ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிறு கதைகள் இன்றைய காலகட்டத்துக்குப் பொருந்துமா? இதற்குப் பதில் அளிக்கும் வகையில் எழுத்தாளர் சிவசங்கரியின் 6 சிறுகதைகளுக்கு நாடக வடிவம் தந்திருக்கிறது தாரிணி கோமலின் ‘கோமல் தியேட்டர்’.
கடந்த மாதம் இதன் அரங்கேற்றம் நடந்தது. 2-வது முறையாக மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் நேற்று முன்தினம் இப்படைப்பு மேடையேற்றப்பட்டது. கோமல் தியேட்டர், சிவசங்கரி குறித்த விளக்கக் காணொலிக்குப் பிறகு நாடகம் தொடங்கியது. ‘படைப்பாளிகளைப் போற்றுவோம்’ என்ற கருத்தில், தமிழ் எழுத்தாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நாடகங்களின் தொடர்ச்சியாக இதன் உள்ளடக்கம் அமைந்திருந்தது. சிவசங்கரியின் ‘கழுதை தேய்ந்து’, ‘தலைவர் வருகிறார்’, ‘சண்டை’, ‘தெய்வம் நின்று கொல்லும்’, ‘ஆயா’, ‘தெப்பக்குளம்’ ஆகிய சிறுகதைகள் நாடக வடிவம் பெற்றிருந்தன.
‘தனக்குப் போகத்தான் தானம்’ என்ற சிந்தனையின் பரவல், அரசியல் தலைவரின் வருகையால் ஏற்படும் மாற்றம், தம்பதியின் புரிதலைப் பதம் பார்க்கும் அரட்டை, பெண்களைப் போகப் பொருளாக நினைப்பதன் எதிர்வினை, பிரிந்த உறவைத் தேடும் ஏக்கம் ஆகியவையே இந்த நாடகங்களில் பிரதானக் கருப்பொருள்.
ஐந்தாவதாக வந்த ‘ஆயா' காதல் திருமணம் செய்துகொண்ட மகனின் அழைப்பின்பேரில் பெருநகரத்துக்குச் செல்லும் ஒரு கிராமத்துத் தாயின் அனுபவங்களைச் சொன்னது. மையப் பாத்திரத்தில் நடித்த நாஞ்சில் ரேவதி தன் கண்களில் நீரைப் பெருக்கி, ரசிகர்கள் அதைப் பிரதிபலிக்குமாறு செய்ததுதான் இதற்கு காரணம்.
‘மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே’ என்று தாய் தாலாட்டுப் பாடுகையில் ‘என்னம்மா பாட்டு இது’ என்று அவரது மகன் வேண்டா வெறுப்பாய்க் கேட்க, ‘இப்படிப் பாடித்தான் குழந்தைகளை காலம்காலமாக தூங்க வைக்கிறார்கள்’ என்று அவர் பதில் அளிக்கும் காட்சி அரங்கை சிரிப்பில் ஆழ்த்தியது.
காட்சிப் பின்னணியைச் சொல்ல, திரைச்சீலைகளுக்குப் பதிலாக எல்இடி திரைகள். அவற்றில் ‘ஏஐ’ நுட்பத்திலான அசைவுகள் ‘கடிகாரச் சுழற்சி’யில் மீண்டும் மீண்டும் வந்து போயின. கதையின் தன்மைக்கேற்றபடி, ‘கமர்ஷியல் சினிமா’வின் காட்சிகளுக்கு இசையமைப்பதுபோன்று காட்சிகளின்போதும் இடையிலும் இசையை நிறைந்திருப்பது நம் கவனத்தை வேறுபக்கம் திருப்ப அனுமதிக்கவில்லை. சில சந்தர்ப்பங்களில், தொண்ணூறுகளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நாடகங்களின் மீளாக்கம் போலவே இந்த நாடகங்கள் தோற்றமளித்தன.
சிவசங்கரியின் வாசகர்களை வசப்படுத்தும் இதன் உள்ளடக்கமே, அவருக்கு மரியாதை செலுத்தும் அரங்காக அவ்விடத்தை மாற்றியிருந்தது.