சிறப்பு பலன்கள்

துலாம் ராசியினருக்கான 2026 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

முனைவர் கே.பி.வித்யாதரன்

சீர்திருத்தச் சிந்தனையும், தவறுகளை தட்டிக் கேட்கும் தைரியமும் கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். சிலருக்கு சொந்த வீடு வாங்கும் கனவு பலிக்கும். விஐபிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தம்பதிக்குள் வீண் சந்தேகம் வேண்டாம். மகளின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். யாரிடமும் குடும்ப ரகசியங்களை பேசிக் கொண்டிருக்காதீர்கள்.

1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனம் வாங்குவீர்கள். திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 10-ம் வீட்டுக்கு செல்வதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாகும். இடமாற்றம் உண்டு. சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் எழாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு லாப வீட்டுக்கு செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். தம்பதிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

1.3.2026 முதல் 25.3.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால், நெஞ்சு எரிச்சல், வாயுக் கோளாறு, செரிமானப் பிரச்சினை வரக்கூடும். வறுத்த, பொரித்த உணவுகளை அறவே ஒதுக்குங்கள். 20.6.2026 முதல் 2.8.2026 வரை 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால், குடும்பத்தில் கருத்து மோதல் வரும். பண விஷயத்தில் கவனம் தேவை.

இந்த வருடம் முழுவதும் சனிபகவான் 6-ம் வீட்டில் நிற்பதால் அந்நிய நண்பர்களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். இழுபறியான அரசு வேலைகள் முடியும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உங்கள் தலைமையில் நடக்கும்.

டிச.4-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப வீட்டில் கேது நிற்பதால் வருமானம் உயரும். விஐபிகளின் நட்பு கிடைக்கும். புது சொத்து வாங்குவீர்கள். 5-ம் வீட்டில் ராகு நிற்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

டிச.5-ம் தேதி முதல் கேது 10-ம் வீட்டுக்கு வருவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். நவீன இடவசதி உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். ராகு 4-ம் வீட்டுக்கு வருவதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. அடிக்கடி கோபப்படாதீர்கள்.

இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்கும். கணவர் அன்பாக நடந்து கொள்வார். சின்னச் சின்ன பனிப்போர் வந்து போகத்தான் செய்யும். கவலையை விடுங்கள். கன்னிப் பெண்களுக்கு தடைகள் உடைபடும். முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனையை கேளுங்கள். கல்யாணம் கூடி வரும். விரும்பிய மணமகன் அமைவார். மாணவ- மாணவிகள் விளையாட்டை குறைத்து படிப்பில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம். வகுப்பாசிரியரின் ஆதரவு உண்டு.

வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் எளிதில் வசூலாகும். ஜூன் மாதம் முதல் குரு 10-ல் வருவதால் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதுர்யமான பேச்சால் லாபமீட்டுவீர்கள். சிலர் கடை அல்லது குடோனை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் வரும். உணவு, தானிய வகைகள், கமிஷன், புரோக்கரேஜ், கெமிக்கல் வகைகளால் நல்ல லாபம் பார்ப்பீர்கள். கூட்டுத் தொழிலை தவிர்த்து விடுவது நல்லது. அப்படி செய்வதாக இருந்தால், நல்ல பங்குதாரரைத் தேர்ந்தெடுத்து செயல்படவும்.

உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் அவ்வப் போது வாக்குவாதங்கள் வரக்கூடும். வேலைகளை முடிப்பதில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர் களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத இடத்துக்கு திடீரென மாற்றல் வரும். கணினி துறையினர், அவ்வப்போது தூக்கத்தை தொலைத்து பணி செய்ய வேண்டி வரும்.

கலைத்துறையினருக்கு பெரிய நிறுவனங்களிட மிருந்து வாய்ப்புகள் தேடி வரும். அதேசமயம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நன்கு படித்து பார்த்து கையெழுத்திடுவது நல்லது. எச்சரிக்கையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, வரும் வாய்ப்பை தவற விட்டுவிட வேண்டாம். சிலருக்கு பெரிய நடிகரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டும்.

மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, திறம்பட செயல்பட்டு இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: விருத்தாசலத்திலிருந்து 24 கிமீ தொலைவில் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக சுவாமியை ஏதாவது ஒரு சனிக்கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். நிம்மதி பெருகும். வாழ்வில் வசந்தம் வீசும்.

SCROLL FOR NEXT