சிறப்பு பலன்கள்

மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு 2026 எப்படி? | புத்தாண்டு பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - பஞசம ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என வலம் வருகிறார்கள்.

பலன்கள்: வழக்காடுவதில் வல்லவரான மகர ராசி அன்பர்களே நீங்கள் சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு உங்களுடைய கவுரவத்திற்கு ஊறு நேராது. அன்றாடப் பணிகளில் தொய்வு உண்டாகாது. கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதனால் பயனும் உண்டாகும். நண்பர்களிடமோ. தொழில் சம்பந்தப்பட்ட வகையிலோ, வியாபார ரீதியாகவோ யாரிடமும் தகராறு வரும்படி நடந்து கொள்ளாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

பொருளாதார நிலை பாதிக்கப்படாது. கணவன் - மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏற்படும் தொல்லைகளில் ஒரு கட்டுப்பாடு இருக்க இடமுண்டு. பொதுவாக நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. குறிப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாதபடி நிலைமை உருவாகலாம். எச்சரிக்கை.

உத்தியோகத்தில் மேன்மையுண்டாகும். பணக் கஷ்டம் இருக்காது. முதலாளி - தொழிலாளி உறவு பாதிக்கப்படாமல் காப்பதில் இரு சாராருக்குமே பொறுப்புள்ள – நேரம் இது. உத்தியோக மேன்மையுண்டு. பதவி உயர்வு கிடைக்கும். தேவையான இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.

தொழிலில் அபிவிருத்திகள் படிப்படியாக ஏற்படும். வியாபாரத்திற்காக புதிய இடம் வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. மகசூல் அதிகரிக்கும். இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டாகலாம். பொருளாதார் சிக்கல் வராது. தொழில் அபிவிருத்திகள் பாதிக்கப்படாது. மக்கள் சுபிட்சம் சீராக இருக்கும். கட்சிப் பணிகளில் கல சுறுப்பு ஏற்படும். பேசும் வார்த்தையில் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கலைத்துறைப் பணிகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். தொழில் சிறப்படையும். பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படாது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இசை, எழுத்து ஆகிய துறைகளில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர்.

பெண்களின் பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப அமைதி கெடாது. வேலை செய்யும் பெண்களுக்கு மேன்மை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு பணிகள் சுமாரான நிலையில் நடைபெறும். சில நன்மைகள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதை. உள்ளக் கோளாறு போன்ற குறைகள் நிவர்த்தியாக வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரியம் ஏதேனும் நடக்கலாம்.

மாணவர்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். நலம் விளையும். கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெறுவர். மருத்துவம், மேனேஜ்மெண்ட் துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு செல்வ நிலையில் எச்சரிக்கையோடு இருந்தால் எதையும் பறிபோகாமல் காத்துக்கொள்ளலாம். மிகுந்த உழைப்பு இருக்கும். வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. கலைத்துறையில் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படாது. குடும்ப நலம் உண்டு. அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள். நற்பணிகளில் ஈடுபடுங்கள். பேசும்போது அளந்து பேசினால் தொல்லை இல்லை. பெரியோர் ஆசியை விரும்பிப் பெற்றால் பல விஷயங்களில் இழிவு உண்டாகாது தப்பிக்கலாம்.

திருவோணம்: இந்த ஆண்டு பொதுவாகச் சோதனை உண்டு. குடும்ப நலம் பாதிக்கப்படலாம். அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உண்டு. பெரியோர் மன வருத்தம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைப்படாது. எந்த விதமான இடரையும் சமாளிப்பதோடு, கவுரவக் குறை உண்டாகாத படியும் காக்கப்படுவீர்கள். கவலை வேண்டாம். விவசாயிகளுக்கு ஏற்றம் ஏற்படும். குடும்ப நலம் சீராக இருக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு அன்றாடப் பணிகள் செவ்வனே நடக்கும். ஆனால் மிகுந்த முயற்சியின் பேரிலேயே ஒவ்வொரு காரியத்தையும் முடிக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்குச் சங்கடம் வராது. விவசாயிகளுக்கு ஏற்றம் உண்டு. கொடுக்கல்-வாங்கலில் அகலக்கால் வைக்க இது உகந்த நேரம் இல்லை. வீடு, நிலம் போன்றவற்றில் தகராறு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளுங்கள். பயன் தரும். கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப நலம் சீராக இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு | செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, நாமக்கல், திருநள்ளாறு | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸம் ஸ்ரீசனீச்வராய நம:” |

இந்த ஆண்டு மகர ராசிக்கான கிரகங்களின் நிலை

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞசம ஸ்தானத்தில் குரு(வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என வலம் வருகிறார்கள்.

பலன்கள்: எந்த கடினமான வேலைகளையும் உழைப்பின் மூலமாக செய்து முடிக்கும் திறன் கொண்ட கும்ப ராசி அன்பர்களே நீங்கள் சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு பொதுவாகத் தீமைகள் இருக்குமானாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது. சில நன்மைகள் சிறப்பாக உண்டாக வாய்ப்புண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்ப நலம் பாதிக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. ஆனால் நன்மைகள் சற்றுத் தூக்கலாகவே நடக்க வாய்ப்புண்டு.

பொருளாதார நிலையில் சரிவு ஏற்படாது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். உங்களுடைய கவுரவம் பாதிக்கப்படாமல் இருக்க இடமுண்டு. நல்லோர் ஆசியை விரும்பிப் பெறுங்கள். அன்றாடப் பணிகளுச்குக் இடையூறு இருக்காது. ஏற்படும் கஷ்டங்கள் சற்று மட்டுப்பட வாய்ப்புண்டு. பெரியோர் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய சௌகரியமான வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் கெடுபிடி இருக்கலாம். மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அவசியம் இருந்தாலன்றிப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். நன்மைகள் மிகுதியாக நடக்க வாய்ப்புண்டு. அவ்வப்போது சில தொல்லைகள் தவிர்க்க முடியாமல் போகும்.

வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரும். தொழிலில் சிறு சிக்கல் ஏற்படலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வீண் செலவுகள் உண்டாகலாம். பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள் அடக்கமாக நடந்து கொண்டு அவப்பெயர் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பெரியோர் நல்லாசியைப் பெற்று வந்தால் நலம் விளையும். உடல் நலனில் அக்கறை இருக்கட்டும். முன்கோபம் காரணமாக சில நல்ல சந்தர்ப்பங்கள் பாழாகி விடுமாதலால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய கவுரவம் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு குடும்ப நலம், தாம்பதியம் எல்லாம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் சிறிதளவு பயனும் ஏற்படலாம். பொருளாதார நிலையில் தான் அவ்வப்போது இக்கட்டு உண்டாகும். காரியங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் ஏற்படும்.

மாணவர்களுக்கு மதிப்பு கிட்டும். பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற இனங்களில் புதிய முயற்சி வேண்டாம். எனினும் உங்களுக்கான பாராட்டுகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சித்த சுத்தியோடு செய்யப்படும் நற்காரியங்களினால் பலன் ஏற்படும். புகழும் உண்டாகும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு உங்கள் பணிகள் பாதிக்கப்படாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் வீண் தொல்லைகளைத் தடுக்கலாம். தொழில் பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. தொழில் சிறக்கும். வியாபாரம் செழிக்கும். உங்களை வாழ வைக்கும் பொறுப்பை உங்களைச் சார்ந்த பெரியோர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். குடும்ப நலம், தாம்பத்தியம் எல்லாம் சீராக இருக்கும். தகுதி வாய்ந்தவர்களுகளுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம்.

சதயம்: இந்த ஆண்டு உங்களுக்கு தொழில் சிறப்படையும். முதலாளி தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண்டாகலாம். எனினும் மனம் தளர வேண்டாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமானாலும் அதற்காக மிகுந்த உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படலாம். எனினும் குடும்ப நலம் பாதிக்கப்படாது. விருந்தினர் வருகையும், விருந்தினராகச் செல்லக்கூடிய நிலையும் உண்டு. புத்திரர்களை முன்னிட்டுப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்படலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு பெருந்தொல்லை உண்டாக இட மில்லை. மனதிற்கு இனிமை தரும் சில நன்மைகள் நடக்கும். உங்களுடைய அந்தஸ்து பாதிக்கப்படாது. முழு முயற்சியுடன் செய்யப்படும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் அவ்வளவு சௌகரியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை. தொழிலில் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் தடைப்படாது. கலைத் துறைப் பணிகள் சிறப்படையும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். அரசியல்வாதிகள் கவுரவிக்கப்படுவார்கள். ஆன்றோர் நல்லாசி கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும் | சிறப்பு பரிகாரம்: நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும் | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: திருநள்ளாறு, கும்பகோணம், திருத்தணி | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸம் ஸ்ரீசனீச்வராய நம:”.

இந்த ஆண்டு கும்ப ராசிக்கான கிரகங்களின் நிலை

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள்.

பலன்கள்: அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என எண்ணும் ராசி அன்பர்களே நீங்கள் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் தீவிரம் ஏற்படுமானாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

குடும்ப நலம் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். பொதுவாக அந்தஸ்துக்கு ஊறு நேராது. முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகள் சரிவர நடக்கத் தடையில்லை. பொருளாதார நிலையில் சரிவும் உண்டு; சமாளிக்கக்கூடிய நிலையும் உண்டு. பல அரிய காரியங்களைச் செய்து பயனடையக்கூடிய வாய்ப்பும் உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதனால் வேலைச் சூழல் நிம்மதியானதாக அமையும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இருக்கும். சக தொழிளாலர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். உயர் அதிகாரிகளும் உங்களிடம் நெருக்கத்துடன் பழகி உங்களை பாராட்டுவார்கள்.

தொழிலில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள். விவசாயிகளுக்குத் திருப்தியான சூழ்நிலை அமையும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார நிலையில் கணிசமான வளர்ச்சியை நிச்சயம் காணலாம். தொழில் சிறப்படையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரக்கூடிய நல்ல நேரம் இது.

அரசியல்வாதிகள் தங்களுடைய வாழ்வு மேலும் மேலும் சிறப்படைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். கட்சித் தலைமை உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கும். அதை சிரத்தையுடன் செய்தால் உங்களுக்கான அங்கீகாரம் கட்சியில் கிடைக்க வாய்ப்புண்டு.

கலைத்துறை பணிகள் சரிவர நடக்கும். பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம் இது. நலம் பெருக வாய்ப்புண்டு. தொழில் சிறக்கும். உங்களை மிகவும் உயர்வான நிலைக்குக் கொண்டு செல்ல இந்த காலகட்டம் உதவும். கவுரவம் சிறப்பாக அமையும். புகழ், பொருள், எல்லாம் பெருகக் கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். தரும காரியங்களில் ஈடுபட்டு வந்தால் நலம் பெருகும். மனநலம், குடும்பநலம் அதிகமாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். தேவையான பணம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சிலருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொறியியல் துறையில் சாதனை புரியலாம். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் புகழ் பெறுவார்கள். கணிதத்துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த ஆண்டு குடும் நலம், மனநலம் இரண்டுமே சீராக அமையும். தகுதி வாய்ந்த அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இடமுண்டு. கலைத்துறை பணிகள் சிறப்படையும். குடும்ப நலம் பெருகும். ஏழைகளுக்கு உதவுங்கள், தெய்வப் பணிகளில் ஈடுபடுங்கள். கணிதத்துறை வல்லுநர்கள், மருத்துவத் துறை மேலோர்கள், விவசாயத்துறை விற்பனர்கள், வியாபாரத் துறை சமர்த்தர்கள் அனைவரும் பாராட்டு பெற வாய்ப்பு பெறுவீர்கள்.

உத்திரட்டாதி: இந்த ஆண்டு எல்லாம் விருத்தியாகும். தொழில் சிறப்படையும். முதலாளி - தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். பண வரவு சீராக அமையும். வெளிப்படையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். மற்றவர்கள் பாராட்டத்தக்க வகையில் உங்கள் வேலை அமைந்திருக்கும். வீரியமுடன் காரியங்ளைச் செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரேவதி: இந்த ஆண்டு வீடு, மனை வாங்குவதில் இருந்த பிரச்சனைகள் சரியாகி புது வீடு கட்டுவீர்கள். பணப் பிரச்சனைகள் தீர்ந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் திறமைகள் பல வழிகளிலும் வெளிப்படும். உங்கள் வேலை நுணுக்கத்தை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி சந்தோஷமான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகில் இருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும் | சிறப்பு பரிகாரம்: முன்னோர்களையும், குல தெய்வத்தையும் தினமும் வணங்கவும் | அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு | செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், ஆலங்குடி, மதுரை, ராமேஸ்வரம் | சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் கம் ஸ்ரீகுருவே நம:”.

இந்த ஆண்டு மீன ராசிக்கான கிரகங்களின் நிலை

SCROLL FOR NEXT