உலக மசாலா: ஒபாமா விளையாட்டு!

By செய்திப்பிரிவு

“இதுவரை நாங்கள் சென்ற திருமணங்களில் மிக அற்புதமான திருமணம் இதுதான்!’’ என்றார்கள் விருந்தினர்கள்.

கலிஃபோர்னியாவில் கோல்ஃப் மைதானம் அருகில் ஒரு திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியைப் படம் பிடித்த வீடியோகிராபர், பக்கத்து மைதானம் பக்கம் கேமராவை திருப்பினார். அங்கே அமெரிக்க அதிபர் ஒபாமா விளையாடிக்கொண்டிருந்தார். தன் பக்கம் கேமரா திரும்பியதை ஒபாமா கவனித்தார். விளையாட்டை முடித்துவிட்டு, திருமணம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். மணமக்களும் திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் அழையாமல் வந்த அதிபரைக் கண்டு உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். மணமக்களை வாழ்த்தி, புகைப்படங்கள் எடுத்த பிறகு கிளம்பினார் ஒபாமா.

அரசியல் விளையாட்டுகளுக்கு மத்தியில் விளையாடவும் நேரம் இருக்கா உங்களுக்கு!

கனடாவில் வசிக்கும் நிகோல், வித்தியாசமான நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் பாதி நரி, பாதி நாய் என்று கலந்த புதுவகை இனம். நரியும் நாயும் இணைந்து மிக அழகான நாயாக உருவாகியிருக்கிறது. போம் போம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்கு விதவிதமாக ஆடைகளை அணிவித்து, புகைப்படங்கள் எடுத்து வருகிறார் நிகோல். கேமராவை பார்த்தவுடன் போம் போம் அட்டகாசமாக சிரிப்பதுதான் மிக ஆச்சரியமானது. நாய்கள் தொடர்பான பல்வேறு பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறது போம் போம். விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படுகின்றன. ‘நான் ஒரு பொமரேனியன். நான் ஒரு நரி. நான் ஒரு ஃபாக்ஸ்ரேனியன்’ என்று ஃபேஸ்புக்கில் போம் போம் தன்னைப் பற்றி குறிப்புகளைக் கொடுத்திருக்கிறது! கரடி பொம்மைகளுடன் போஸ் கொடுப்பதென்றால் போம் போமுக்கு ஆர்வம் அதிகம்.

அடடா! அற்புதம்!

இன்றைய அவசர உலகில் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபட ரஷ்யாவில் ‘டேபோஷ்’ என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது ஓர் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி, அலமாரி, அலங்காரப் பொருட்கள், மேஜை எல்லாம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கவச ஆடையை அணிந்துகொண்டு, ஒரு பெரிய சுத்தியலுடன் அறைக்குள் செல்ல வேண்டும். விரும்பும் வரை பொருட்களை சுத்தியலால் அடித்து நொறுக்க வேண்டும். இப்படிப் பொருட்களை நொறுக்கும்போது மன அழுத்தம் குறைந்து, சாதாரணமாகி விடுவார்கள். உடைத்திருக்கும் பொருட்களின் அளவுக்கு ஏற்ப 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். மாஸ்கோவில் ஆரம்பித்த இந்தத் திட்டம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த இந்தப் பொருட்களை நொறுக்க விரும்புகிறேன் என்று சொன்னால், அவற்றை மட்டும் அறையில் வைத்தும் கொடுக்கிறார்கள். வசதிக்கு ஏற்றவாறு உடைத்து நொறுக்க வேண்டியதுதான். நொறுக்கும்போது கூடுதல் சுவாரசியத்துக்கு பொருட்கள் உடைவது போன்ற ஒலிகளையும் ஒலிபரப்புகிறார்கள். மனநல மருத்துவர் யுரி அடமோவ்ஸ்கி, ‘’மன அழுத்தத்தை இப்படி வெளியேற்றி விடுவது உடலுக்கு நல்லதுதான். மன அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டால் பிற்காலத்தில் பெரிய உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம்’’ என்கிறார்.

நோயை வைத்து எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள்…

நியூயார்க்கைச் சேர்ந்த உணவு விடுதியின் உரிமையாளர் விக் ரோபே, 13.5 கிலோ எடை கொண்ட மெக்சிகன் உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால், தன்னுடைய விடுதியின் லாபத்தில் இருந்து 10 சதவிகிதத்தை உங்களுக்கு அளிப்பார், அத்துடன் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அந்த விடுதியில் சாப்பிட்டுக்கொள்ளலாம். அரிசி, இறைச்சி, பீன்ஸ், சீஸ் எல்லாம் கலந்து செய்யப்பட்டு இருக்கும் இந்த உணவை மிளகுச் சாற்றுடன் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இந்தச் சவால் அத்தனை எளிதானதல்ல. இதுவரை யாரும் சாப்பிட்டு ஜெயித்ததில்லை. சாப்பிடுவதற்கு முன்பே, உணவால் ஏதாவது உடல் நலத்துக்குத் தீங்கு ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பல்ல என்பதையும் சொல்லிவிடுகிறார்கள்.

முடியாத விஷயத்தைச் செய்யச் சொல்வதில் என்ன சவால்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

தமிழகம்

49 secs ago

இந்தியா

18 mins ago

இந்தியா

29 mins ago

க்ரைம்

40 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்