சென்னை: மியூசிக் அகாடமியின் இசைவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள், இசைக் கலைஞர்கள் சென்னை வருவார்கள். அதனால் இசைவிழாவின்போது மியூசிக் அகாடமி விழாக்கோலம் பூண்டு விடுகிறது.
சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசை விழாவில் விதூஷி காயத்ரி வெங்கடராகவனின் கச்சேரி நடைபெற்றது. அவருக்கு பக்கபலமாக மைசூர் ஸ்ரீகாந்த் (வயலின்), ஆர்.சங்கரநாராயணன் (மிருதங்கம்), உடுப்பி எஸ்.ஸ்ரீகாந்த் (கஞ்சிரா) இருந்தனர்.
‘ஸ்ரீமகா கணபதி ரவதுமாம்’ என்ற கௌளை ராக முத்து சுவாமி தீட்சிதரின் க்ருதியுடன் கச்சேரியைத் தொடங்கினார் காயத்ரி வெங்கடராகவன். அடுத்ததாக ‘ஸ்ரீ வைத்யநாதம் பஜாமி’ என்ற முத்துசுவாமி தீட்சிதரின் அடாணா ராக க்ருதியைப் பாடினார்.
ஹம்சநாதம் ராகத்தில் சிறிய ஆலாபனைக்குப் பிறகு, தியாகராஜ சுவாமியின் பிரபலமான ‘பண்டுரீதி கோலு’ கீர்த்தனையைப் பாடினார். ‘ராம நாம மனே’ என்ற வரியில் நிரவல் செய்து ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார்.
‘உன் சந்நிதியைக் காவல் காக்கும் பணியைக் கொடு’ என்று இந்த கீர்த்தனையில் ஸ்ரீராமபிரானிடம் விண்ணப்பிக்கிறார் தியாகராஜர். அதன்மூலம் காமக்ரோதம், லோபமோகம், மதமாச்சரியம் ஆகியவற்றை அழிக்கும் ஆற்றலை தருமாறும் வேண்டுகிறார்.
இந்த கீர்த்தனையை அடுத்து, முத்துசுவாமி தீட்சிதரின் ஆனந்த பைரவி ராக க்ருதியை (தியாகராஜ யோக வைபவம்) பாடினார் காயத்ரி. இந்த க்ருதியில் கோபுச்ச யதி பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இது, பசுவின் வாலைப் போல தொடக்கத்தில் அகலமாகவும், போகப் போக குறுகி முடிவடையும் ஓர் அமைப்பாகும். (தியாகராஜ யோக வைபவம் ராஜ யோக வைபவம் - யோக வைபவம் - வைபவம் - பவம்) கச்சேரியின் பிரதான ராகமாக மத்யமாவதி அமைந்தது.
விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, முத்துசுவாமி தீட்சிதரின் ‘தர்மசம்வர்த்தனி’ எனத் தொடங்கும் க்ருதியைப் பாடினார். ‘மாதவ சோதரி சுந்தரி மத்யமாவதி சங்கரி’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார்.
தனி ஆவர்த்தனத்தில் சங்கரநாராயணனுக்கும், உடுப்பி ஸ்ரீகாந்துக்கும் இடையே இருந்த ஆரோக்கியமான போட்டி, ரசிகர்களைக் கவர்ந்தது. முத்துத் தாண்டவரின் சாவேரி ராகப் பாடலை (அய்யனே நடனம் ஆடி) பாடிவிட்டு, சங்கராபரணம் ராகம் தானம் பல்லவிக்கு சென்றார் காயத்ரி.
உடுப்பி மகேஷ் பட்டின், ‘அட்சயலிங்க கங்கோத்தமாங்க சதயாந்த ரங்க குரு சங்கராபரண புஜங்க’ என்ற பல்லவியை மிஸ்ர ஜாதி திரிபுட தாளத்தில் சதுஸ்ர நடையில் பாடினார். ராக ஆலாபனைகளிலும், ராகம் தானம் பல்லவியிலும் வயலினில் மைசூர் ஸ்ரீகாந்த் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார்.
புரந்தரதாஸரின் ‘யாதவ தீப யதுகுல நந்தன’ தேவர் நாமா, சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டு வணக்கப் பாடல் ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ ஆகியவற்றைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார் காயத்ரி வெங்கடராகவன். விதூஷி பத்மா வீரராகவன், வித்வான் ஏ.சுந்தரேசன், வித்வான் பி.எஸ்.நாராயணசுவாமி ஆகியோரிடம் இசை பயின்ற காயத்ரி வெங்கடராகவன், தற்போது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் செய்து வருகிறார்.