ஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்ட விரோதம், தன்னி்ச்சையான முடிவு: ஐ.நா. சிறப்பு அதிகாரி அறிக்கை

By செய்திப்பிரிவு


ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமான் உள்ளிட்ட 8 பேர் மீது அமெரிக்கா ஆள் இல்லா விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி கொலை செய்தது சட்டவிரோதமானது, தன்னிச்சையாக கொலை செய்துள்ளது. இதுவரை அவர்கள் செய்த குற்றத்துக்கான ஆதாரங்களை அளிக்காதது ஏன் என்று ஐ.நா.வில் சிறப்பு விசாரணை அதிகாரி ஆக்னஸ் காலாமார்ட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் நடத்தியுள்ள சட்டவிரோத கொலைகள், தன்னிச்சையாக மனிதர்களுக்கு தூக்கு தண்டனை விதி்த்தல் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும் ஐ.நாவின் சிறப்பு அதிகாரி ஆக்னஸ் காலாமார்ட் தனது அறிக்கையை ஐ.நா.வில் தாக்கல் செய்தார். அப்போதுதான் அவர் அமெரிக்காவின் செயலை கடுமையாக விமர்சித்தார்.

ஈரான் நாட்டின் புரட்சிப்படை தலைவரும், ராணுவத் தளபதியுமான காசிம் சுலைமானி, அவரின் மருமகன் முகந்திஸ் உள்ளிட்ட 9 பேரை கடந்த ஜனவரி மாதம் பாக்தாத் விமான நிலையத்தில் ஆள் இல்லா விமானம் மூலம் குண்டுவீசி தாக்கி அமெரிக்க ராணுவம் கொன்றது.

அமெரிக்கர்களைக் கொல்வதற்கு சுலைமான் திட்டமிட்டார் அதனால் கொன்றோம் என்று ஒற்றை வரியில் அமெரிக்க அரசு விளக்கம் அளித்து நிறுத்திக்கொண்டது.

அமெரிக்க அரசின் "கட்டவிழ்த்துவிட்ட தீவிரவாதத்தால்தான் சுலைமான் கொல்லப்பட்டார், அதற்கு பழிதீர்ப்போம்" என்று ஈரான் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கைது செய்ய கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரான் ஷியா முஸ்லிம்களின் ஆதர்ச ஹீரோவாகவும், ஈரானிய ராணுவத்தை கட்டமைத்து வலுப்படுத்தியவருமான சுலைமான் படுகொலை ஈரான் அரசையும் உலுக்கியது, மக்களையும் கலங்கச் செய்துள்ளதால் அமெரிக்கா மீதான கோபம் இன்னும் குறையவில்லை

அமெரிக்காவுக்கு கண்டனம்

இந்நிலையில் உலக நாடுகள் நடத்தியுள்ள சட்டவிரோத கொலைகள், தன்னிச்சையாக மனிதர்களுக்கு தூக்கு தண்டனை விதி்த்தல் குறித்து விசாரித்து ஐ.நாவின் சிறப்பு அதிகாரி ஆக்னஸ் காலாமார்ட் தனது அறிக்கையை ஐ.நா. சபையில் கடந்த நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

அப்போதுஅவர் கூறியதாவது:

உலகளவில் நாடுகள் தற்போது ஆள்இல்லா விமானங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஆள் இல்லா விமானங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு ஏதேச்சதிகார நடவடிக்கைள், தன்னிச்சையான கொலைகளில் ஈடுபடுகின்றன.

102 நாடுகள் ஆள் இல்லா விமானத்தை தீவிரமாகப் பயந்படுத்துகின்றன. கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 11 நாடுகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சிலரை கொலை செய்து வருகின்றன. பிரிட்டன், எகிப்து, ஈரான், ஈராக், அமெரிக்கா, ஈரான், இஸ்ரேன், பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை ட்ரோன்களை தவறாகப் பயன்படுத்துகின்றன.

ஆள்இல்லா விமானத்தை பயன்படுத்துவதில் இந்த நாடுகளில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. இந்த நாடுகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி செய்த மனித உரிமை மீறல்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் விரைவில் அறிக்கையாக அளிக்க வேண்டும்.

அதிலும் அமெரி்க்க ராணுவம், கடந்த ஜனவரி மாதம் பாக்தாத் விமானநிலையத்தில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உள்பட 8 பேரை ஆள் இல்லா விமானம் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி கொலை செய்தது சட்டவிரோதம். தன்னிச்சையான கொலையாகும். ஈராக், சிரியாவுக்கு பொறுப்பு அதிகாரியாகவும், ஈரானின் ராணுவ தளபதியாகவும் சுலைமானி இருந்தார்.

இந்த தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை, இதுவரை அமெரிக்கா வழங்கவில்லை. தங்கள் நாட்டு வீரர்களை சுலைமானி கொல்ல திட்டமிட்டார் என்று மட்டும் தெரிவித்தது. சுலைமானி மீதான எந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரமும் இல்லை. இந்த கொலைக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்.

அதேபோல அமெரிக்க ராணுவத் தளத்தில் ஈரான் ராணுவம் நடத்திய தாக்குதலும் சட்டவிரோதம்” எனத் தெரிவித்தார்

அமெரிக்கா பதில் என்ன?

இதற்கு அமெரி்க்கா தரப்பில் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டாகஸ் கூறுகையில் “தற்காப்புக்காக நடத்தப்பட்ட அமெரிக்க நடத்திய தாக்குதலைக் கண்டித்து ஐநாவில் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஒரு சிறப்பு வகையான அறிவுசார் நேர்மையின்மை தேவைப்படுகிறது. உலகின் அபாயகரமான தீவிரவாதிகளில் ஒருவரான சுலைமானியை கொன்றுள்ளோம்.

ஐநாவின் இந்த போக்கும், இதுபோன்ற அறிக்கையும் தீவிரவாதிகளுக்கு சலுகை அளித்து மனித உரிமைகளை குறைமதிப்பிட வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது சரியானது என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்