சிலிர்த்து நிற்கும் சிங்கப்பூர் - 6

By ஜி.எஸ்.எஸ்

சிங்கப்பூர் சுதந்திரமடைந்தவுடன் புதிய நாட்டின் பிரதமர் மீண்டும் லீ குவான் யூ. (சிங்கப்பூரை ஆட்சி செய்வது பிரதமர்தான். ஆனால் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு நம் ஜனாதிபதியைவிட அதிக அதிகாரங்கள் உண்டு. அங்கு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது மக்கள்தான். நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது, நாட்டின் இயற்கை வளங்களைக் காப்பது போன்ற விஷயங்களில் அவருக்கு வீட்டோ அதிகாரம்கூட உண்டு. என்றாலும் பிரதமரைவிட அதிகாரங்கள் மிகக் குறைவு).

இவ்வளவு சின்னப் பரப்பையும், குறைவான இயற்கை வளங்களையும் கொண்ட சிங்கப்பூர் பெரிய அளவில் வளர்ந்துவிடாது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் நடந்ததே வேறு.

சிங்கப்பூரின் பொருளாதாரம் வெகுவேகமாக வளர்ந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் செழித்தது. ஆனால் அரசு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகளை விதித்து சமூகத்தைத் தொடர்ந்து தன் பிடியில் வைத்துக் கொண்டிருக்கிறது.

1990-ல் ஒரு திருப்பம். லீ குவான் யூ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக விமர்சனங்கள் எழுந்திருந்தாலும், நவீன சிங்கப்பூரின் சிற்பி இவர்தான் என்பதில் வேறு கருத்துகள் இல்லை.

கோ சோக் டோங் என்பவர் அடுத்த பிரதமர் ஆனார். கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப் பட்டன. இருபது வருடங்களை அமெரிக்காவில் கழித்தவர் இவர். நிர்வாணப் புகைப்படங்களுக்குப் பெயர்போன ‘ப்ளே பாய்’ பத்திரிகைக்கு சிங்கப்பூரில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது டோங் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அதற்காக கருத்து சுதந்திரத்துக்கு முழு மதிப்பு கொடுத்தவர் என்றும் இவரைக் கூறிவிட முடியாது. சிங்கப்பூர் அரசை எதிர்மறையாக விமர்சித்த சில தொலைக்காட்சிச் சானல்களுக்கு இவர் தடை விதித்தார். அதே சமயம் எம்.டி.வி., டிஸ்கவரி போன்ற சானல்களில் ஆசியத் தலைமையிடம் சிங்கப்பூரில்தான் அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் பாடுபட்டார். 1998-ல் பல ஆசிய நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்தது. குறைவான மக்கள் தொகை, குறைவான இயற்கை வளங்கள் ஆகியவற்றைக் கொண்ட சிங்கப்பூர் மிகவும் உழைத்தால்தான் தங்கள் வளர்ச்சி விகிதத்தைத் தொடர முடியும் என்ற நிலை உண்டானது. முக்கியமாக ஹாங்காங், சிங்கப்பூருக்கு வணிகத்தைப் பொறுத்தவரை கடும் போட்டியை அளித்தது. என்றாலும் நிலைமையை சமாளித்து எழுந்து நின்றது சிங்கப்பூர்.

கோ சோக் டோங் ஆட்சியில் மேலும் பல சிக்கல்கள் முளைத்தன. ஜென்மா இஸ்லாமியா என்னும் தீவிரவாத அமைப்பின் மிரட்டல்கள், 2003-ல் சார்ஸ் கொள்ளை நோய் என்று பல நெருக்கடிகள். இதைத் தொடர்ந்து 2004-ல் பிரதமரானார் லீ ஸெயின் லூங். இவர் லீ குவான் யூவின் மகன்தான். 2006-ல் நடைபெற்ற பொதுத் |தேர்தல் ஒருவிதத்தில் முக்கியமானது. பிரச்சாரம் இணையம் மூலமாக பரவலாகச் செய்யப்பட்டது. அதிகாரபூர்வ ஊடகங்களைத் தாண்டியும் மக்களை அடைய முடியும் எனும் நிலை புதிய உற்சாகத்தை உண்டாக்கியது. 84 நாடாளுமன்றத் தொகுதிகளில், 82-ஐ வென்றது மக்கள் செயல் கட்சி (பிஏபி).

2011 தேர்தல் வேறொரு விதத்தில் முக்கியமானது. ஆட்சி செய்த பிஏபி ‘இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. நம் நாட்டின் அடுத்த தலைமுறைத் தலைவர்களை இனம் காட்டும் தேர்தல் இது’ என்றது. சுதந்திரத்துக்குப் பிறகு அதிகமான தொகுதிகளில் போட்டி நடைபெற்றது இந்தத் தேர்தலில்தான். 87 தொகுதிகளில், 82-ல் போட்டி இருந்தது. 81 தொகுதிகளை வென்று ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றாலும் வேறொரு கட்சி (பாட்டாளிக் கட்சி) 6 இடங்களை வென்றதே சிங்கப்பூர் அரசியலில் வியப்புக்குரிய விஷயம்தான்.

கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட நாடு சிங்கப்பூர். தெருவில் குப்பை போடக் கூடாது. சூயிங்கத்துக்குத் தடை. தீவிர பெண்ணியக் கொள்கைகள் கொண்ட மகளிர் இதழ்களுக்கு அச்சிட அனுமதி கிடையாது. நாளிதழ்களில் ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக எதிர்கொள்ளப்படும்.

சிங்கப்பூர் சட்டம் என்பது பொதுவாக பிரிட்டிஷ் சட்டமுறைகளைப் பின்பற்றுகிறது. ஆனாலும் சில வித்தியாசங்கள் உண்டு. இன்னமும்கூட திருட்டு, கற்பழிப்பு போன்ற சில குற்றங்களுக்கு சவுக்கடி தண்டனை உண்டு. கொலை செய்தால் மரண தண்டனை மட்டுமே. சில வகை போதை மருந்துக் கடத்தலுக்கும் ஆபத்தான ஆயுதப் பதுக்கலுக்கும் கூட மரண தண்டனை உண்டு.

சிங்கப்பூரில் அதிகம் பின்பற்றப்படுவது புத்த மதம். என்றாலும் கிறிஸ்தவம், இந்து மதம், இஸ்லாம், தாவோயிஸம் போன்ற மதங்களும் கணிசமாகவே உள்ளன. சிங்கப்பூரில் உங்கள் இஷ்டத்துக்கு வீடு கட்டிக் கொள்ள முடியாது. பத்தில் ஒன்பது பேர் அரசு வீட்டு அடுக்கங்களில்தான் வசிக்கிறார்கள்.

1964-ல் உண்டான இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது சிங்கப்பூர் அரசு. வீட்டு வசதி வாரியம் கட்டித்தரும் அடுக்கத்தை வாங்குபவர்கள் இன விகிதப்படி இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு அடுக்குமாடிக் கட்டிடத்திலும் அனைத்து முக்கிய இனத்தவர்களும் இருக்க வேண்டும்.

சிங்கப்பூரின் ஜனநாயகம் கொஞ்சம் வித்தியாசமானது. அரசு மருத்துவமனைகளில்கூட பொருளாதாரத்துக்குத் தகுந்த மாதிரிதான் வசதிகள். எந்தக் கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்குரிய படுக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என்றாலும் மருத்துவ சேவைகள் ஒரே மாதிரிதான்.

இப்போதைக்கு சிங்கப்பூர் அரசை பயமுறுத்திக் கொண்டிருக்கும் வேறொரு விஷயம் எந்த அளவுக்கு வெளிநாட்டினரை நிரந்தரமாகத் தங்க அனுமதிப்பது என்பதுதான். சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி இனப்பெருக்க விகிதம் என்பது 1.2 சதவீதமாக இருக்கிறது. ஆனால் வேலையில் அமர்த்தப்பட வேண்டியவர்களின் விகிதமோ 2.1 ஆக இருக்கிறது. (உலகின் மிகக் குறைந்த இனப்பெருக்க நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று).

வேலைக்குத் தேவை என்பது ஒருபுறமிருக்க வெளிநாட்டு இளைஞர்களை அனுமதிக்காவிட்டால் சிங்கப்பூர் மக்களின் சராசரி வயது அதிகமாகிவிடும். முதியவர்களின் சதவீதம் பெருகிவிடும். என்றாலும் வணிக அளவில் மிகச் சிறந்த நல்லுறவை சிங்கப்பூர் வளர்த்து வருகிறது. உலகில் ஊழல் மிகமிகக் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் மதிப்பிடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

55 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்