உலக மசாலா: மரபணு ஆச்சரியம்!

By செய்திப்பிரிவு

இந்தப் படத்தில் இருப்பவர்கள் க்ளோன் செய்யப்பட்டவர்கள் அல்ல. இவற்றில் ஒரு குழந்தை இன்றைய குழந்தை. இன்னொரு குழந்தை சில வருடங்களுக்கு முன்பு அவர்களின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையாக இதே வயதில் இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை! பெண் குழந்தைகள் தங்கள் அப்பாவைப் போல அல்லாமல், தங்கள் அம்மாவை ஒத்திருக்கிறார்கள். அதேபோல ஆண் குழந்தைகள் அம்மாவைப் போல இல்லாமல், அப்பாவை ஒத்திருக்கின்றனர். தாய், தந்தையரில் யாருடைய மரபணுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அவர்களை ஒத்திருப்பார்கள் குழந்தைகள். ஆனால் இங்கே ஆண் குழந்தைகள் தங்கள் தந்தையையும் பெண் குழந்தைகள் தங்கள் தாயையும் அச்சு அசலாக ஒத்திருப்பது அபூர்வமான விஷயம் என்கிறார்கள்.

ரொம்ப ஆச்சரியமாக இருக்கே!

அதிக செலவு மிக்க ஒரு விளையாட்டு இப்பொழுது பரவி வருகிறது. இந்த விளையாட்டை இதய பலவீனமானவர்கள் விளையாடக்கூடாது. ஒரு பொருள் கீழே விழுந்தால் எடுக்க முடியாத இடத்தில் நின்றுகொள்ள வேண்டும். அதாவது கொட்டும் அருவி, ஓடும் ஆறு, மலை உச்சி, சாக்கடை, ரயில் பயணம், உயரமான கட்டிடம் போன்ற இடங்களில் நின்றுகொள்ள வேண்டும். விலை மதிப்பு மிக்க ஸ்மார்ட் போனின் ஒரு முனையை இரண்டு விரல்களால் பிடித்துக்கொள்ள வேண்டும். போனின் எடை, விரல்களின் நடுக்கம், விழுந்தால் திரும்பக் கிடைக்காது என்ற பயம் போன்றவற்றால் அட்ரினலின் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித் துடிப்பு வேகமாகும். ஒருவேளை போன் விழுந்தால் மயக்கமே வந்துவிடலாம்.

இந்த விளையாட்டை ட்வெண்ட்டி ஒன் பைலட்ஸ் என்ற அமெரிக்கன் பாப் குழு கண்டறிந்திருக்கிறது. யுடியூப்பில் இதுவரை 3 லட்சம் பேர் விளையாட்டை விரும்பிப் பார்த்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் வேகமாக இந்த விளையாட்டு பரவி வருகிறது. ஒரு பெண் வெப்பக் காற்றுப் பலூனில் பறந்து கொண்டு இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார். இன்னொருவர் நயாகரா அருவியில் இதை விளையாடிப் பார்த்திருக்கிறார். விளையாடுபவர்களை விட அந்த விளையாட்டைப் பார்க்கும் பெற்றோருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துவிடுகிறது. இந்த விளையாட்டில் குறைந்த அளவிலேயே போன் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகச் சொல்கிறார்கள்.

போன் விழுந்தால் கூட பரவாயில்லை, நீங்க விழுந்துடாதீங்க…

டெக்ஸாசில் வசிக்கிறார் 12 வயது கேட்லின் தோர்ன்லி. மர்மமான நோயின் காரணமாக நாள் முழுவதும் தும்மிக்கொண்டே இருக்கிறார். 1 நிமிடத்துக்கு 20 தடவை என்று 1 நாளைக்கு 12 ஆயிரம் தடவைகள் தும்மிக்கொண்டிருக்கிறார். இந்த அசுரத்தனமான தும்மல்களால் குழந்தைகளுக்கே உரிய மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருக்கிறார் கேட்லின். ’’4 வாரங்களுக்கு முன்பு பள்ளியில்தான் இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. வரிசையாகத் தும்மல்கள் வந்துகொண்டே இருந்தன. ஏதாவது அலர்ஜியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். உடனே வாயையும் கைகளையும் சுத்தம் செய்தேன். ஆனால் தும்மல் நிற்பதாக இல்லை. ஒருநாள் முழுவதும் தும்மிய பிறகு என் வயிற்றில் வலி வந்துவிட்டது. கால்கள் பலமிழந்துவிட்டன.

சாப்பிடக் கூட முடியவில்லை. பற்களும் வலிக்க ஆரம்பித்துவிட்டன. என்னால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இதுவரை பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. என் பிரச்சினையைத் தீர்க்கவும் முடியவில்லை. எந்த மருத்துக்கும் இந்த நோய் கட்டுப்பட மாட்டேன் என்கிறது. அலர்ஜி, மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி என்று காரணங்கள் சொன்னாலும் உண்மையான காரணம் யாருக்கும் தெரியவில்லை. பெனாண்ட்ரில் மருந்தை உட்கொண்டு என்னை மறந்து தூங்கும்போதுதான் தும்மல்கள் வருவதில்லை. ஆனால் அந்த நேரத்திலும் கனவில் தும்மல் வந்துவிடுகிறது. திடீரென்று தும்மல் வந்ததுபோலவே ஒருநாள் திடீரென்று மறைந்து போகும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்’’ என்கிறார் கேட்லின்.

நாலு தும்மலுக்கே நம்மால் தாங்க முடியாது… பாவம் குழந்தை…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

54 mins ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்