உலக மசாலா: 164 அடி உயரத்தில் அஞ்சலி

By செய்திப்பிரிவு

இத்தாலியின் மோன்டே பியானா பகுதியில் அமைதி மற்றும் முதல் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வானவில் ஊஞ்சல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 164 அடி உயரமுள்ள 2 மலைகளை இணைத்து ஒரு கம்பி கட்டப்பட்டது. இதில் 26 பேர் நடை பயின்றார்கள். பிறகு இந்தக் கம்பியில் 17 வண்ணங்களில் ஊஞ்சல்கள் அடுத்தடுத்து கட்டப்பட்டன.

ஒவ்வோர் ஊஞ்சலிலும் வீரர்கள் அமர்ந்திருந்தனர். இந்த ஊஞ்சலுக்குள் ஒரு செய்தித்தாள், விளையாட்டுப் பொருள், சிப்ஸ், குளிர் பானம் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. அவரவருக்குப் பிடித்த செயல்களைச் செய்தபடி அமர்ந்திருந்தனர். இந்த இடம் இயற்கை எழில் மிக்க இடம் இல்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம். 18 ஆயிரம் வீரர்களின் நினைவாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை, 2 மணி நேரம் நின்று மக்கள் ரசித்தனர்.

நோக்கம் நல்லதுதான் என்றாலும் ஆபத்தானதாக இருக்கிறதே…

சீனாவின் ஸியாங்செங் நகரில் கணவர் மற்றும் 5 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் கையிங் லீ. பக்கத்து வீட்டுக்காரருடன் ஒரு சிறிய தகராறு. மிக மோசமாக நடந்துகொண்டதால், லீயின் கணவர் காவல்துறையில் புகார் கொடுத்தார். ஆத்திரம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், 5 ஆட்களை வைத்து லீயின் கணவரைக் கொலை செய்துவிட்டார்.

லீயின் கண் முன்னே இந்தக் கொலை நடந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. உடனே கொலைகாரர்கள் தலைமறைவானார்கள். லீ காவல்துறையிடம் சென்றார். ஆனால் குற்றவாளிகள் தப்பிவிட்டதாலும் சாட்சிகள் இல்லாததாலும் அந்த வழக்கு அப்படியே முடங்கிப் போனது. ஆண்டுகள் கரைந்தன. லீயின் மனத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. அடிக்கடி குற்றவாளிகளைத் தேடிக் கிளம்பிவிடுவார். 10 ஆண்டுகளில் 9 மாகாணங்களுக்குப் பயணம் செய்திருந்தார். 2011-ல் ஒரு குற்றவாளியின் அலைபேசி எண் கிடைத்தது.

அவன் பெய்ஜிங்கில் வசிப்பதும் தெரிய வந்தது. அடுத்த 4 ஆண்டுகள் ஒவ்வோர் அடியையும் மிகக் கவனமாக எடுத்து வைத்தார். ஒவ்வொன்றையும் ஆவணப்படுத்தினார். இன்று 5 குற்றவாளிகளில் 4 பேரைப் பிடித்துக் கொடுத்துவிட்டார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்போம் என்று நினைக்காத குற்றவாளிகள் அதிர்ச்சியில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒருவனைத் தேடும் முயற்சியில் இருக்கும் லீயிடம், கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்று எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.

காவல்துறை செய்ய வேண்டியதைத் தனி ஒரு பெண்ணாகச் சாதித்துக் காட்டிய லீக்கு வாழ்த்துகள்!

கனடாவின் ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்காடியா பகுதிகளில் உள்ள சில குழந்தைகள் குழுக்கள் சேர்ந்து நல்ல காரியங்களில் இறங்கியுள்ளன. இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பரிசாக, ஏழைக் குழந்தைகளுக்கு குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள், ஜெர்கின்கள் போன்றவற்றைச் சேகரிக்கிறார்கள். பிறகு அவற்றை தெருக்களில் இருக்கும் கம்பங்களில் கட்டி வைத்துவிடுகின்றனர்.

தேவைப்படுபவர்கள் அவற்றை எடுத்துக்கொள்ளலாம். டாரா அட்கின்ஸ் ஸ்மித் ஒவ்வோர் ஆண்டும் கதகதப்பான ஆடைகளைச் சேகரித்து, இல்லாதவர்களுக்கு வழங்கி வந்தார். டாராவின் மகளுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்தது. ‘‘8 வயது மகளுக்கு, பிறருக்குக் கொடுப்பது எவ்வளவு இன்பமானது என்பதை உணர்த்துவதற்கு இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்தேன். அவளுடன் அவள் நண்பர்களையும் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தேன். உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியான சூழல் அமைந்துவிடவில்லை என்பதைப் புரிய வைத்தேன்.

நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது நம் கடமை என்று சொன்னேன். கனடாவில் கடுமையான பனிப் பொழிவு காலம் என்பதால், கதகதப்பான ஆடைகளைக் கொடுப்பது அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றேன். குழந்தைகள் அனைவரும் ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டனர். நான் நினைத்ததைவிட ஆடைகளைக் கொண்டு வந்து குவித்துவிட்டனர். குழந்தைகளுடன் சேர்ந்து ஏழைகள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள கம்பங்களில் கட்டி வைத்துவிட்டு, வந்துவிடுகிறோம்’’ என்கிறார் டாரா.

அடடா! குழந்தைகள் மனம் எவ்வளவு அற்புதமானது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்