விழிகள் இல்லையென்றால் பார்வையில்லை, வலிகள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து வலிகளை வழிகளாக மாற்றி போராடும் கன்னி ராசிக்காரர்களே!
குரு பகவான், ஜூன் 02 முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார். இதுவரையிலும் ‘என்னடா இது வாழ்க்கை' என ஒருவித வெறுமையும், அலைச்சலையும் கொடுத்து வந்த குருபகவான், இப்போது லாபஸ்தானத்தில் வந்து அமர்வதால், தொட்டது துலங்கும். நம்மால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். குடும்ப வருமானம் உயரும். அதிக வட்டிக் கடனை இனி பைசல் செய்வீர்கள். எதிர்காலத்துக் காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பேச்சில் முதிர்ச்சி தெரியும். மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலேயே வரன் அமையும்.
வெளியிடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சகோதர, சகோதரிகள் வகையில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். அவர்களால் ஆதாயம் உண்டு. பார்த்தும் பார்க்காதது போல், விலகிச்சென்ற சொந்த பந்தங்கள் எல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்:
உங்களின் 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், தடைகள் விலகும். முகப்பொலிவு கூடும். வீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்கும். இளைய சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். உங்களின் முன்னேற்றம் பலரையும் வியக்க வைக்கும்.
குரு பகவான் ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளுக்குத் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் சிறப்பாக முடியும். தந்தைவழிச் சொத்துகளைக் கேட்டு வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக அமையும். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுக - சப்தமாதிபதியுமான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் மனப் போராட்டம் ஓயும். வீடு கட்ட வங்கி லோன் கிடைக்கும். சிலர் வீடு மாறுவீர்கள்.
யோகாதிபதியான சனிபகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குருபகவான் பயணம் செய்வதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
உங்களின் ராசிநாதனான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குருபகவான் செல்வதால் பிரபலங்களின் உதவி கிடைக்கும்.
வியாபாரத்தில், புது புது சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை பெருக்குவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து புதிய முதலீடுகள் செய்வீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, இரும்பு, புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் உண்டு. கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடனான மனத்தாங்கல் விலகும். வேலையாட்களின் ஆதரவு உண்டு.
உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்பு தேடி வரும். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். கணினி துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும். கலைத்துறையினருக்கு பரிசு கிடைக்கும். இந்த குருப் பெயர்ச்சி புது சிந்தனையால் இலக்கை எட்டும் காலமாக அமையும்.
குரு பகவான் பரிகார தலங்கள்:
திருவையாறில் இருந்து மேற்கு திசையில் 15 கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். கோயில் அன்னதானப் பணிக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். எல்லாவகையிலும் வெற்றியே தேடி வரும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.