ஏமனில் சவுதி அரேபியாவின் தாக்குதலுக்குக் காரணமான ஹவுத்திகள் யார்?

By செய்திப்பிரிவு

ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக, ஏமன் மீது சவுதி அரேபியா நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர்.

ஹவுத்திகள் யார்?

ஹவுத்திகள், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள். இவர்கள் வடமேற்கு ஏமன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் எங்கிருந்து உருவானார்கள் என்பது பற்றி டவ்சன் பல்கலைக் கழக பேராசிரியர் சார்ல்ஸ் ஷ்மிட்ஸ் ஒரு முறை எழுதிய போது 1990-ம் ஆண்டுகளில் ஷபாப்-அல்-முமானின் (Believing Youth)என்ற குழுவிலிருந்து ஹவுத்தி கிளர்ச்சி படை உருவானதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பெரும்பாலும் ஷியா இஸ்லாமியத்தின் ஸயாதி கிளைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டவர்கள். பல நூற்றாண்டுகளாக ஏமனை ஆதிக்கம் செலுத்தி வந்தப் பிரிவாகும் இது. ஆனால் 1960-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சிவில் யுத்தத்திற்குப் பிறகு ஏமன் நாட்டு அரசால் இவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

2003-ம் ஆண்டு இராக் நாட்டின் மீது அமெரிக்கா தனது படையெடுப்பை நடத்த Believing Youth குழுவின் தலைவர்களில் ஒருவரான ஹுசைன் அல்-ஹவுத்தி அமெரிக்காவை கடுமையாக எதிர்த்ததோடு அப்போது ஏமன் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேயை கடுமையாக விமர்சித்தார் ஹுசைன் அல் ஹவுத்தி.

இதனையடுத்து ஹவுத்தியின் ஆதரவாளர்கள் அரசுப்படைகளுடன் மோதிய போது ஏமன் படைகளால் ஹவுத்தி கொல்லப்பட்டார். அதன் பிறகு இந்த அமைப்பு இவரது பெயருக்கு மாறியது.

ஆனாலும் இவரது மரணம் கிளர்ச்சிப் போக்கை மாற்றிவிடவில்லை. இவரது உறவினரான 33-வயது அப்துல் மாலிக் ஹவுத்தி தற்போது தலைவராக உள்ளார்.

பேராசிரியர் ஷ்மிட்ஸ் மேலும் இவர்கள் எப்படி சக்தி வாய்ந்த இயக்கமாக உருமாறினார்கள் என்பதை எழுதும் போது, அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்குள் நுழைந்த ஹவுத்திகள், மாணவ செயல்வீரர்கள் நிலையிலிருந்து கிளர்ச்சியாளர்களாக உருப்பெற்றனர். இவர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறையும் தொடர்ந்தது.

தொடர் சண்டைகளுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு அரசுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் அதிபர் சலேவுக்கு எதிராக பெரிய ஆர்பாட்டங்கள் அடுத்த ஆண்டே எழுந்த போது ஹவுத்திகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தது.

இதனைப் பயன்படுத்தி வடமேற்குப் பகுதியில் பெருமளவு கட்டுப்பாட்டை தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. மேலும் அதிபர் சலே ஆட்சியிலிருந்து இறங்கிய பிறகு தேசிய உரையாடல் மாநாட்டில் பங்கு பெற்றனர்.

2012-ஆம் ஆண்டு ஐ.நா.வின் அமைதி உடன்படிக்கைக்குப் பிறகு ஹாதி அதிபர் பதவி நாற்காலியில் அமர்ந்தார். அது முதல் ஹாதிக்கு பிரச்சினைகள் தொடங்கின. தெற்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் இயக்கம் தலைதூக்கியிருந்தது. அல்-காய்தா ஒரு புறம். இதனை விட ராணுவத்தில் பல தலைகள் முன்னாள் அதிபர் சாலேவுக்கு மறைமுக ஆதரவு அளித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தங்களது முந்தைய ‘முந்தைய வெற்றி’-யை மனதில் இறுத்தி தங்களது செயல்பாட்டை ஹவுத்திகள் இன்னும் இறுக்கினர். அரசுப் படைகளின் உதவியுடனேயே ஹவுத்திகள் ஏமன் தலைநகர் சனாவை நெருங்கினர்.இந்த வாரத்தில் சனாவில் தீவிர சண்டை மூண்டது.

இது இஸ்லாமியத்தின் உட்பிரிவு மோதலா?

இந்தக் கேள்விக்கு ஆம்/இல்லை என்று இருபதில்களும் பொருந்தும். ஹவுத்திகள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர் எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது சன்னி பிரிவினருக்கு எதிராக. ஏமன் நாட்டின் ஷியா சிறுபான்மையினரை பிரதிநித்துவம் செய்வதான கருத்தின் அடிப்படையில் அவர்கள் இயங்குவதாகக் கூறுகின்றனர். ஏமன் நாட்டில் உள்ள முஸ்லிம்களில் 35% ஷியா பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், எதார்த்தம் மிகவும் சிக்கலானது. ஸயாதி ஷியா பிரிவினர் மற்ற ஷியா இஸ்லாம் பிரிவிலிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். மைய நீரோட்ட ஷியா இஸ்லாமியம் 12 இமாம்களை அங்கீகரிக்கிறது என்றால் இவர்கள் 5 இமாம்களையே அங்கீகரிக்கின்றனர். இன்னொரு புரியாத புதிர் என்னவெனில் ஸயாதி ஷியா இஸ்லாமியம் இறையியல் ரீதியாக சன்னி இஸ்லாமியத்துடன் நெருக்கம் கொண்டது என்று கூறப்படுகிறது.

இங்கு இன்னொரு புரியாத புதிரையும் குறிப்பிடுவது அவசியம், ஏமனை 12 ஆண்டுகள் ஆண்ட அதிபர் சலே, ஸயாதி ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதே. இவரையும் ஹவுத்திகள் தாக்கினர். ஆனால், அதிகாரத்திலிருந்து இறங்கிய பிறகு ஹவுத்திகளுடன் இவர் நட்புறவு கொண்டுள்ளார் என்ற சந்தேகமும் பரவலாக இருந்து வருகிறது.

ஆகவே, இந்த கிளர்ச்சிப்படையின் நோக்கம் பற்றி ஆய்வாளர்கள் கூறும் போது முழுதும் ஷியா-சன்னி உட்போராக இதனை பார்க்க முடியாது என்கின்றனர்.

ஸயாதி அடையாளம் மற்றும் பொருளாதார அதிருப்தி ஆகியவற்றினால் இவர்கள் ஒன்று திரண்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த கிளர்ச்சிப்படைக்கு போதிய ஆதரவு இருப்பதற்குக் காரணம், ஏமன் மேட்டுக்குடியினருக்கு எதிரான ஒரு இயக்கமாக இதனை மக்கள் பார்ப்பதே என்று மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள சில்வனா டோஸ்கா என்பவர் கூறுகிறார்.

இந்த விவகாரத்தில் ஈரானின் பங்கு என்ன?

சவுதி அரேபியா மற்றும் பிற சன்னி இஸ்லாமிய நாடுகள் ஈரானின் உதவி ஹவுத்திகளுக்கு இருப்பதை மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றனர். ஆனால் ஹவுத்திகள் இதனை மறுத்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், சவுதி, ஏமன், மற்றும் ஈரான் நாட்டு அதிகாரிகளுடன் பேசிய போது, அனைவரும் ஒருகுரலில் ஈரான், ஹவுத்திகளுக்கு பணம், பயிற்சி, ஆயுதம் அளிப்பதாக குற்றம்சாட்டினர்.

இருந்தாலும் ஈரானின் உதவி பற்றி உறுதியாக ஒன்றும் கூற முடியவில்லை.

இதில் அமெரிக்காவின் நலன் என்னவென்பதையும் தெளிவாக கணிக்க முடியவில்லை. காரணம் ஏமனில் அமெரிக்காவின் பெரிய கவலை அல்-காய்தாவே.

ஈரான் உதவி ஹவுத்திகளுக்கு கிடைப்பதை சற்றே ஏமன், சவுதி அரேபியா ஊதிப்பெருக்கக் காரணம் அமெரிக்க உதவியைப் பெறவே.

தற்போதைய சன்னி ஆதரவு ஏமன் அரசு கவிழ்ந்தால், சவுதி அரேபியாவின் உதவியுடன் வாழ்ந்து வரும் ஏமன் நாடு அதனை இழக்கும். அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணும்.

எது எப்படியிருந்தாலும் ஏமன் நாட்டை ஒரு மிகப்பெரிய பிரச்சினை சூழ்ந்துள்ளதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.


[இந்தக் கட்டுரை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஆடம் டெய்லர் என்பாரால் எழுதப்பட்டது.

தமிழில்: ஆர்.முத்துக்குமார்]

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்