அகதிகளுக்காக ரூ.74,336 கோடி சுமையை ஏற்கிறது ஜெர்மனி

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் குவிந்து வரும் அகதிகளைப் பராமரிக்க அந்த நாட்டு அரசுக்கு நடப்பாண்டில் ரூ.74,336 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதிகளுக்காக ஜெர்மனி அரசு ரூ.17,844 கோடியை செலவிட்டுள்ளது.

சிரியா, இராக், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். கடல் மார்க்கமாக கிரீஸ், துருக்கி, இத்தாலி நாடுகளில் கரையேறும் அவர்கள் அங்கிருந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகி வருகின்றனர்.

இப்போதைய நிலையில் ஜெர்மனி மட்டுமே அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் இருந்து மாசிடோனியோ, செர்பியா, ஹங்கேரி, ஆஸ்திரியா வழியாக ஜெர்மனியை சென்றடைகின்றனர்.

இதில் மாசிடோனியோ, செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் அகதிகள் விவகாரத்தில் கடும் கெடுபிடியை கடைப்பிடித்து வருகின்றன. இந்த நாடுகள் தங்கள் எல்லைகளில் அபாயகரமான வேலியை அமைத்து அகதிகளை விரட்டுகின்றன. ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் கூறியபோது, முஸ்லிம்களை அனுமதித்தால் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ கலாச்சாரம் அழிந்துவிடும் என்று பகிரங்கமாக வெறுப்புணர்வை கொட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியில் சிரியாவைச் சேர்ந்த அய்லான் என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியின் கோஸ் தீவில் கரைஒதுங்கிய புகைப்படம் உலகை புரட்டிப் போட்டது. இதனால் அகதிகள் விவகாரத்தில் பிடிவாதமாக இருந்த ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், சொந்த நாட்டு மக்களின் நெருக்கடியால் தங்களது எல்லைகளை திறந்துவிட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து பல நாட்களாக ஹங்கேரியில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான அகதிகள் நேற்று முன்தினம் பாதுகாப்பாக ஆஸ்திரியா நாட்டின் எல்லையான நிக்கல்டோர்ப் நகருக்கு சென்றடைந்தனர். அங்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் அகதிகளுக்கு உணவுப் பண்டங்கள், உடைகள், காலணிகள் வழங்கப்பட்டன.

ஆஸ்திரியா அரசு அகதிகளுக்கு தஞ்சம் அளிக்க முன்வந்தாலும் வெகுசிலரே அந்த நாட்டில் தங்கியுள்ளனர். பெரும்பான்மை அகதிகள் அங்கிருந்து ஜெர்மனி சென்றுள்ளனர். நாள்தோறும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஜெர்மனியின் முனிச், பிராங்க்பர்ட் நகரங்களை சென்ற டைகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் ஜெர்மனி அரசு அடைக்கலம் அளித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஜெர்மனிக்கு வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் ஜெர்மனி அரசுக்கு ரூ.74,336 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2 லட்சத்து 3 ஆயிரம் அகதிகளை ஜெர்மனி ஏற்றுக் கொண்டது. இதனால் அந்த நாட்டு அரசுக்கு ரூ.17844 கோடி செலவானது.

ஜெர்மனி மக்களில் 88 சதவீதம் பேர், அகதிகளுக்காக உணவுப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தாராளமாக தானம் வழங்கி வருகின்றனர். 67 சதவீத மக்கள் மொழி புரியாமல் தவிக்கும் அகதிகளுக்கு வழிகாட்டியாக உதவி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவும் ஆதரவு கரம்

இதனிடையே ஆஸ்திரேலியாவும் அகதிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வந்துள்ளது. அந்த நாட்டு பிரதமர் டோனி அபோட் கூறியபோது, 3 வயது சிறுவன் அய்லானின் புகைப்படம் எனது மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் 13,750 அகதிகளுக்கு ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கிறது. இந்த ஆண்டு சிரியா மக்களுக்காக கூடுதலாக அகதிகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளோம், இதில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்