உலக மசாலா : இடது கால் ஹூ!

By செய்திப்பிரிவு

ஹு ஹுயுவான் சீனாவில் வசிக்கிறார். பத்து மாதக் குழந்தையாக இருந்தபோது மூளை வாதத்தால் பாதிக்கப்பட்டார். தலை, இடது காலைத் தவிர உடலின் பிற பாகங்கள் அசைவற்றுப் போய்விட்டன. ஹுவின் அம்மா, மிகுந்த பொறுமையோடும் அக்கறையோடும் கவனித்துக்கொண்டார்.

மருந்துகளும் அவரது பயிற்சியும் ஹுவை ஓரளவு முன்னேற்றின. தலையையும் இடது காலையும் வைத்துக்கொண்டு எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டார் ஹு. பிறகு பேசவும் படிக்கவும் இடது காலால் எழுதவும் பழகினார். ஒவ்வொரு வார்த்தையும் ஆயிரம் முறை சொல்லிக் கொடுப்பார் அவரது அம்மா.

வளர்ந்த பிறகு தன்னுடைய கற்பனைகளை எழுத்தில் கொண்டு வர நினைத்தார் ஹு. கம்ப்யூட்டரில் இடது காலால் டைப் செய்து, ஒரு நாவலை எழுதி வருகிறார். ஒரு நிமிடத்துக்கு 20 முதல் 30 வார்த்தைகள் வரை வேகமாக காலால் அடித்துவிடுகிறார். 60 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஆறு அத்தியாயங்கள் தயாராக இருக்கின்றன. இன்னும் 2 அத்தியாயங்கள் எழுதி, நாவலாசிரியர் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறார் 21 வயது ஹு.

வாழ்த்துகள் ஹு!

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் பூமிக்கு அடியில் மிகப் பெரிய பைக் பார்க் அமைக்கப்பட்டிருக்கிறது. பைக் ஓடும் பாதைகளும் 45 சிறு குன்றுகளும் இங்கே இருக்கின்றன. பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் 500 பைக்குகளை இங்கே ஓட்டிச் செல்ல முடியும். ஒரே அளவிலான வெப்பநிலை நிலவுவதால் ஆண்டு முழுவதும் இங்கே பந்தயங்களை நடத்த முடியும். 42 ஆண்டுகள் சுரங்கங்களை வெட்டி, 17 மைல்கள் தூரத்துக்கு இந்த மெகா பைக் பார்க் அமைக்கப்பட்டிருக்கிறது. பைக் பந்தயங்கள் தவிர, இன்னும் சில விளையாட்டுகளும் நிகழ்ச்சிகளும் இங்கே நடைபெற்றுவருகின்றன.

பூமிக்குள்ளேயும் பிளாட் போட்டு விற்க ஆரம்பிச்சிடாதீங்க…

ரொட்டி மீது தடவிச் சாப்பிடக்கூடிய சாக்லெட் சுவை கொண்ட உணவுப் பொருள் நுடெல்லா. பிரான்ஸில் உள்ள ஒரு தம்பதிக்கு நுடெல்லா மீதுள்ள ஆர்வம் அதிகம். தங்கள் பெண் குழந்தைக்கு நுடெல்லா என்று பெயரிட்டுவிட்டனர். சட்டப்படி பெயரைப் பதிவு செய்வதற்காக நீதிமன்றம் சென்றனர். நுடெல்லா என்ற பெயருக்கு நீதிபதி எதிர்ப்புத் தெரிவித்தார்.

‘ஒரு உணவுப் பொருளை குழந்தையின் பெயராக வைக்கக்கூடாது. நாளை இந்தக் குழந்தைக்கு அந்தப் பொருள் பிடிக்காவிட்டால், குழந்தைக்குப் பெயர் சங்கடமாக மாறிவிடும். உங்கள் விருப்பத்தை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். குழந்தையின் பெயர் சூட்டலில் காட்டக் கூடாது. வேண்டும் என்றால் ’எல்லா’ என்று பெயரிட்டுக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார் நீதிபதி.

நியுஸிலாந்திலும் ஐஸ்லாந்திலும்கூட பெயர் வைப்பதற்கு நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குழந்தைகளின் நலன் கருதி, இதுபோன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருப்பது நல்லது என்றே பலரும் சொல்கிறார்கள்.

பெயர் வைப்பது தனிப்பட்டவர் விருப்பம்தான்… அதேநேரம் கொஞ்சம் பொறுப்பாகவும் பெயர் வைக்கலாமே…

பனிப் பாலைவனமாக இருக்கும் அண்டார்டிகாவில் பாதி நாட்கள் சூரியனே இல்லாமல், இருளாக இருக்கும். அங்கே மீன்கள் போன்ற உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இல்லை என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. கடந்த வாரம் 2,640 அடி ஆழத்துக்கு ஒரு பனிப்பாறையை உடைக்கும்போது, மீன் ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மிக மிகக் குறைவாக உணவு கிடைக்கக்கூடிய ஒரு பகுதியில் உயிர்கள் வாழ்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பே இல்லை. ஆனால் இந்த மீன் எவ்வாறு அங்கே வாழ்ந்து வருகிறது என்று வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில்தான் விடை கிடைக்கும் என்கிறார்கள்.

மனிதனை ஆச்சரியப்படுத்திக்கிட்டே இருக்கு இயற்கை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்