உலக மசாலா: லாராவின் பிரச்சினை

By செய்திப்பிரிவு

பிரேஸிலில் வசிக்கிறார் லாரா போன்ஸ். கடந்த 20 ஆண்டுகளாக விநோதமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் அழும்போது கண்ணீருடன் படிகமும் உருவாகிறது. வெள்ளை நிறத்தில் மென்மையாக உருவாகும் படிகம், விரைவில் கட்டியான படிகமாக மாறிவிடுகிறது. ஒரு நாளைக்கு 30 முறை சவ்வு போன்ற படலம் கண்ணில் தோன்றுகிறது. அதை உடனுக்கு உடன் கஷ்டப்பட்டு எடுத்து விடுகிறார் லாரா. எடுக்க முடியாதபோது கட்டியாக மாறிவிடுகிறது. அந்தப் படிகத்தை கண் மருத்துவரிடம் சென்று, வாரம் ஒருமுறை நீக்கி வருகிறார்.

15 வயதில் லாராவுக்கு இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. மருத்துவர்களே குழம்பிப் போனார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முடியவில்லை. பார்க்காத மருத்துவர்கள் இல்லை. ‘’ஒரு பள்ளி ஆசிரியராக இருக்கும் எனக்கு இந்தப் பிரச்சினை மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. கண்ணிலேயே கவனம் இருப்பதால் மற்றவற்றை என்னால் கவனிக்க முடியவில்லை’’ என்கிறார் லாரா. கண் மருத்துவரான ரால் கோன்கால்வ்ஸ், ‘’இதுவரை இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. 25 ஆண்டுகால பணி வாழ்க்கையில் முதல் முறை லாராவை இந்தப் பிரச்சினையோடு சந்திக்கிறேன்.

நம் கண்ணீர் மூன்று விதமான அடுக்குகளைக் கொண்டது. தண்ணீர், புரதம், கொழுப்பு. இதில் புரதம் பாக்டீரியாக்களில் இருந்து கண்களைப் பாதுகாக்காததால், அடுத்த அடுக்கில் இருக்கும் கொழுப்பு அதிக அளவில் சுரக்கிறது. இதனால் கார்னியாவின் மேற்புறம் உருவாகும் கெரட்டின் போன்ற பொருளைக் கரைப்பதற்காக சில்வர் நைட்ரேட் என்ற மருந்தைச் செலுத்துகிறேன். இது சிறிது நேரத்துக்கு வேலை செய்கிறது. ஆனால் நாள் முழுவதும் வேலை செய்யாது’’ என்கிறார். 24 மணி நேரமும் கண்களில் உறுத்தல்களோடு வாழ்ந்து வருகிறார் லாரா.

ஆண்டர்சன் கதைகளில் கண்ணீர், முத்துகளாக மாறுவதைப் போல இருக்கிறதே லாராவின் பிரச்சினை…

ஐரோப்பாவில் புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதில் மிகவும் பின்தங்கியிருந்த நாடு பிரிட்டன். அதைச் சரி செய்யும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று, நாய்களை வைத்து ரத்த மாதிரிகளில் இருந்து புற்றுநோயைக் கண்டறிவது. 6 ஹங்கேரியன் நாய்களுக்கு 6 மாதங்கள் பயிற்சியளிக் கப்பட்டன. அவற்றில் 2 நாய்கள் மிகக் கச்சிதமாகத் தங்கள் வேலைகளைச் செய்து வருகின்றன. ஆண்களுக்கு வரும் விந்துப்பை, சிறுநீரகப் புற்றுநோய்களைக் கண்டறிந்து சொல்லி விடுகின்றன. இதுவரை 3 ஆயிரம் மாதிரிகளைப் பரிசோதித்து, 93 சதவிகிதம் சரியாகச் சொல்லியிருக்கின்றன. ஒரு நாய் கண்டறிந்தததை இன்னொரு நாயிடம் காட்டி, உறுதி செய்துகொள்கிறார்கள். இதன் மூலம் புற்றுநோய் இல்லாதவர்கள் அநாவசியமாக பயாப்ஸி செய்து, வலியை அனுபவிக்க வேண்டியதில்லை. புற்றுநோய் இருப்பவர்கள் மேற்கொண்டு பயாப்ஸி மூலம் உறுதி செய்துகொண்டு, மருத்துவம் செய்துகொள்ளலாம். ரத்தம், சிறுநீர் மாதிரிகளை வைத்து, தன் மூக்கின் உதவியால் நோய் குறித்த தகவல்களை அளித்து விடுகின்றன நாய்கள்.

அடடா! ஒரு பிஸ்கெட்டுக்கு எவ்வளவு வேலைகளைச் செய்கின்றன இந்த நாய்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

27 mins ago

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்