இலக்கியத்துக்கான நோபல் வென்ற முதல் கருப்பரின பெண் படைப்பாளி டோனி மாரிசன் காலமானார்

By செய்திப்பிரிவு

நியுயார்க்:

நவீனத்துவ இலக்கியத்தின் மகா படைப்பாளியும் ஆப்ரிக்க-அமெரிக்க இலக்கியத்தை வேறொரு பரிமாணத்துக்கு உயர்த்தியவரும் கருப்பரின உரிமைகளுக்காக தன் வன்மையான, ஆற்றல் மிகு எழுத்துக்களால் போராடிய அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசன் காலமானார். இவருக்கு வயது 88.

1993ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற முதல் கருப்பரினப் படைபாளி என்ற வரலாற்றை நிகழ்த்தினார் டோனி மாரிசன்.

இவருடைய நக்கல் நையாண்டி கலந்த ஆனாலும் மனதைத் தைக்கும் கதையாடல் முறையும் கற்பனா சக்தியின் உச்சமும் அதற்கேற்ற சக்தி வாய்ந்த மொழி ஆளுகையும் கொண்ட டோனி மாரிசன் திங்கள் இரவு நியூயார்க்கில் உள்ள மாண்டிபியொர் மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் தன் நண்பர்கள், சுற்றங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் காலமானார். சிறிது காலமே அவர் உடல்நலம் குன்றியிருந்தார்.

அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நண்பர்கள், உறவினர்கள் சூழ்ந்திருக்கையில் டோனி மாரிசனின் உயிர் அமைதியாகப் பிரிந்தது. அவர் மிகவும் கடமையுணர்ச்சியுள்ள பாசமிகு தாய், பாட்டி, அத்தை எல்லாமும். தன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருப்பதை பெரிதும் விரும்பியவர். எழுதப்படும் வார்த்தையை ஒரு பொக்கிஷமாகக் கருதுபவர். இது தன்னுடையதாக இருந்தாலும் தன் மாணவர் அல்லது பிறராக இருந்தாலும் பொக்கிஷமாகக் கருதுபவர். நிறைய புத்தகங்கள் வாசிப்பவர், எழுதும்போது பெரும்பாலும் வீட்டில்தான் இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பிலவட், சாங் ஆஃப் சாலமன் போன்ற நாவல்கள் இவருக்கு பெரிய புகழையும், ஆப்ரோ-அமெரிக்க இலக்கியத்தில் மிகப்பெரிய படைப்பாளுமை என்ற அந்தஸ்தையும் வழங்கியது.

முதல் நாவல் ‘ப்ளூயெஸ்ட் ஐ’ வெளி வரும்போது இவருக்கு வயது 40 இருக்கும். அவரது 60வது வயதுகளின் காலக்கட்டத்தில் சுமார் 6 நாவல்கள் எழுதப்பட்ட நிலையில் நோபல் பரிசு பெறும் முதல் கருப்பரினப் பெண் படைப்பாளி என்ற வரலாறு படைத்தார் டோனி மாரிசன்.

அவர் ‘மொழிக்குள் வாழ்ந்தார், மொழியை விடுதலையாக்கினார்’ என்று அப்போது கூறப்பட்டது. அதாவது மொழியை நிறவெறி திணைகளான கருப்பு/வெண்மை என்ற பேதச் சிறையிலிருந்து மீட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அமெரிக்க பன்முக பண்பாட்டு வாதத்தை உலக அரங்கில் உயர்த்திக் காட்டியவர் டோனி மாரிசன். தன் நாட்டின் இருண்ட கடந்த காலத்தை சென்சாரிலிருந்து விடுவித்தவர் டோனி மாரிசன். அறியப்படாதவர்களை எழுதினார், விரும்பத்தகாதவர்களாக ஆக்கப்பட்டவர்களை எழுதினார். அவர் பாஷையில் கூற வேண்டுமெனில், “ஜனநாயகப் பரிசோதனையின் இருதய மையத்தில் விடுதலையடையாதவர்களை” ப் பற்றி எழுதினார்.

இவரது படைப்புகளில் கருப்பரின வரலாறு கவித்துவமாகவும் துன்பியலாகவும் அன்பாகவும் சாகசமாகவும் பலபரிமாணங்கள் பெற்றது. நிறவெறி என்பது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஒன்று பிறப்பினால் அல்ல என்பதை தன் கதாப்பாத்திரங்களின் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தினார். ஆப்பிரிக்க இலக்கியம், அவர்களின் நாட்டுப்புறவியல், பைபிள் என்று அனைத்தையும் தன் நாவல்களில் திறம்பட, இடக்கரடக்கலாக, ஆற்றலுடனும் உந்து விசையுடனும் தன் நடை மூலம் கையாண்டார்.

“கதையாடல் எனக்கு எப்போதும் பொழுது போக்கு அல்ல, என்னைப் பொறுத்தவரை அறிவைப் பெறுவதற்கான ஒரு முதன்மை வழிகளே கதையாடல்” என்று தன் நோபல் உரையில் அவர் தெரிவித்தார்.

பிலவட் நாவலுக்கு 1988-ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றார். ஆப்பிரிக்க-அமெரிக்க அடிமைப் பெண்ணான மார்க்ரெட் கார்னர் கெண்டகி மாகாண அடிமைச்சமூகத்திலிருந்து தப்பித்து ஒஹியோவுக்கு சென்றவர் பற்றிய நிகழ்விலிருந்தும் தான் பெற்ற குழந்தையையே கொலை செய்த கருப்பரின தாய் பற்றிய ஒரு செய்தித்தாள் செய்தியிலிருந்தும் ஊக்கம் பெற்று ‘பிலவட்’ படைப்பை அவர் எழுதினார். தப்பிச் சென்ற கார்னரை அடிமை வேட்டையாளர்கள் விரட்டுகின்றனர். மீண்டும் கார்னர் அடிமைச்சமூகச் சேவகத்துக்கும் அடக்குமுறைக்கும் திரும்ப நேரிடும் போது தன் 2 வயது மகளை இந்த கொடூர உலகில் விட்டுச் செல்ல வேண்டாம் என்று கொலை செய்கிறார், ஆனால் தானும் தற்கொலை செய்யும் முன் இவரை அடிமை வேட்டையாளர்கள் பிடித்து விடுகிறார்கள், இந்த உண்மைக்கதைதான் வேதனை பிலவட் நாவலின் பிறப்பிடம்... வேதனைப் பிறப்பிடமான பிலவட் நாவல்.

பிப்ரவரி 18, 1931-ல் டோனி மாரிசன் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தார். ஆப்பிரிக்க-அமெரிக்க பாட்டாளி வர்க்க குடும்பத்தின் 4 வாரிசுகளில் டோனி மாரிசன் 2வது வாரிசு. டோனி மாரிசன் 2 வயதாக இருந்த போது நில உரிமையாளர் இவர்களால் வாடகை கொடுக்க முடியாததால் இவர்கள் வசித்த வீட்டுக்கு தீவைத்தார். நிறவெறி, அடிமை முறையின் கொடூரமான காலங்களைக் கடந்து வந்த மிகப்பெரிய ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் படைப்பாளி இன்று நம்மிடையே இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்