சென்னை மியூசிக் அகாடமி நூற்றாண்டை நோக்கி பயணிக்கிறது. இங்கு தற்போது நடைபெற்று வரும் 99-வது இசைவிழாவில் 80-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதரின் 250-வது ஜெயந்தியை முன்னிட்டு, காலை நேர கருத்தரங்குகளில் அவர் தொடர்பான க்ருதிகளே கருப்பொருளாக இருக்கும்.
இசைவிழாவின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வாணி ராமமூர்த்தியின் இசை நிகழ்ச்சி மியூசிக் அகாடமியின் டி.டி.கிருஷ்ணமாச்சாரி அரங்கில் நடைபெற்றது.
சிறுவயது முதல் பத்மா குட்டியிடம் இசை பயிலத் தொடங்கிய வாணி ராமமூர்த்தி, தற்போது ரஞ்சனி - காயத்ரி சகோதரிகளிடம் இசை பயின்று வருகிறார். அமெரிக்காவில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகிறார். கச்சேரியில் அவருக்கு பக்கபலமாக ஸ்ரேயா தேவ்நாத் (வயலின்), கார்த்திக் கணேஷ்ராமன் (மிருதங்கம்), பரத்வாஜ் ஆர்.சதவள்ளி (மோர்சிங்) இருந்தனர்.
‘சரஸிருஹானனா’ எனத் தொடங்கும் முகாரி ராக தியாகராஜ கீர்த்தனையுடன் கச்சேரியைத் தொடங்கினார் வாணி ராமமூர்த்தி. இந்தக் கீர்த்தனையில் தாமரை போன்ற முகத்தைக் கொண்டவராகவும், இன்னல்களில் இருந்து பக்தர்களைக் காத்தருள்பவராகவும் ராமபிரான் போற்றப்படுகிறார்.
அடுத்ததாக, முத்துசுவாமி தீட்சிதரின் துவிஜாவந்தி ராகத்தில் அமைந்த ‘சேத ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ என்ற க்ருதியைப் பாடினார். பிரதான ராகமாக கல்யாணி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, கோபாலகிருஷ்ண பாரதியின் ‘நான் கண்டேன் கலி தீர்ந்தேன்’ என்ற பாடலைத் தொடங்கினார்.
‘நின்றேன் சந்நிதி அருகில் நிர்மலாம்ருதம் உண்டேன்’ என்ற வரியில் நிரவல் செய்து, அதற்கு ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார்.
கார்த்திக் கணேஷ்ராமன், பரத்வாஜ் ஆர்.சதவள்ளி இருவரும் தனி ஆவர்த்தனத்தில் தங்கள் மிருதுவான வாசிப்பில் கச்சேரிக்கு அழகு சேர்த்தனர்.
வசந்த பைரவியில் அமைந்த ராகம் தானம் பல்லவி, கச்சேரிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
கண்ட ஜாதி திரிபுட தாளத்தில் விஷால் சாபுரா அமைத்த ‘காவபோ நாபை நீ தயராதா அஸமான தெய்வமா’ என்ற பல்லவி சிறந்த முறையில் கையாளப்பட்டது.
ராகம், தானம் ஆகியவற்றில் ஸ்ரேயா தேவ்நாத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சதாசிவ பிரம்மேந்திரரின் ‘சர்வம் பிரம்ம மயம்’ (மதுவந்தி ராகம்), அருணகிரிநாதர் திருப்புகழுடன் (முத்தைத்தரு) கச்சேரியை நிறைவு செய்தார் வாணி ராமமூர்த்தி.