எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 8

By ஜி.எஸ்.எஸ்

சவுதி அரேபியா ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட மதம் மட்டுமே காரணமில்லை.

ஏமன் ஓர் ஏழை நாடு. என்றாலும் அது இருக்கும் இடம் காரணமாக ஒரு தனி முக்கியத்துவத்தை அது பெற்றிருக்கிறது. செங்கடலையும், ஏடன் வளைகுடாவையும் இணைக்கிறது பாப் அல்-மன்டப் ஜலசந்தி. இந்தப் பகுதியில்தான் ஏமன் இருக்கிறது.

உலகின் பல பெட்ரோலியக் கப்பல்களும் இந்த ஜலசந்தியின் வழியாகத்தான் செல்கின்றன. ஹவுதிக்கள் ஏமனைக் கைப்பற்றி விட்டால் இந்த ஜலசந்தி வழியாக நடைபெறும் தங்களது பெட்ரோலிய போக்குவரத்து தடைபடும் என்கிற அச்சம் எகிப்துக்கும், சவுதி அரேபியாவுக்கும் இருக்கிறது.

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற பலவித சக்திகள் போராடுகின்றன. நாட்டின் வடக்குப் பகுதியில் ஆட்சியாளர்களுக்கும், ஹவுதிக்களுக்குமிடையே ஆறு சுற்று சண்டை நடந்து முடிந்து விட்டது. தெற்கு தேசத்தில் ஆங்காங்கே தனிநாடு கோரி கலவரங்கள் நடந்து வருகின்றன.

அல் காய்தாவின் தாக்குதல்கள் வேறு இங்கு அதிகமாகி வருகின்றன. பூர்வ குடியினருக்கும், ராணுவ வீரர்களுக்கும் நடுவே நடைபெறும் அதிகார போராட்டங்கள் வேறு நிலைமையை உக்கிரமாக்குகிறது.

மேற்கத்திய நாடுகள் அல் காய்தாவின் மிக அபாயகரமான கிளையாக அரேபிய தீபகற்பத்துக்கான அல்-காய்தா பிரிவைக் கருதுகின்றன. காரணம் அதற்கு உள்ள தொழில்நுட்பத் திறமை மற்றும் ஊடுருவும் தன்மை. அதிபர் ஹதியின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா ஏமனில் உள்ள இந்தக் கிளையை அடக்க முயற்சி செய்து வந்தது. ஆனால் ஹவுதிக்கள் ஏமனில் முன்னேறிவரும் சூழலில் அமெரிக்கத் தாக்குதல்கள் கொஞ்சம் நின்றிருக்கின்றன.

போதாக்குறைக்கு சென்ற வருடக் கடைசியில் அங்கு புகுந்துள்ள ஐ.எஸ். ஜிஹாதிக் குழு “ அல்-காய்தாவை விட நாங்கள் வலிமையானவர்கள்’’ என்று அறிவித்தபடி சமீபகாலமாக தங்கள் மனித வெடிகுண்டுகளை ஏமனில் நடமாட விட்டிருக்கிறார்கள்.

ஹவுதி பிரிவினரில் பலரும் நாட்டைவிட்டு கடல் மார்க்கமாக வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். 1990-ல்தான் ஏமன் குடியரசாக உருமாற்றம் அடைந்தது. என்றாலும் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தாங்கள் அரசால் ஒதுக்கப்படுகிறோம் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்து வருகிறது.

போதாக்குறைக்கு மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையான நாடான ஏமனில் ஊழல், பலவீனமான ஆட்சி, தரமற்ற கட்டமைப்புகள் போன்றவையும் எரிகிற தீயில் எண்ணெய் விடுவதாக உள்ளன.

செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய நோக்கம் பாகுபாடின்றி போரில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது. உலகப்போர்களின் போது கூட போரிடும் எதிரணியினர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு உரிய மதிப்பை அளித்ததுண்டு.

ஆனால் ஏமனில் நடைபெறும் யுத்தத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தால் தனது பங்களிப்பை சரியாக ஆற்ற முடியவில்லை. மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களோடு இவர்களது விமானம் அங்கு தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் மிக கடினமாகவே இருந்தது.

காரணம் ஏமன் நாட்டின் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது சவுதி அரேபியாவைத் தலைமையாகக் கொண்ட ராணுவக் கூட்டமைப்பு. தொடர்ந்து 12 நாட்களுக்கு ஹவுதிக்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தியது இந்தக் கூட்டமைப்பு. ஏடனின் கடல்பகுதியில் வெளிநாட்டுப் போர்க் கப்பல் ஒன்று முகாமிட்டுள்ளதாக அங்கு வசிப்பவர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.

நகரத்தில் தொடர்ந்து மின் வெட்டு என்பதால் மக்களின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கையில் குழந்தைகளோடு தண்ணீரைத் தேடி தாய்மார்கள் சாலைகளில் நடக்கும் காட்சி மனிதாபிமானிகளுக்கு கண்ணீரை வரவழைக்கக் கூடிய ஒன்று.

போதாக்குறைக்கு பெட்ரோலிய வளமும், தண்ணீர் இருப்பும் குறைந்து கொண்டே வருகின்றன.

ஏமனின் செஞ்சிலுவைச் சங்கம் சுமார் 300 ஊழியர்களைக் கொண்டதாக இருக்கிறது. “போருக்கு நடுவே 24 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யுங்கள். அந்த நேரத்தில் உயிருக்கு ஊசலாடும் வீரர்களுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கிறோம்’’ என்று செஞ்சிலுவைச் சங்கம் மன்றாடியது. பலன் இல்லை.

சன்னி இனத்தவரை அதிகமாகக் கொண்ட சவுதி அரேபியா ஏமனின் தலைநகரைக் கைப்பற்றிய ஹவுதிக்களை விரட்ட பெருமுயற்சி எடுத்து வருகிறது. இதில் சவுதி அரேபியா வெளிப்படையாகத் தெரிகிறது என்றாலும் அது உண்மையில் ஐந்து நாடுகளில் கூட்டணி. பிற நான்கு வளைகுடா அரபு நாடுகள் - ஜோர்டான், மொராக்கோ, சூடான், எகிப்து.

ஹவுதிக்களின் ஆச்சர்யமான வெற்றிக்குப் பின்னணி எது? ஈரான் ஒரு பக்கம் இருக்க, அதைவிட முக்கியமான காரணம் மிக வியப்பான ஒன்று. ஐந்தாறு வருடங்களுக்குமுன் ஹவுதிக்களை அழிப்பதற்கு யார் நினைத்தாரோ அவருடனேயே டீல் போட்டிருக்கிறார்கள் ஹவுதிக்கள். மிக அதிக காலம் ஏமனை ஆட்சி செய்த அலி அப்துல்லா சலே இப்போது ஹவுதிக்களுக்கு உதவி வருகிறார். தன்னை ஆட்சியிலிருந்து நீக்கியதால் ஏற்பட்ட கோபம்.

அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அதிபர் ஹதி அவ்வளவு திறமையானவர் அல்ல. இன்றைய குழப்பத்துக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.

‘’எங்களுக்கு எந்த வெளிநாட்டு உதவி யும் வந்து சேரவில்லை என்று ஹவுதிக் கள் குரல் கொடுத்தாலும் அதில் உண்மை இல்லை என்பது பலருக்கும் தெரிந்திருக் கிறது. டெஹரானிலிருந்து (ஈரானின் தலை நகர்) அவர்களுக்கு பலவித உதவிகள் வந்து சேர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஏமனுக்கு ரோமானியர்கள் சூட்டிய பெயர் “அரேபியா ஃபெலிக்ஸ்’’. அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதி என்பதால் இந்தப் பெயராம்.

அதுசரி, “அரேபியா ஃபெலிக்ஸ்’’ என்றால் என்ன அர்த்தம்? “மகிழ்ச்சியான அரேபியா’’. என்னவோ போங்க!

(உலகம் உருளும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

46 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்