ஈரானில் வன்முறையும் அரசியல் குழப்பமும்

By செய்திப்பிரிவு

டாக்டர் ஸ்ரீ தர் கிருஷ்ணசுவாமி

ஈரானில் மிகப் பெரிய கலவரம் காரணமாக பதற்றமான சூழல் எழுந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 1979-ம் ஆண்டில் அதிபராக இருந்த ஷா பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, இதுபோன்ற கலவரம் ஏற்பட்டது. ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி கோமெனியும் அதிபர் ஹாசன் ருஹானியும் எதிர்பாராத அளவுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தற்போது கலவரம் பற்றி எரிகிறது.

ஈரானியர்கள் ஒருநாள் காலை எழுந்து பார்த்தபோது, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் ரத்து ஆகியிருந்தது. அதோடு, பெட்ரோல், டீசல் விலை 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு வரை உலகிலேயே ஈரானில்தான் பெட்ரோல் விலை மிகவும் குறைவாக இருந்தது. ஒரு லிட்டர் விலை 30 சென்ட் (ரூ.21) தான். பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் போன்ற நாடுகளில் புரட்சி நடப்பது மிகவும் அபூர்வம். கடந்த 2009-ல் ஒருமுறை கலவரம் ஏற்பட்டது. 2010-ல் அரேபிய கிளர்ச்சி ஏற்பட்டது. அது அமெரிக்கா தூண்டி விட்டதால்தான் ஏற்பட்டது என ஈரான் தலைவர்கள் அதை புறந்தள்ளிவிட்டனர். தற்போது தொடர்ச்சியாக நடந்து வரும் போராட்டங்கள், ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை காட்டுவதாக உள்ளது.

எரிபொருள் விலை உயர்வு அந்த வெறுப்பை தூண்டிவிட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்த கலவரத்துக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியானதால், கலவரத்தைக் கட்டுப்படுத்த அரசு நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் கலவரப் பலி 200-க்கும் மேல் இருக்கும் என்கின்றன தனியார் தொண்டு அமைப்புகள். இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புகளையும் அரசு முடக்கி வைத்துள்ளதால், உண்மையான எண்ணிக்கை வெளிவர வாய்ப்பில்லை.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகள் ஈரானின் பொருளாதாரத்தைப் பாதிக்க ஆரம்பித்து விட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்தத் தடையையும் தாண்டி வருவோம் என ஈரான் நாட்டுத் தலைவர்கள் ஆரம்பத்தில் முழங்கியது என்னவோ உண்மைதான். இப்போது நிலைமை அப்படியில்லை. இயல்பு நிலை கைமீறிப் போய்விட்டது. நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது.

கிளர்ச்சி ஆரம்பித்ததில் தொடங்கி இன்று வரை ஒரு எண்ணெய் கப்பலைக் கூட துறைமுகத்தில் இருந்து எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியவில்லை என ஈரான் அதிபர் ருஹானி சமீபத்தில் கூறியிருக்கிறார். பொருளாதார தடை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டில் தினமும் 25 லட்சம் பேரலாக இருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி, தற்போது வெறும் 2 லட்சம் முதல் 4 லட்சம் பேரலாகக் குறைந்து விட்டதாக எண்ணெய் தொழில் வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் நாட்டின் 3900 கோடி டாலர் பட்ஜெட்டில் ஏறக்குறைய 2500 கோடி டாலர் வரை கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு உள்ளூரில் மட்டும் பிரச்சினையில்லை. அந்த நாடு ஏகப்பட்ட கோடி டாலர்களை முதலீடு செய்துள்ள இராக்கிலும் லெபனானிலும் அமைதி குலைந்து ஈரானுக்கு எதிராக பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் இராக், லெபனான், ஏமன் நாடுகளில் 1600 கோடி டாலர் வரை ஈரான் முதலீடு செய்துள்ளதாகவும் சிரியாவில் மட்டுமே 100 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளதாகவும் அமெரிக்கா மதிப்பீடு செய்துள்ளது.

இதுபோக, ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு ஆண்டுதோறும் 100 கோடி டாலர் அளவுக்கு நிதியுதவி அளித்து வருகிறது ஈரான். தற்போதைய பொருளாதார சூழ்நிலை மற்றும் ஈரானுக்கு எதிரான நிலைமை போன்ற காரணங்களால், இதுபோன்ற நிதியுதவி எல்லாம் நின்றுபோக வாய்ப்புள்ளது.

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுத்தி தீவிரவாதிகள் மூலம் தங்களுக்கு சொந்தமான எண்ணெய் வயல்கள் ஏவுகணைகளால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால், ஈரான் மீது சவுதி அரேபியா கடும் கோபத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் அந்த நாடும் ஈரான் மீது கோபத்தில் உள்ளது.

அமெரிக்க போர் விமானங்கள் ஈரான் மீது குண்டு வீசத் தயாராக இருந்த சூழலில் 10 நிமிடம் முன்னதாக, தாக்குதல் திட்டத்தை ட்ரம்ப் வாபஸ் பெற்றார். ஒருவேளை தாக்குதல் நடந்திருந்தால் அமெரிக்காவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.

அதோடு, ஈரான் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்திருக்கும். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவாளர்களும் எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டித்து அந்நாட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஏற்கனவே பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார தேக்கநிலை காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் ஈரான், மேலும் கடுமையாக பாதிக்கப்படும்.

ஈரானில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்த கலவரத்துக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியானதால், கலவரத்தைக் கட்டுப்படுத்த அரசு நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் கலவரப் பலி 200-க்கும் மேல் இருக்கும் என்கின்றன தனியார் தொண்டு அமைப்புகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்