சிறப்பு பலன்கள்

கும்பம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

02.06.2026 முதல் 26.06.2027 வரை

முனைவர் கே.பி.வித்யாதரன்

பிடித்த மனிதரோடு சிரித்துப் பேசு, பிடிக்காத மனிதரோடு சிந்தித்துப் பேசு என்ற வரிகளுக்கு ஏற்ப எதிலும் சிந்தித்துப் பேசும் கும்ப ராசிக்காரர்களே!

குரு பகவான், ஜூன் 2 முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப் போகிறார். குருவின் பார்வை உங்களுக்குப் பலவிதத்திலும் ஆதாயத்தையே தருவார். அலைச்சலும், வேலைச்சுமையும் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மன நிம்மதியையும், செல்வாக்கையும் தருவதாக அமையும். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளின் திருமணத்தை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சிறு சிறு மனக் கசப்புகள் ஏற்படும். சொத்து விஷயங்களில் கவனம் தேவை.

வெளிவட்டாரத்தில் ஓரளவு மதிப்பு உண்டு. எனினும் பேச்சிலும், செயலிலும் கொஞ்சம் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கண் எரிச்சல், வாயுக் கோளாறால் அவதிப்படுவீர்கள். பழைய வழக்குகளில் இழுபறி நிலையே இருக்கும். அனுபவமிக்க வழக்கறிஞரை ஆலோசித்துச் செயல்படுங்கள். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். சிறு சிறு வாகன விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடிக்கடி வாகனம் பழுதாகும்.

குரு பகவானின் பார்வை பலன்கள்:

குரு பகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், தொட்டது துலங்கும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனி சிறப்பாக நடக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த சந்தேகம் தீரும். பேச்சில் தெளிவு பிறக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தைப் பார்ப்பதால், கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு கூடும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். அலுவலகத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பார்ப்பதால், பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை இனி விரைந்து முடிப்பீர்கள். கட்டிட அனுமதி, வங்கிக் கடனுதவி என அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் நடத்துவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தன - லாபாதிபதியுமான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் குடும்பத்தில் அமைதி திரும்பும். செல்வாக்கு கூடும். திடீர் பண வரவும் உண்டு.

உங்கள் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனிபகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் காரியத் தடைகள் விலகும். புதிய பதவிகள் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.

பூர்வ புண்ய - அஷ்டமாதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சொந்த பந்தங்களின் வருகை அதிகரிக்கும். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குருபகவான் செல்வதால் விஐபிகளால் ஆதாயமுண்டு. அரசு காரியங்கள் முழுமையடையும். வழக்குகளில் வெற்றியுண்டு. வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

வியாபாரம், உத்தியோகம்: வியாபாரத்தில், போட்டியாளர்களை சமாளித்து லாபமீட்டுவீர்கள். மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு பெரிய முதலீடுகளைப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நவீன சலுகைகளை அறிவிப்பீர்கள். வியாபார சங்க பொறுப்புகள் தேடி வரும். மருந்து, எண்டர்பிரைஸ், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.

உத்தியோகத்தில் நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் தேடி வரும். வேலை அதிகரிக்கத்தான் செய்யும், கவலை வேண்டாம். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்துவிடும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. கணினித் துறையினருக்கு பெரிய சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தூக்கமின்மை, சளித் தொந்தரவு வரக்கூடும். கலைஞர்கள் மூத்த கலைஞர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்த குருப்பெயர்ச்சி கடும் முயற்சியால் இலக்கை எட்டும் காலமாக அமையும்.

குரு பகவான் பரிகார தலங்கள்: கோவில் பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள கழுகுமலை வெட்டுவான் கோயிலில் மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். காது கேளாதோருக்கு உதவுங்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT