இனி நிரம்பும். எதிர்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உறவினர் மத்தியில் உங்களின் தகுதி உயரும்.
குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைபட்ட அரசு காரியங்கள் முடியும். சகோதர வகையில் கருத்து மோதல் வரலாம். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு 7ம் வீட்டுக்கு செல்வதால் தொட்ட காரியம் துலங்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். குழந்தையில்லாத தம்பதிக்கு இனி குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலர் சொந்தமாக வீடு வாங்குவார்கள். சிலருக்கு புதிய மனை, வாகனம் அமையும். தாய் வழியில் உதவிகள் கிடைக்கும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குரு பகவான் 8ம் வீட்டுக்கு செல்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.
ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 2ம் வீட்டிலும், கேது 8ம் வீட்டிலும் தொடர்வதால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்து மோதல் வரலாம். யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள். அடிக்கடி நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. 05.12.26 முதல் 12.04.27 வரை ராசிக்குள் ராகுவும், கேது 7ம் வீட்டுக்கும் வருவதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். அவ்வப்போது வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்துபோக்கும். கண் எரிச்சல், சைனஸ் பிரச்சினையால் அவதிப்படுவீர்கள்.
சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: உங்களுடைய ராசி நாதனான சனி பகவான் ராசிக்கு 3ம் வீட்டில் தொடர்வதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பாராத வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். சிலருக்கு வழக்கில் வெற்றியுண்டு. நெடுநாளாக வாங்க நினைத்த பொருட்களை இப்போது வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வெளி மாநில புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
இல்லத்தரசிகளின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தங்க ஆபரணம் சேரும். கணவரின் அன்பை பெறுவீர்கள். தந்தை வழி உறவினருடன் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போகும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து பெருந்தன்மையாக நடந்து கொள்ளுங்கள். யோகா, தியானம் செய்வது நல்லது. கன்னிப் பெண்களுக்கு புது முயற்சிகளில் வெற்றியுண்டு. பெற்றோர் ஆதரவாக இருப்பர். மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வியில் தேர்ச்சியுண்டு. சிலர் வெளிநாடு சென்று படிப்பார்கள்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். உணவு, தானிய வகைகள், கமிஷன், புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளால் ஆதாயமுண்டு. அனுபவம் மிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்புக்கு மேலதிகாரி அங்கீகாரம் அளிப்பார்.
வேலைகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். சக ஊழியர்களிடம் குடும்ப ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கோப்புகளை கவனமாக கையாள வேண்டும். கணினி துறையினருக்கு நிறுவன ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அனைவரிடமும் கனிவாகப் பேசுவது நல்லது. முன்கோபத்தை அலுவலகத்தில் யாரிடமும் காட்ட வேண்டாம். கலைத் துறையினருக்கு நல்ல நிறுவனத்திடமிருந்து வாய்ப்புகள் தேடி வரும். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும். கலைஞர்களின் ஆதரவு உண்டு. மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நெடுநாள் கனவை நனவாக்குவதாக அமையும்.
பரிகாரம்: வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.