இந்தியாவுடனான எல்லை பிரச்சினை இருதரப்பு விவகாரம், பழைய பொய்களையே கூறாதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா பதில்

By செய்திப்பிரிவு

இந்தியாவுடனான எல்லை விவகாரம் இருநாடுகள் சம்பந்தபட்ட இருதரப்பு விவகாரம் என்று அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு சீனா பதில் அளித்துள்ளது.

மேலும் மைக் பாம்பியோ பழைய பொய்களைக் திரும்பத் திரும்பக் கூறுகிறார் என்றும் பன்னாட்டு உறவுகள் குறித்த விதிகளை மீறி வருகிறார் என்றும் சீனா அவர் மீது கடும் குற்றம்சாட்டியது. இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீடு விரும்பத் தகாதது என்று சீனா தெரிவித்துள்ளது.

2+2 உரையாடலின் போது மைக் பாம்பியோ தெரிவித்த கருத்துகளை அடுத்து டெல்லியில் உள்ள சீன தூதரகம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த உரையாடலில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

மைக் பாம்பியோ இந்த சந்திப்பின் போது, “இந்திய மக்களின் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, அமெரிக்கா இந்திய மக்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்றார். மேலும் அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியைத் தாக்கிப் பேசும்போது, “சீனா ஜனநாயகத்தின் நண்பன் அல்ல, சட்டத்துக்கும் கட்டுப்பட்டதல்ல, வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானது.” என்றார்.

இந்நிலையில் சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இருதரப்பு உறவுகளைக் கட்டமைப்பது பிராந்திய அமைதி ஸ்திரத்தன்மை, மற்றும் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதையே சீனா பரிந்துரைத்து வருகிறது. பிறரின் நியாயமான உரிமைகள் விவகாரத்தில் தலையீடு கூடாது.

எல்லை விவகாரம் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இருதரப்பு உறவு. இருதரப்புகளும் எல்லைப்பகுதியில் படைகளை வாபஸ் பெற்று பதற்றத்தை தணிக்க பேச்சு வார்த்தைகளில் இருந்து வருகிறது. சீனாவும் இந்தியாவும் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களையும் அறிவும் திறமையும் கொண்டது. இதில் 3ம் நாடு தலையிட இடமில்லை.

கோவிட் 19 விவகாரம் : கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சீன மக்கள் மற்றும் வரலாற்றின் தெரிவு. இந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் சீன மக்கள் வைரஸுக்கு எதிரான போரில் வென்றுள்ளனர். இதனையடுத்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மீதான சீன மக்களின் நம்பகத்தன்மை 90%ஐயும் கடந்திருப்பதாக பன்னாட்டு திறன் ஆய்வுகள் பல ஆய்வு தகவல்களை வெளியிட்டு உறுதி செய்துள்ளன. எனவே சீன கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பவர்கள் சீன மக்களுக்கு எதிர் நிலையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.

அமெரிக்கா இன்னமும் கரோனா குறித்து சீனாவை குறை கூறிவருகிறது. அது உண்மைகளை திரித்து மக்களைத் திசைத்திருப்புகிறது. வைரஸுக்கு எதிராக சீனாவின் நடவடிக்கைகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடியதே. அமெரிக்கா தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி கரோனாவிலிருந்து மக்களை மீட்கட்டும், பிறரை குறைகூறுவதை நிறுத்தட்டும்” என்று அந்த அறிக்கையில் சீனா கண்டித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்