பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் பரவல்; பல ஐரோப்பிய நாடுகள் விமானப் போக்குவரத்தை நிறுத்தின; மீண்டும் கடும் லாக்டவுன்: அவரச ஆலோசனைக்கு ஏற்பாடு

By பிடிஐ

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அவசரக் கூட்டத்துக்கு பிரிட்டன் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு தளர்வுகளை பிரிட்டன் அரசு அறிவித்திருந்த நிலையில், புதியவகை கரோனா வைரஸ் பரவலையடுத்து, அந்தத் தளர்வுகளை ரத்து செய்துள்ளது.

இதற்கு முன்புவரை 3-வது படிநிலை கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு முதல் 4-வது படிநிலை லாக்டவுனைக் கடுமையாக அமல்படுத்தியுள்ளார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்.

அவசர ஆலோசனை

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில், “புதியவகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே இருக்கும் கரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வைரஸால் உயிரிழப்பு எந்த அளவுக்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு எச்சரித்துள்ளோம்.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் ஆபத்து இருப்பதால், உடனடியாக அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். உலக சுகாதார அமைப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து அழைத்துள்ளோம்.

எங்களுக்குக் கிடைத்துவரும் புள்ளிவிவரங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதேசமயம், கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியையும் புதிய வைரஸ் பரவல் எந்தவிதத்திலும் பாதிக்காது. புதிய வைரஸுக்கு எதிராக கரோனா தடுப்பூசி செயல்படாது என்ற உறுதியான தகவலும் இல்லை. ஆனால், விரைந்து செயல்பட்டுப் புதியவகை வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பிரிட்டனில் கொண்டுவரப்பட்டுள்ள 4-வது படிநிலை லாக்டவுனில் மக்கள் வெளியே கூட்டமாகச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் கென்ட், பக்கிங்ஹாம்ஷையர், பெர்க்ஸையர், சர்ரே, கோஸ்போர்ட், ஹேவன்ட், போர்ட்ஸ்மவுத், ராதர், ஹேஸ்டிங்ஸ், லண்டன், பிரிட்டனின் கிழக்குப்பகுதி, பெட்போர்ட், மத்திய பெட்போர்ட், மில்டன் கீன்ஸ், லூட்டன், பீட்டர்போரோ உள்ளிட்ட பகுதிகளிலும் புதிய லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற கடைகள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சிக் கூடம், பூங்காக்கள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து நிறுத்தம்

பிரிட்டனில் புதியவகை கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், கனடா, ஆஸ்திரியா , இத்தாலி போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு பிரிட்டன் செல்லக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

பிரிட்டனில் இருந்து ஜெர்மனி வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஜெர்மன் அரசு விதித்துள்ளது. பிரிட்டனுக்கு முழுமையாக விமானப் போக்குவரத்தை நிறுத்துவது தொடர்பாக பிரிட்டன் அரசிடம் ஜெர்மனி ஆலோசித்து வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு இறுதிவரை பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்து கிடையாது என்று நெதர்லாந்து நேற்று இரவு அறிவித்துள்ளது. அதேபோல, ஆஸ்திரியா, இத்தாலி, கனடா நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

பிரிட்டனில் இருந்து வருவோருக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும், தனிமைப்படுத்தும் விதிகளையும் செக் குடியரசு விதித்துள்ளது. பெல்ஜியம் அரசும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தைத் தற்காலிகமாக அடுத்த 24 மணி நேரத்துக்குத் தடை விதித்துள்ளது. பிரிட்டனில் பரவும் வைரஸ் குறித்து அறிந்தபின் அடுத்தகட்டத் தடைகுறித்து அறிவிக்கப்படும் என பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE