கிரீடத்தை இழக்கும் கிரீஸ் - 8

By ஜி.எஸ்.எஸ்

கி.மு. 480ல் டெலியன் கூட்டமைப்பு (Delian League) உருவானது. அதாவது கிரேக்கத்தில் அமைந்த சின்னஞ்சிறு பகுதிகள் (City-States) சுமார் 160 ஒன்றிணைந்தன. பாரசீக சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்பதுதான் அந்த இணைப்பின் ஒரே லட்சியமாக இருந்தது.

ஆனால் இந்த ஒற்றுமை அவ்வப்போது நீர்த்துப் போனது. கி.மு. 420ல் கிரேக்கப் பகுதிகளான ஏதென்ஸுக்கும், ஸ்பார்ட்டாவுக் குமிடையே கடும் போர் உண்டானது. இதன் காரணமாக பிற கிரேக்கப் பகுதிகளெல்லாம் இரண்டாகப் பிரிந்து நின்றன. இரு கிரேக்கப் பகுதிகளுக்கிடையே நடைபெற்ற மிக பயங்கரமான யுத்தம் என்று கருதப்படும் அதை ‘பெலோப்னேஷியன் போர்’ என்று அழைக்கிறார்கள்.

ஏதென்ஸ் பிரிவின் கூட்டு நாடுகளில் பலவும் தீவுகள். இதன் காரணமாக ஏதென்ஸ் பிரிவினர் கடற்படையில் பலம் படைத்தவர்களாக இருந்தனர். ஸ்பார்ட்டா அணியின் நண்பர்கள் கிரேக்கத்தின் உள்ளார்ந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தரை ராணுவத்தில் தலைசிறந்தவர்களாக இருந்தார்கள். எனினும் ஏதென்ஸ் அணியினரிடம் பொருளாதார பலம் அதிகமாகவே இருந்தது.

‘30 வருட அமைதி ஒப்பந்தம்’ என்ற ஒன்றில் இருதரப்பினரும் கையெழுத் திட்டாலும் அதைச் சீக்கிரமே மீறத் தொடங்கினர். குறிப்பாக ஏதென்ஸ் ஒப்பந்த மீறலை கொஞ்சம் அதிகமாகவே செய்தது.

இதனால் போர் வெளிப்படையாகவே மேலும் பெரிய அளவில் தொடங்கியது. இதன் காரணமாக சில கிரேக்க நகரங்கள் அழிந்தன. ஏதென்ஸ் அழிவை அதிகம் சந்தித்தது.

பின்னர் மன்னர் இரண்டாம் பிலிப் மாசிடோனியாவிலிருந்து வந்து ஸ்பார்ட்டாவைத் தவிர மற்ற எல்லாப் பகுதிகளையும் தனது ஆட்சியில் இணைத்துக் கொண்டபோது மேற்படிப் பகைமை முடிவுக்கு வந்தது. மன்னர் இரண்டாம் பிலிப்ஸை நாம் அறிவோம் - அலெக்ஸாண்டரின் அப்பா அவர்.

இந்த இடத்தில் அலெக்ஸாண்டர் குறித்து ஒரு விளக்கம். அவரை கிரேக்க வீரர் என்று கருதுகிறோம். ஆனால் அவர் கிரேக்கத்தை வெற்றி கொண்டார் என்கிறது வரலாறு. அப்படியானால் அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். கிரேக்கம் எனப்படும் கிரீஸின் மேற்குப் பகுதியில் உள்ளது மாஸிடோனியா. அலெக்ஸாண்டரின் இனம் கிரேக்க இனமே தவிர அவரது சொந்த நாடு மாஸிடோனியாதான். அப்போது கிரீஸ் என்ற நாடு (இப்போது உள்ளதைப்போல) கிடையாது. இப்போதைய கிரீஸ் பகுதியில் உள்ள பல ராஜாங்கங்களும் அப்போது மாஸிடோனியாவின் உயர்வை ஏற்றுக் கொண்டிருந்தன. (அலெக்சாண்டரைத் தனது மண்ணின் மைந்தன் என்று இப்போது உரிமை கொண்டாடுகிறது கிரீஸ். தவிர தத்துவ அறிஞர் அரிஸ்டாடிலையும் தனது மண்ணின் மைந்தன் என்கிறது).

மாஸிடோனியா என்ற நாடு பாரசீகத்தைத் தாண்டி இருந்தது. (பாரசீகம் என்பது தற்போதைய ஈரான்). அதன் மன்னர் இரண்டாம் பிலிப். அவருக்கு சிறுவயதிலிருந்தே ஒரு பெரிய ஆசை உண்டு. தன் நாட்டின் எல்லைகளைப் பெருக்கிக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு.

அண்டை நாடுகளுக்கு விஜயம் செய்து அவற்றின் சில பகுதிகளை வசப்படுத்திக் கொண்டார். எபிரஸ் என்ற அண்டை நாட்டின் (அந்த நாட்டின் தற்போதைய பெயர் அல்பேனியா) இளவரசி ஒலிம்பியாஸ் என்பவளைத் திருமணம் செய்து கொண்டார். மன்னர் பிலிப்புக்கும் ஒலிம்பியாஸுக்கும் பிறந்தவர்தான் அலெக்ஸாண்டர்.

ஒலிம்பியாஸ் சிகப்பான உடல் கொண்டவள். அவள் இளவரசிதான் என்றாலும் அவளது தந்தையின் பரம்பரை பலவிதமான காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களைக் கொண்டது. பாம்புகளோடு விளையாடுவது ஒலிம்பியாஸுக்குப் பிடிக்கும். தூங்கும்போது கூட அவள் பக்கத்தில் பாம்புகளைப் படுத்துக் கொள்ள அனுமதிப்பாள். இப்படி ஒலிம்பியாஸைப் பற்றிப் பலவித செய்திகள் பரவியிருக்கின்றன.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல் பிலிப்பின் மகன் அலெக்ஸாண்டரும் போர்த் தந்திரங்களில் சிறந்து விளங்கினான். ஆனால் மருத்துவம், தத்துவம் ஆகியவற்றில் கூட அவன் சிறந்து விளங்கியதற்குக் காரணம் உண்டு.

கிரீஸில் அரிஸ்டாட்டில் என்ற சிறந்த தத்துவ ஞானியிடம் பலவித பயிற்சிகளைப் பெற்றதால்தான் பல கலைகளில் வல்லவனாக அலெக்சாண்டர் திகழ்ந்தான். பெல்லா நகருக்கு வந்து தன் மகனுக்குப் பாடங்களை கற்றுத் தரவேண்டுமென்று அரிஸ்டாட்டிலிடம் ஏற்பாடு செய்து கொண்டார் மன்னர் பிலிப். அரிஸ்டாட்டிலும் மன்னர் பிலிப்பும் இளம் வயது நண்பர்கள். அரிஸ்டாட்டிலின் தந்தை ஒரு மருத்துவர். பிலிப்பின் அப்பாவுக்கு மருத்துவம் பார்த்தவர்.

தனது பன்னிரண்டாவது வயதிலேயே அலெக்ஸாண்டர் குதிரை ஏற்றத்தில் மிகச் சிறந்து விளங்கினான். அப்போதுதான் அவனுக்குச் சவாலாக வந்தது புஸிபேலஸ் என்ற பெயர் கொண்ட குதிரை.

கறுப்பு உடல், ஒரு கண் புருவத்துக்கு மேல் வெள்ளை நட்சத்திரக் குறி, பெருத்த தலை இப்படிக் காட்சி அளித்தது அந்த பலம் பொருந்திய குதிரை. குதிரை வணிகர் ஒருவர் அதை மன்னன் இரண்டாம் பிலிப்புக்கு விற்பதற்காகக் கொண்டு வந்தார். தன் குதிரைப் பிரிவுத் தளபதியை அழைத்து அந்தக் குதிரையை சோதிக்கச் சொன்னார் மன்னர்.

குதிரையின் பற்களை ஆராய்வதிலிருந்து, அதன் மீது ஏறி ஒரு சுற்று வலம் வருவது வரை பலவித சோதனைகளை முதலில் அந்தத் தளபதி செய்து பார்க்க வேண்டும். அவனுக்கு திருப்தி அளித்தால் மன்னர் குதிரைக்கான தொகை என்ன என்பதைத் தீர்மானிப்பார். அதற்கு வணிகன் ஒத்துக் கொண்டால் மன்னர் அந்தக் குதிரையில் ஏறி சவாரி செய்து பார்ப்பார். அதில் திருப்தி அடைந்ததால் அந்தக் குதிரையை வாங்கிக் கொள்வார். இதுதான் மரபு.

பின்னொரு காலத்தில் அந்த குதிரை சரித்திரத்தில் இடம் பெறப் போகிறது என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

(உலகம் உருளும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்