இதோ பிடிஎஸ் (BTS) குழுவின் ஐந்தாவது இசை ஆல்பமான ‘ஆரிராங்’ (Arirang) வெளியாகி இருக்கிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டு கால மவுனத்துக்குப் பிறகு, ஒரு முழுமையான குழுவாக, பிடிஎஸ்ஸின் ஏழு நட்சத்திரங்களும் இணைந்து மீண்டும் களமிறங்கிறார்கள். பிடிஎஸ் குழுவின் இந்த ‘கம்-பேக்’ வெறும் ஒரு பொழுதுபோக்கு இசையாக அல்லாமல் ‘ஆரிராங்’ என்று பெயரிடப்பட்டு ஒரு தீர்க்கமான கலாச்சாரப் பிரகடனமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
உலகளாவிய பாப் இசை இன்று தற்காலிகமான, எளிதில் மறக்கக்கூடிய கொண்டாட்டங்களை நோக்கி நகரும் இந்த வேளையில், பிடிஎஸ் கொரியாவின் ஆன்மாவில் ஆழமாகப் புதைந்துள்ள நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக, அவர்களின் பண்டைய காலத்து நாட்டுபுறப் பாடலான ‘ஆரிராங்’ என பெயரிட்டிருக்கின்றனர். இது அவர்களின் கலாசாரத்தையும் நவீன உலகையும் இணைக்கும் ஒரு துணிச்சலான பாலம்.
இது வெறும் ‘கம்-பேக்’ அல்ல; இது ஓர் இனத்தின் அடையாளம், அவர்களின் கலாச்சார நினைவுகளையும், கூட்டு நினைவுகளையும், வலி, சோகம், (collective memory) மற்றும் ஒரு கலை வடிவத்தை வரையறுக்கும் ஓர் அறிவிப்பு.
பிடிஎஸ்ஸின் ‘BTS: THE RETURN’ இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (மார்ச் 21) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி சியோலில் குவனங்கஹாமுன் சதுக்கம் பகுதியின் மையத்தில் நடைபெறுகிறது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளின் பிடிஎஸ் ஆர்மிகள் தென் கொரியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பிடிஎஸ் குழுவினர் தங்களது ரசிகர்களை நேரடியாக, ஒரே நேரத்தில், உலகம் முழுவதும் சேரும் டிஜிட்டல் மேடையில் சந்திக்கிறார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டியது, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்கள் நேரடி இசை நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது, திரைப்படம், டிவி, இசை ஆகியவற்றின் எல்லைகள் குறுகி வருவதை காட்டுகிறது. பிடிஎஸ் இந்த மாற்றத்தின் மையத்தில் உள்ளது. அவர்கள் கலாச்சாரங்களையும், ரசிகர்களையும் இணைக்கும் பாலமாக உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புதிய ‘ஆரிரங்க்’ ஆல்பத்திலிருந்து பாடல்களும், அவர்களின் முந்தைய ஹிட் ஆல்பங்களில் இருந்து பாடல்களும் இடம்பெறும்.
‘ஆரிராங்’ என்பது கொரியர்களுக்கு வெறும் பாடல் மட்டுமல்ல; அது அவர்களின் சுவாசத்தின் ஒரு பகுதி. இது கொரியாவின் அதிகாரபூர்வமற்ற தேசிய கீதமாக வர்ணிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகள், பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் எண்ணற்ற போர்களைக் கடந்து வந்த ஒரு நாட்டுப்புற மெட்டு இது. இந்த இசைக்கு ஏறக்குறைய 3,600 மாறுபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாறுபாடும் இடப்பெயர்வு, பிரிவு, ஏக்கம் மற்றும் மீண்டெழும் வலிமையால் செதுக்கப்பட்ட மக்களின் வரலாற்றைச் சுமந்து நிற்கிறது.
இதன் மையத்தில் ‘ஹான்’ (Han) என்ற தனித்துவமான கொரிய உணர்வு நிலை உள்ளது. உலக மொழிகளில் மொழிபெயர்க்க முடியாத சொற்களில் இதுவும் ஒன்று. ‘ஹான்’ என்பது வெறும் சோகம் அல்ல; அது தீர்க்க முடியாத அநீதியால் ஏற்படும் ஒரு கூட்டு வலி. ஆனால், அந்த வலி ஒருபோதும் ஒருவரை முடக்காது. மாறாக, அதைத் தாங்கிக்கொண்டு, உள்வாங்கி, வாழ்வதற்கு ஏதுவான ஒரு சக்தியாக மாற்றுவதே ‘ஹான்’.
கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டுத் திரும்பும் பிடிஎஸ் உறுப்பினர்களுக்கு, இந்த ‘ஆரிராங்’ மிகவும் ஆழமான உணர்வை தருகிறது. அவர்களின் இந்த இடைவெளி என்பது வெறும் தொழிலில் ஏற்பட்ட ஓர் இடைவெளி அல்ல; அது ஒரு பிரிவின் அனுபவம். ‘ஆரிராங்’ பாடலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அவர்கள் அந்தப் பிரிவை ஓர் இழப்பாகப் பார்க்காமல், ஒரு நீண்ட உணர்ச்சிப் பயணத்தின் அவசியமான ஒரு பகுதியாகக் காட்டுகிறார்கள்.
ஏழு குரல்கள்: விளிம்பிலிருந்து உச்சம் வரை
பிடிஎஸ் குழுவினர் எங்கிருந்து இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதைத் திரும்பிப் பார்ப்பது அவசியம். பிடிஎஸ் (BTS) என்பது ‘பாங்டான் சோன்யொண்டன்’ (Bangtan Sonyeondan) என்பதைக் குறிக்கும், இதன் பொருள் ‘துப்பாக்கி குண்டுகளைத் துளைக்க முடியாத சிறுவர்கள்’. சமூகம் இளைஞர்கள் மீது வீசும் பாரபட்சங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைத் தடுத்து நிறுத்துவதே அவர்களின் ஆரம்பகால பாடல்களின் நோக்கமாக இருந்தது.
இந்த ஏழு உறுப்பினர்களும் RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook தென்கொரியாவின் ‘பிக் 3’ எனப்படும் பெரும் நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. ஒரு சிறிய, கடன் சுமையில் இருந்த நிறுவனத்திலிருந்து தங்களின் பயணத்தைத் தொடங்கியவர்கள். ஆரம்ப காலங்களில் அவர்கள் சந்தித்த நிதி நெருக்கடி, ஊடகங்களின் புறக்கணிப்பு மற்றும் ஏளனமான விமர்சனங்கள் சாதாரணமானவை அல்ல. ஆனால், அந்த ‘விளிம்பு நிலை’ தான் அவர்களுக்கு மற்ற பாப் நட்சத்திரங்களிடம் இல்லாத ஒரு தனித்துவத்தையும், மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் திறனையும் வழங்கியது. அவர்களின் இன்றைய வளர்ச்சி தற்செயலானது அல்ல; அது பல ஆண்டுகாலத் தோல்விகளிலிருந்தும், விடாமுயற்சியிலிருந்தும் உருவான ஒரு வரலாறு.
பொருளாதாரம் ஈட்டும் இயந்திரமாக மாறிய கலை
பிடிஎஸ் இன்று வெறும் கலைக் குழு அல்ல; அவர்கள் தென்கொரியப் பொருளாதாரத்தின் ஒரு பெரும் தூணாக மாறியிருக்கிறார்கள். அவர்களின் தாக்கம் என்பது நேரடி இசை விற்பனையோடு நின்றுவிடுவதில்லை. ‘பிடிஎஸ் எஃபெக்ட்’ (BTS Effect) என்பது இன்று உலகப் பொருளாதார வல்லுநர்களால் ஆய்வு செய்யப்படுகிறது.
ஹூண்டாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, பிடிஎஸ் ஒவ்வோர் ஆண்டும் தென்கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகப் பங்களிக்கிறார்கள். இது தென்கொரியாவின் முன்னணி நிறுவனங்களான சாம்சங் அல்லது ஹூண்டாயின் ஒரு பகுதியின் பங்களிப்புக்கு இணையானது. அவர்களின் 2026 மீள்வருகை சுற்றுலாத் துறையில் மட்டும் 150% வளர்ச்சியைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரியா தனது ‘படைப்பாற்றல் பொருளாதாரத்தை’ (Creative Economy) ஒரு நீண்டகால தேசிய உத்தியாக வளர்த்தெடுத்தது. கலாச்சாரம் என்பது ஒரு நாட்டின் மென்மையான அதிகாரம் (Soft Power) என்பதை உணர்ந்து, கே-பாப், கே-டிராமா மற்றும் திரைப்படத் துறைகளை அரசு ஊக்குவித்தது. பிடிஎஸ் இந்த உத்தியின் மகுடமாகத் திகழ்கிறார்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் கொரிய மொழி கற்கப்படுகிறது, கொரிய உணவு வகைகள் தேடப்படுகின்றன, கொரிய அழகு சாதனப் பொருட்கள் உலகெங்கும் விற்கப்படுகின்றன. ஒரு கலைக் குழு ஒரு தேசத்தின் பிம்பத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதற்கு பிடிஎஸ் ஓர் உலகளாவிய முன்னுதாரணம்.
கலாச்சாரத்தின் புதிய தூதர்கள்
பிடிஎஸ் உறுப்பினர்களில் ஒருவரான ஆர்.எம் (RM), 2025 ஏபெக் (APEC) உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களிடையே பேசியபோது, கலைக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான புதிய உறவை முன்வைத்தார். அவர் கலாச்சாரத்தை ஓர் ‘உணர்ச்சிப் பாலம்’ என்று வருணித்தார். மொழி, எல்லைகள் அல்லது அரசியல் கருத்துகளால் பிரிக்கப்பட்ட மனிதர்களை இசை எவ்வாறு ஒரு புள்ளியில் இணைக்கிறது என்பதை அவர் விளக்கினார்.
அவர் தனது உரையில் ரசிகர்களை (ARMY) வெறும் நுகர்வோர்களாகப் பார்க்காமல், ஒரு கலாச்சாரச் சூழலை உருவாக்குபவர்களாக (Co-creators) அடையாளப்படுத்தினார்.
“கலைஞர்கள் விதைகளை விதைக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள்தான் அந்த மரத்தை வளர்த்துப் பூக்க வைக்கிறார்கள்!”- ஆர்.எம் உதிர்த்த இந்த வரிகள், நவீன காலத்தின் ஜனநாயகப்படுத்தப்பட்ட கலை வடிவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
‘ஸ்விம்’ (Swim) மற்றும் உலகளாவிய பாப் இசை
‘ஆரிராங்’ ஆல்பத்தின் முதல் பாடலான ‘ஸ்விம்’, உலகளாவிய ரசனைக்கேற்ப ஆங்கிலத்தில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது கேட்பதற்கு ஒரு மென்மையான நவீனப் பாடலாகத் தோன்றினாலும், அதன் ஆழத்தில் ‘ஆரிராங்’ பாடலின் ஆன்மா மறைந்திருக்கிறது.
இந்த ஆல்பத்துக்கான விளம்பரங்களில் 1896-ல் வாஷிங்டனில் பதிவு செய்யப்பட்ட கொரியாவின் முதல் ஒலிப்பதிவுகளை பிடிஎஸ் பயன்படுத்தியுள்ளனர். இது அவர்கள் தங்களின் வெற்றியை வரலாற்றின் வேர்களோடு இணைக்க விரும்புவதைக் காட்டுகிறது.
ஆரிராங் மற்றும் ஆராரோ
‘அரிராங்’ என்ற வார்த்தையை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா?
ஆம், நம் ‘ஆராரோ ஆரொராரோவே’ தான்.
இது ஒரு வெறும் தற்செயலான ஒற்றுமையா அல்லது மறைந்திருக்கும் வரலாற்று உண்மையா என்பது ஆய்வுக்குரியது.
கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகள் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகின்றன. கி.பி. 48-ல் அயுடா நாட்டிலிருந்து (பண்டைக்கால பாண்டிய தேசத்திலிருந்து எனச் சில ஆய்வாளர்கள் கருதும் ‘ஆயுத்யா’) இளவரசி சென்பவளம் (சுரிரத்னா) கடல் வழியாகக் கொரியா சென்று, அங்குள்ள மன்னர் கிம் சூ-ரோவை மணந்து ‘ஹியோ ஹ்வாங்-ஒக்’ (இந்த கொரிய வார்த்தையின் அர்த்தம் செம்பவளம் / சூரிரத்னா) என்ற அரசியாக மாறினார் என்ற கதை இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் பாலமாகும்.
ஆனால், இந்தக் கதைகளைத் தாண்டி, மொழியிலும் இசையிலும் உள்ள ஒற்றுமை நம்மை வியக்க வைக்கிறது. ‘ஆரிராங்’ பாடலின் மிக முக்கியமான அந்தப் பல்லவி:
“ஆரிராங், ஆரிராங், ஆராரியோ...”
இப்போது தமிழர்களின் இசை வடிவமான தாலாட்டை நினைத்துப் பாருங்கள்:
“ஆராராரோ, ஆராராரோ”.
நவீன அகராதிகளில் இந்தச் சொற்களுக்கு நேரடிப் பொருள் எதுவும் இல்லை. இவை ‘பொருள் தராத சொற்கள்’ (Nonsense syllables) என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவை சுமந்து நிற்கும் உணர்வு ஒன்றுதான். தமிழகத்தில் ஒரு தாய் தனது குழந்தையைத் தூங்க வைக்க ‘ஆராரிராரோ’ என்று பாடும்போது, அங்கே ஒரு பாதுகாப்பு உணர்வும், எல்லையற்ற அன்பும் வெளிப்படுகிறது. கொரியாவில் ஒரு பயணி ‘ஆரிராங்’ என்று பாடும்போது, அங்கே ஒரு பிரிவின் ஏக்கமும், அந்த ஏக்கத்தைத் தாங்கும் வலிமையும் வெளிப்படுகிறது.
உலகளாவிய தாலாட்டு
இந்த இரண்டு சொற்களும் மனித நாகரிகத்தின் பூர்விக ஒலிகள். மொழி முழுமையாகக் கட்டமைக்கப்படுவதற்கு முன்பே, மனிதன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்திய ஒலிகள் இவை. தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் இடையே ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் இருக்கலாம். ஆனால், ‘ஆரிராரோ’ என்ற அந்த ஒலியின் அதிர்வுகள் ஒன்றாகவே இருக்கிறது. இதுபோல் பல வார்த்தைகள் தமிழுக்கும் கொரியர்களும் பொதுவானதாகவே இருக்கிறது.
மொழியைத தாண்டி, பண்பாடு, இசை (நம்முடைய உறுமியும் யாழும் இன்றும் அங்கே உண்டு), உணவு என பல விஷயங்கள் ஒன்றுபோல் இருக்க, இதன் வேர்களை சரியான தொல்லியல் ஆராய்சிகள் மூலம் நிரூபிக்க ஆய்வலர்கள் முயல வேண்டும்.
பிடிஎஸ் தனது ஆல்பத்துக்கு ‘அரிராங்’ என்று பெயரிடுவதன் மூலம், அவர்கள் ஆழ்ந்த மனித உணர்வுகளை தொடுகிறார்கள். இது கொரியாவுக்கான இசை மட்டுமல்ல; இது பிரிவைச் சந்தித்த, வலியை அனுபவித்த, மீண்டும் இணையக் காத்திருக்கும் மனிதர்களுக்கான இசை என்று கூறலாம்.
ரசிகர்கள்: மாற்றத்தின் இயக்குநர்கள்
பிடிஎஸ் குழுவின் வெற்றியில் ரசிகர்களின் (ARMY) பங்கு எப்போதுமே தனித்துவமானது. அவர்கள் வெறும் இசை ரசிகர்களாக இல்லாமல், ஒரு சமூக இயக்கமாகச் செயல்படுகிறார்கள். பிடிஎஸ் குழுவின் பாடல்களில் உள்ள கருத்துகளைத் தேடித்தேடி மொழிபெயர்த்து உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது இவர்களே.
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பிடிஎஸ் ரசிகர்கள், கொரிய கலாச்சாரத்தை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல், தங்களின் சொந்தத் தமிழ் கலாச்சாரத்தோடு அதைப் பிணைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். BTS Merchandise Flagship Store BT21 இந்தியாவில் தொடங்கியது நம் சென்னையில் தான்.
மீண்டும் கேட்கும் அந்த ஆதி ஒலி
கலை என்பது எப்போதுமே ஒரு நாட்டின் கலாச்சாரத்தின் ஓர் உருவகம். பிடிஎஸ் தங்களின் உச்சகட்ட புகழில் இருக்கும்போது, தங்கள் நாட்டு கலாச்சாரத்தின் ஆன்மாவக இருக்கும் ‘ஆரிரங்க்’ என்ற பாடலுடன் மீண்டும் உலக மேடைக்கு திரும்பியது அவர்கள் இசை உலகில் அடைந்திருக்கும் முதிர்ச்சியைக் காட்டுகிறது. அவர்கள் ‘பாப் ஸ்டார்’களாக இல்லாமல் தங்களின் முன்னோர்களின் குரல்களை நவீன உலகுக்கு கொண்டு சேர்க்கும் கலாச்சாரத் தூதுவர்களாக தங்களை கருதுகின்றனர்.
உலகில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்... தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இசை இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால், இத்தனை மாற்றங்களுக்கு மத்தியிலும், மனித மனதின் அடிப்படைத் தேடல் ஒன்றுதான் - அது அன்பு மற்றும் பாதுகாப்பு.
அந்தத் தேடலைத் தான் ‘ஆரி-ராங் மற்றும் ‘ஆரி-ரா-ரோ’ ஒலிகள் பூர்த்தி செய்கின்றன. வேறுபட்ட நிலப்பரப்புகள், வேறுபட்ட வரலாறுகள், ஆனால் அந்த ஒலியில் உள்ள ஆன்மா ஒன்றுதான். பிடிஎஸ் அந்த ஆன்மாவை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கின்றனர். இப்போது உலகம் முழுவதும் அந்த வார்த்தையை முணுமுணுக்கிறது - உலக மக்கள் தங்களை அறியாமல் ஒரு பண்டைய தாலாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
‘ஆரி-ராங், ஆராரியோ...’
‘ஆரி-ரா-ரோ, ஆராரிராரோ...”
| எதிரொலிகள் தொடரும்... |