பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 3

By ஜி.எஸ்.எஸ்

1337-ல் தொடங்கி 1451 வரை நடைபெற்றது ‘நூறு வருட யுத்தம்’. (கணிதப் புலிகள் கன்ஃப்யூஸ் ஆக வேண்டாம். நூறைத் தாண்டினாலும் அதன் பெயர் நூறு வருட யுத்தம்தான்). பிரான்ஸ் எல்லைப் பகுதியை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்று வெறித்தனமாக ஆசைப்பட்டது இங்கிலாந்து. பிரான்ஸ் கடுமையாக இதை எதிர்த்து நின்றது. இந்த இரண்டு நாடுகளின் மோதலில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். எண்ணிலடங்காத பாதிப்புகள் உண்டாயின. போதாக்குறைக்கு அந்த சமயம் பார்த்து ப்ளேக் நோய் வந்தது. கொள்ளை நோய் என்பதால் இதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். பிரான்ஸ் இங்கிலாந்தின் வசப்பட்டது.

கொஞ்சம் விட்டுவிட்டுதான் என்றாலும் ‘கிட்டத்தட்ட’ தொடர்ச்சியாகவே போர்கள் நடந்து கொண்டே இருந்தன. சில குறிப்பிட்ட பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதிலிருந்து வாரிசுரிமை தொடர்பான சிக்கல்கள் வரை பல காரணங்களும் இந்த நூறு வருடப் போர் அணையாமல் தொடர்ந்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தன.

பிரான்ஸ் மன்னர்களுக்கு நிதி நிலைமை பிரச்னை இல்லை. மேற்கு ஐரோப்பாவின் மிகுந்த மக்கள் தொகை கொண்ட சக்தி வாய்ந்த நாடு அது. ஒப்பிடும்போது ஆங்கிலேய அரசாங்கம் அளவிலும் குறைவு - மக்கள் தொகையிலும் குறைவு. என்றாலும் ஆங்கில ராணுவம் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாக இருந்தது. அவர்கள் மிகத் துல்லியமாக அதிகப்படி நீளம் கொண்ட அம்புகளை தொலைதூரத்துக்கு எறிவதில் கில்லாடிகளாக இருந்தார்கள். இதன் காரணமாக பலமுறை அவர்களால் ஜெயிக்க முடிந்தது - கடல் வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் இரண்டிலும்.

சில பகுதிகள் (முக்கியமாக Duchy of Guynne என்ற பகுதி) யாருக்கு என்பதில் யுத்தம் தொடங்குவதும், ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு ஒத்துக் கொண்டு பிரான்ஸ் மன்னன் அதை இங்கிலாந்துக்கு அளிப்பதும், பிரான்ஸ் மன்னனின் வாரிசு போரில் வென்று மறுபடியும் அந்தப் பகுதிகளை பிரான்ஸுடன் இணைப்பதுமாக போர் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

ராணுவ ரீதியாக பலமுறை வெல்ல முடிந்தாலும் இங்கிலாந்தினால் அரசியல் வெற்றிகளை சுவைக்க முடியவில்லை. பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்தனர். இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் ஹென்றி பிரான்ஸ் நாட்டை வென்றான். வருங்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவோ என்னவோ பிரான்ஸ் மன்னனான ஐந்தாம் சார்லஸின் மகளை மணந்து கொண்டு ஒரு மகனுக்கு அப்பா ஆனான். ‘’வருங்காலத்தில் என் மகன்தான் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் அரசன்’’ என்றபடி கண்களை மூடினான். மறுபடி திறக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில்தான் பிரான்ஸ் வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்த ஜோன் ஆஃப் ஆர்க் சிலிர்த்தெழுந்தாள்.பிரான்ஸில் உள்ள ஆர்லியன்ஸ் என்ற பகுதியில் ஒரு கிராமப் பெண்ணாக வளர்ந்தாள் ஜோன் ஆஃப் ஆர்க் என்று பின்னாளில் பிரபலமான அந்த வீராங்கனை. பதிமூன்று வயதிலேயே அவரால் பல தெய்வீக தூதர்களின் குரல்களைக் கேட்க முடிந்ததாம். மைக்கேல், மார்கரெட், கேதரின் போன்ற இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து நேரடியாக அவருக்கு செய்திகளை அளித்தனராம்.

தன் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதைக்கூட அந்தக் குரல்கள் கூறின என்றாள் அவள். இங்கிலாந்துக்கு எதிராக 1429-ல் தன் தலைமையில் ஒரு படை புறப்படும் என்றும், அந்தப் போரில் தனக்கு பெரும் காயம் ஏற்படும் என்றும் அவர் கூறியது பின்னாளில் அப்படியே பலித்தது.

“எனக்கென்று ஒரு தெய்வீக வாளை கடவுள் அளித்திருக்கிறார். அது தூய கேதரின் மாதா கோவிலருகே புதைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஐந்து சிலுவைக் குறிகள் இருக்கும்’’ - இப்படி தனக்கு ஒரு தெய்வீக செய்தி வந்ததாக அவர் கூற, குறிப்பிட்ட இடம் தோண்டப்பட்டது. அங்கே ஒரு துருப்பிடித்த வாள். அதை சுத்தப் படுத்தியபோது, அதில் ஐந்து சிலுவைக் குறிகள் இருந்தன!

நலிவடைந்திருந்த பிரான்ஸை இங்கிலாந்திடமிருந்து மீட்பதற்கு மிகவும் முனைந்தார் ஜோன். தன் வீரத்திலும், பிரச்சாரத்திலும் சிறந்து நின்ற அவரை ஒரு சாகசக் கதாநாயகியாகவே பார்த்தனர் பிரெஞ்சு மக்கள்.

இங்கிலாந்து கடும் கோபம் கொண்டது. பிரான்ஸின்மீது தான் கொண்ட பிடிமானம் ஜோன் காரணமாக நழுவுகிறதே! இதுகூட ஒருவிதத்தில் இயல்பானதுதான். ஆனால் பிரான்ஸின் ஒரு பகுதியான பர்கண்டி என்ற பகுதியை ஆட்சி செய்தவர்களும் ஜோனை வெறுக்கத் தொடங்கியது காலத்தின் கொடுமை.

‘நேற்று பிறந்த ஒருத்தி தங்களைவிட புகழ் பெறுவதா?’ என்ற பொறாமை கொந்தளிக்க ஜோனை ரகசியமாக சிறை பிடித்து ஆங்கிலேயர்களிடம் விற்றுவிட்டார்கள் பர்கண்டி ஆட்சியாளர்கள். பதிலுக்குப் பத்தாயிரம் பிராங்க் தொகையை ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். ஆங்கிலேய அரசு ஜோன் மீது வழக்கு தொடுத்தது.

(இன்னும் வரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

4 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

46 mins ago

ஓடிடி களம்

48 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்