கலை

சுசரித்ரா தாளத்தில் ஈர்த்த அம்ருதா வெங்கடேஷ் | சென்னை இசை அரங்கம்

கே.சுந்தரராமன்

சென்னை: மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில் விதூஷி அம்ருதா வெங்கடேஷின் கச்சேரி நடைபெற்றது. அவருக்கு பக்கபலமாக மும்பை ஆர்.மாதவன் (வயலின்), எஸ்.ஜே.அர்ஜுன் கணேஷ் (மிருதங்கம்), பையனூர் ஆர்.கோவிந்த பிரசாத் (மோர்சிங்) இருந்தனர்.

‘இந்த சௌகசேய’ எனத் தொடங்கும் மைசூர் சதாசிவ ராவின் பந்துவராளி வர்ணத்துடன் கச்சேரியைத் தொடங்கினார் அம்ருதா வெங்கடேஷ். அடுத்ததாக, கர்ப்பபுரிவாசரின் கௌரி மனோகரி ராகப் பாடலை (ப்ரோவ சமயமிதே ராமைய்யா) பாடினார்.

சாவேரி ராகத்தில் சிறிய ஆலாபனை செய்துவிட்டு, பெரியசாமி தூரனின் ‘முருகா முருகா’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். ‘அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ’ என்ற வரியில் நிரவல் செய்தார்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் நிரோஷ்டா ராகப் பாடலுக்கு (ராஜ ராஜ ராதிதே) பிறகு, பிரதான ராகமாக நாடகுறிஞ்சி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, ஸ்வாதி திருநாள் மகாராஜாவின் ‘ஜகதீச சதா மாமவ’ எனத் தொடங்கும் பாடலைப்பாடினார் அம்ருதா.

‘கஹவாகன சுரஷோக விபஞ்சன’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். தனி ஆவர்த்தனத்தில் அர்ஜுன் கணேஷும், கோவிந்த பிரசாத்தும், மிருதுவான கோர்வைகளைக் கொண்டு கச்சேரிக்கு அணி சேர்த்தனர்.

ராகம் தானம் பல்லவிக்கு சுசரித்ரா ராகத்தை தேர்ந்தெடுத்தார் அம்ருதா. இசை மேதை எம்.பாலமுரளி கிருஷ்ணாவின் சுசரித்ரா ராகப் பாடலின் பல்லவி வரிகளை (சிந்தயாமி சந்ததம்  முத்துசுவாமி தீட்சிதம் பரம பவித்ரம் சுசரித்ரம்) தேர்ந்தெடுத்ததோடு, அந்த பல்லவியை சுசரித்ரா தாளத்துக்கு ஏற்றபடி பாடியது குறிப்பிடத்தக்கது.

மேளகர்த்தா ராகங்களின் பெயர் போன்று, அதே பெயரில் தாளம் உண்டு. அந்த வகையில் 67-வது மேளகர்த்தா சுசரித்ரா ராகம் போல சுசரித்ரா தாளம் உண்டு. இந்த தாளம் குரு (8), சதுஸ்ரலகு (4), 2 திருதசேகர விராமம் (2 x 3 = 6), குரு (8), அனுத்ருதம் (1)ஆகியவற்றைக் கொண்டது. மொத்தம் 27 அட்சரங்கள்.

இந்த கடினமான தாளத்தில் பாடகருக்கு உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பிரதான ராக ஆலாபனையிலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார் மாதவன். ‘கார்முகில் வண்ணா, முழுமதி வதனா’ எனத் தொடங்கும் வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் பெஹாக் ராக தில்லானாவுடன் கச்சேரியை நிறைவு செய்தார் அம்ருதா வெங்கடேஷ்.

வித்வான்கள் எம்.டி.செல்வநாராயணா, பிரின்ஸ் ராமவர்மா, விதூஷிகள் சாருமதி ராமச்சந்திரன், பாரசாலா பி.பொன்னம்மாள் ஆகியோரிடம் இசைபயின்ற அம்ருதா வெங்கடேஷ், வீணைவாசிப்பதிலும் வல்லவர். பல வர்ணங்கள், தில்லானாக்களை இயற்றியுள்ள இவர், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கச்சேரிகள் செய்து வருகிறார். பல மாணவர்களுக்கு இசை பயிற்றுவித்து வருகிறார்.

SCROLL FOR NEXT