தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நேற்று முன்தினம் இரவு பாகவத மேளாவில் எண்ணெய் விளக்கு ஒளியில் நடைபெற்ற பிரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பாகவத மேளா நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. எண்ணெய் விளக்கு ஒளியில் விடிய விடிய நடைபெற்ற நாடகத்தை திரளானோர் கண்டு ரசித்தனர்.
மெலட்டூர் கிராமத்தில் நரசிம்ம ஜெயந்தி நாளில், பாகவத மேளா நாட்டிய நாடகம் தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நாட்டிய நாடகத்தில் இவ்வூரில் உள்ள ஆண்கள் மட்டுமே பங்கேற்று(பெண்கள் கதாபாத்திரத்திலும்) நடித்து வருகின்றனர்.
இவ்வூரை பூர்வீகமாக கொண்டு உலகெங்கிலும் வசிப்பவர்கள் நரசிம்ம ஜெயந்தி தினத்தில் ஒன்றுகூடி சுவாமி வழிபாடு மற்றும் நாடகத்தில் பங்கேற்பது வழக்கம். இவ்விழா சுமார் 500 ஆண்டுகளை கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டுக்கான பாகவத மேளா நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் காலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவாமிக்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. அன்று இரவு பாகவத மேளா நாட்டிய நாடகம் தொடங்கியது.
காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயத்தின் துணைவேந்தர் ஜி.சீனிவாசன் விழாவைத் தொடங்கி வைத்து, வெங்கடராம சாஸ்திரியின் துருவ சரித்திரம் நூலின் மறுபதிப்பை வெளியிட்டார். இதை குச்சிப்புடி கலைஞரும், திரைப்பட நடன இயக்குநருமான கே.வி.சத்யநாராயணா பெற்றுக்கொண்டார்.
விழாவில், இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் என்.வி.தேவி பிரசாத், பரதநாட்டியம் மற்றும் நாடகங்களில் சிறந்த பங்களிப்புக்காக பார்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளையின் மிக உயரிய வெங்கடராம சாஸ்திரி விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நடைபெற்ற பாகவத மேளா நாட்டிய நாடகம் தொடக்க விழாவில் வெங்கடராம சாஸ்திரியின் துருவ சரித்திரம் நூலின் மறுபதிப்பு வெளியீட்டில் பங்கேற்றோர்.
அதேபோல, மயிலை மகா பெரியவா அனுஷம் அறக்கட்டளையின் நிறுவனர் கணேச சர்மாவுக்கு பாகவத கைங்கர்ய சிரோன்மணி விருதும், மூத்த கலைஞர் ஆனந்த் சுப்ரமணியத்துக்கு பாரதம் விருதும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 62 ஆண்டுகளாக கலை வடிவத்துக்கு செய்த பங்களிப்புக்காக ஆந்திர அரசு சார்பில் சமீபத்தில் வழங்கப்பட்ட கலாரத்னா விருது பெற்ற பாகவத மேளா குரு ஆர்.மகாலிங்கம் கவுரவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் தஞ்சாவூர் மண்டல உதவி இயக்குநர் எம்.ராஜாராமன் மற்றும் கர்நாடகா சத்ய சாய் மனித மேன்மை பல்கலைக்கழகத்தின் நாத குருகுலம் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவுக்கு அறங்காவலர் கேவி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து பாரம்பரிய எண்ணெய் விளக்குகளின் திரி ஒளியிலும் பாரம்பரிய உடைகளிலும், பழமையான பிரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம் அரங்கேறியது.
லீலாவதி, ஹிரண்ய கசிபு மற்றும் பிரஹலாதன், நரசிம்மர் கதாபாத்திரங்களில் சிறுவர்கள் முதல் 87 வயது முதியவர் வரை பங்கேற்று விடிய விடிய நடைபெற்ற நாடகத்தில் நடித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளையினர் செய்திருந்தனர். தொடர்ந்து, மே 4-ம் தேதி வரை பல்வேறு நாடகங்கள் நடைபெறும்.
அன்று ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நேற்று முன்தினம் இரவு பாகவத மேளாவில் எண்ணெய் விளக்கு ஒளியில் நடைபெற்ற பிரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம்.
தஞ்சாவூர் அருகே மெலட்டூரில் நடைபெற்ற பாகவத மேளா நாட்டிய நாடகம் தொடக்க விழாவில் வெங்கடராம சாஸ்திரியின் துருவ சரித்திரம் நூலின் மறுபதிப்பு வெளியீட்டில் பங்கேற்றோர்.