சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு புலிட்சர் பரிசு

By செய்திப்பிரிவு

சீனாவின் மனித உரிமை மீறல் களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக பத்திரிகை, நாடகம், இசை உள்ளிட்டதுறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது. இந்தஆண்டுக்கான புலிட்சர் பரிசு பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் பொது சேவை பிரிவில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் புலிட்சர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

சர்வதேச செய்தி சேகரிப்புபிரிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட் டுள்ளது. அமெரிக்காவின் ஆன்லைன் செய்தி ஊடகமான BuzzFeed சார்பில் சீனாவில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக மேகா ராஜகோபாலன் பணியாற்றினார். சீன அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டதாக கடந்த 2018 ஆகஸ்டில் சீனாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

எனினும் சீனாவில் அவர் வசித்தபோது ஜின்ஜியாங் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் முஸ்லிம்களை அந்த நாட்டுஅரசு தடுப்பு முகாம்களில் அடைத்துசித்ரவதை செய்வது குறித்த முக்கிய ஆதாரங்களை திரட்டினார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் விரிவான ஆதாரங்களுடன் மேகா ராஜகோபாலன் செய்தி வெளியிட்டார். இந்த செய்திக்காக அவருக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது மேகா ராஜகோபாலன் லண்டனில் பணியாற்றி வருகிறார்.அவர் கூறும்போது, "எனது பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். நான் அமெரிக்காவின் மேரிலேண்டில் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் ஊடகத் துறையில் இல்லை. எனது தனிப்பட்ட விருப்பத்தால் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறேன். புலிட்சர் விருதுகிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

உள்ளூர் செய்தி சேகரிப்பு பிரிவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க செய்தியாளர் நீல் பேடிக்கும் புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

வீடியோ எடுத்தவருக்கும் பரிசு

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பிளாய்ட். கறுப்பினத்தைச் சேர்ந்தவரான இவரை ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு மே 25-ம் தேதி போலீஸார் அழைத்தனர். அப்போது டெரெக் சோவின் என்ற போலீஸ்காரர், ஜார்ஜ் பிளாய்டை படுக்க வைத்து தனது முழங்காலை அவரது கழுத்தில் வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார் ஜார்ஜ். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்று கொண்டிருந்த டார்னெல்லா பிரேசியர் (18) தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் போராட்டத்திற்கு வித்திட்டது. இந்நிலையில், இந்த வீடியோவை எடுத்த இளம்பெண் டார்னெல்லா பிரேசியருக்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பான செய்திகளை வெளியிட்ட தி ஸ்டார் டிரிபியூன் என்ற செய்தித்தாளுக்கும் புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்