உடன் இருப்பவர்களுக்கு ஓடமாகவும் உதறி விட்டுப் போனவர்களுக்கு பாடமாகவும் இருக்கும் கன்னி ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கவலைதோய்ந்த முகத்தில் இனி மகிழ்ச்சி பொங்கும். நெடுநாள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் -மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்து கொள்வீர்கள். பணப் பற்றாக்குறை நிலை மாறும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தொட்ட வேலையை ஓரிரு முறை அலைந்துதான் முடிக்க வேண்டி வரும். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு பகவான் லாப வீடான 11ம் வீட்டுக்கு செல்வதால் வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வற்றிய பணப்பை நிரம்பும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குரு பகவான் விரய வீடான 12ம் வீட்டுக்கு செல்வதால் சுபச் செலவுகள் அடுக்கடுக்காக வரும்.
ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 6ம் வீட்டிலும், கேது 12ம் வீட்டிலும் தொடர்வதால் சாதுர்யமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 5ம் வீட்டுக்கும், கேது லாப வீடான 11ம் வீட்டுக்கும் வருவதால் அனைத்திலும் வெற்றிதான். புது சிந்தனைகள் தோன்றும். எதிர்பார்த்த வங்கிக் கடனும் கிடைக்கும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: சனி பகவான் 7ம் வீட்டில் தொடர்வதால் மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த மனக் கசப்பு விலகும். அதிக நேரம் கண் விழித்து வேலை செய்ய வேண்டாம். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு சொந்தங்களிடையே மதிப்பு கூடும். சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணத்தில் தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
கன்னிப் பெண்களுக்கு சைனஸ் பிரச்சினை நீங்கும். பெற்றோரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணம் வெகு விமர்சையாக நடக்கும். மாணவ- மாணவிகளுக்கு மறதி, மந்தம், சோம்பல் விலகும். உயர் கல்வியில் தேர்ச்சி அடைவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடுகள் செய்வீர்கள். தானிய வகைகள், கல்வி, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.
கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே குழப்பங்கள் வந்து போகும். உத்தியோகத்தில் உங்களின் தகுதியறிந்து மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நீண்ட நாளாக கேட்டுக் கொண்டிருந்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். கணினி துறையினருக்கு பணிச் சுமை இருக்கும். அதே சமயம் சம்பள உயர்வும் உண்டு. கலைத் துறையினருக்கு பரிசு, பாராட்டு கிடைக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்கான வாய்ப்பை அமைத்துக் கொடுப்பர். மொத்தத்தில் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு திடீர் வெற்றியையும் புகழையும் பண பலத்தையும் தருவதாக அமையும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
பரிகாரம்: தஞ்சாவூர்- வல்லம் சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஹரித்ரா விநாயகரை சதுர்த்தி நாளில் அருகம் புல் சாற்றி வணங்குங்கள்.