சொந்தக்காரனை நம்பினால் தகராறு, சொந்த காலை நம்பினால் வரலாறு என்ற வரிகளுக்கு ஏற்ப தன் உழைப்பே மூலதனம் என்று வாழும் மகர ராசிக்காரர்களே!
குரு பகவான், ஜூன் 02 முதல் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார். இதுவரை 6-ம் இடத்தில் மறைந்து பல்வேறு பிரச்சினைகளையும், எதிர்ப்பு களையும் தந்த குருபகவான் இனி உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மையைச் செய்வார். 7-ல் குரு வந்து அமர்வதால், உங்களின் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.
வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்புகள் விலகும். மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களின் அறிவுரையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தடைபட்டிருந்த சுப காரியங்கள் இனி நல்லபடியாக நடக்கும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீரும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அழகு, இளமை கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிலும் துல்லியமாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். புது வீடு வாங்குவீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமுண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தைப் பார்ப்பதால், கௌரவப் பதவிகள் தேடி வரும். தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். சொந்த ஊரில் முதல் மரியாதை கிடைக்கும். உங்களால் பயனடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவார்கள். வீண் பழிகள் விலகும். பழைய கடனிலிருந்து விடுபடுவீர்கள்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமாகிய லாபஸ்தானத்தைப் பார்ப்பதால், சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதரரால் ஆதாயமுண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் தைரிய - விரயாதிபதியுமான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புது முயற்சிகளில் வெற்றி உண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.
உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனிபகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் அழகு, ஆரோக்கியம் கூடும். கொடுத்து ஏமாந்த பணம் இப்போது கைக்கு வரும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். பூர்வீகத்தில் சொத்து வாங்குவீர்கள்.
பாக்யாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் குடும்ப வருமானம் உயரும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். சிலர் புது தொழில் தொடங்குவீர்கள். நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வரும் அளவுக்கு உயர்வீர்கள்.
கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குருபகவான் செல்வதால் வீண் செலவுகள், அலைச்சல்கள் வரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
வியாபாரம், உத்தியோகம்:
வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபமடைவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உணவு, ஏற்றுமதி - இறக்குமதி, துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சினைகள் ஓயும். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அரசிடமிருந்து சலுகைகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில், புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு, நெருக்கமாவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். கணினித்துறையினருக்கு அதிக சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். கலைஞர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்கும். அரசால் கவுரவிக்கப்படுவீர்கள். இந்த குருப் பெயர்ச்சி எங்கும் எதிலும் முன்னேற்றம் கிட்டும் காலமாக அமையும்.
குரு பகவான் பரிகார தலங்கள்:
சென்னை - பெரிய பாளையம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) கிராமத்திலிருந்து 4 கிமீ தொலைவிலுள்ள திருகண்டலம் திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். துப்புரவு தொழிலாளர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். தடைகள் உடைபடும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.