

உளிகளைக் கண்டு பயந்தால் சிலையாக முடியாது, வலிகளைக் கண்டு பயந்தால் வாழ்க்கை வாழ முடியாது என்ற வரிகளுக்கு ஏற்ப வலிகளை எதிர்கொண்டு வாழும் மீன ராசிக்காரர்களே!
உங்க ராசிநாதனான குருபகவான், ஜூன் 2 முதல் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப் போகிறார். இதுவரை 4-ல் அமர்ந்து, பல்வேறு பிரச்சினைகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வந்த குரு பகவான் இனி பல்வேறு யோகங்களை அள்ளித் தரப் போகிறார். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்களுக்கெல்லாம் இனி தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்றிருந்த நிலை மாறும். தாம்பத்யம் இனிக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரங்களை மீட்டெடுப்பீர்கள்.
வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பொருளாதார நிலை யில் முன்னேற்றம் உண்டு. சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். சொத்துப் பிரச்சினையில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். சொந்தம் பந்தங்களுக்கு மத்தியில் உங்களின் முன்னேற்றம் அதிகரிக்கும். குலதெய்வம் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோர்ந்திருந்த நீங்கள் இனி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தைப் பார்ப்பதால், வறண்டு கிடந்த பணப்பை, இனி நிரம்பும். சேமிக்கும் அளவுக்கு பொருள் வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உடன் பிறந்தவர்களுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கவும்.
குரு பகவான் உங்களின் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், அதிரடி முன்னேற்றம், திடீர் பணவரவு எல்லாம் உண்டு. மனைவிக்கு விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்கிக் கொடுப்பீர்கள். மூத்த சகோதரர், சகோதரிகள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் ராசிநாதனும், ஜீவனாதி பதியுமான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். புது சொத்து வாங்குவீர்கள். குழப்பங்கள், ஈகோ பிரச்சினை, கருத்து வேறுபாடுகள் என அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
லாப- விரயாதிபதியுமான சனி பகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு கட்டுவீர்கள். வெளிநாட்டுப் பயணம் உண்டு. கோயில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். சுக - சப்தமாதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் தள்ளிப் போன திருமணம் இனி தடபுடலாக நடந்து முடியும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. பழைய வாகனத்தை மாற்றிவிட்டுப் புது வாகனத்தில் வலம் வருவீர்கள்.
கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குரு பகவான் செல்வதால் பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றியுண்டு. திடீர் பணவரவு உண்டு. எனினும் சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.
வியாபாரம், உத்தியோகம்: வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாண்டு லாபமீட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வாடிக்கை யாளர்கள் மீண்டும் வருவார்கள். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வீர்கள். சிலர் கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். கணினி, உணவு, இரும்பு, கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் மறையும். அவருக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்கள், இனி நட்புறவாடுவார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவோ, செயல்படவோ வேண்டாம். யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூற வேண்டாம். கணினித் துறையினருக்கு அதிக சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சிலர் அங்கு செட்டிலாகும் வாய்ப்பு உண்டு.கலைஞர்களுக்கு, பழைய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களின் ஆலோசனையும், ஆதரவும் கிடைக்கும். இந்த குருப் பெயர்ச்சி திட்டமிட்டு செயல்பட்டு முன்னேறும் காலமாக அமையும்.
குரு பகவான் பரிகார தலங்கள்: தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே 1 கி.மீ தொலைவில் உள்ள புளியரை சதாசிவமூர்த்தி கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவி செய்யுங்கள். நல்லது நடக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.