கொலைதேசமா கொலம்பியா? - 2

By ஜி.எஸ்.எஸ்

கொலம்பியா ஒரு விவசாய நாடு. எல்லாவித தட்ப வெப்ப சூழல்களும் அதன் பல்வேறு பகுதிகளில் நிலவுவதால் விதவிதமான பயிர்களைப் பயிரிட முடிகிறது. பிரேசிலுக்கு அடுத்ததாக உலகிலேயே இங்குதான் காபித் தயாரிப்பு மிக அதிகம். அரிசி, உருளை, வாழை... இவற்றோடு மற்றொரு பயிரும் கணிசமான அளவுக்குப் பயிரிடப்பட்டதில்தான் கொலம்பியா ஆட்டம் கண்டது. அது கஞ்சாச் செடி!

உலகின் மொத்த போதைப் பொருள்களில் 75 சதவிகிதம் கொலம்பியாவிடமிருந்து மட்டுமே கிடைக்கிறது. அதுவும் கடத்தல் மூலமாக.

‘’நார்கோ டெமாக்ரஸி’’ என்ற புதிய வார்த்தையையே கொலம்பிய அரசுக்கு சூட்டுமளவுக்கு போதை மருந்து வியாபாரமும், அரசியலும் சாரையும், நாகமும் போல பின்னிப் பிணைந்திருக்கின்றன.

கொலம்பியாவின் உண்மை முகத்தைக் காட்டுகின்ற வகையில் வெளியான திரைப்படங்களில் இரண்டு குறிப்பிடத்தக்கவை.

கொலம்பியாவின் கிராமப் பகுதியில் வசிக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். ஒருநாள் அவர்கள் தங்கள் பள்ளிக்கு அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது வெகுதூரம் அந்தப் பந்தை தட்டிச் செல்ல, அது ஒரு சுரங்கப் பகுதியில் விழுந்து விடுகிறது. அப்போதுதான் அவர்கள் தங்கள் நாட்டின் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். இளம் வயதினரின் கண்ணோட்டத்தி லிருந்து கொலம்பியாவின் வேதனையான உண்மைகள் பதிவாகின்றன. இது ‘கலர்ஸ் ஆஃப் தி மவுண்டன்’ என்ற திரைப் படத்தின் கதை.

மற்றொரு திரைப்படம் ‘ரோட்ரிஜோ டி நோ ஃப்யூச்சர்’. கொலம்பியாவில் உள்ள மிக வித்தியாசமான ஒரு கட்டிடத்தின் மேல் மாடியிலிருந்து விழத் தொடங்குகிறான் ஓர் இளைஞன். காலம் திடீரென நின்று போகிறது. அவன் கடந்த கால வாழ்க்கையில் நடந்தவை அவன் மனதில் விரிகின்றன. போதை மருந்துக் கூட்டத்தில் அவன் சிக்கிச் சீரழிந்த கட்டங்களை நினைத்துப் பார்க்கிறான். ஒரு பிரமாதமான ட்ரம்ஸ் இசைக் கலைஞராக வரவேண்டுமென்பது அவன் விருப்பம். ஆனால் சிவமணியாக நினைத்த அவனுக்கு அவமானங்கள் மட்டுமே காத்திருக்கின்றன.

இந்தத் திரைப்படத்தின் முக்கிய நடிகர்கள் நடிப்பைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தவர்கள் அல்ல. அந்த நாட்டிலுள்ள சேரிகளில் வசித்தவர்கள். பல கொடுமைகளை கண்முன் பார்த்து வாழ்ந்தவர்கள். இதனால்தானோ என்னவோ படம் மிக மிக இயற்கையாக அமைந்திருந்தது.

கொலம்பியாவின் நிலையை உலகுக்கு உணர்த்தியதில் இந்தத் திரைப்படங்களுக்கும் பங்கு உண்டு.

ஸேம் சைடு கோல் போட்டதால் உயிரிழந்தவர் ஒரு எஸ்கோபார் என்றால், வேறொரு எஸ்கோபார் வேறொரு விதத்தில் கொலம்பியாவின் இமேஜைக் குழிபறித்தான். இவன் பாப்லோ எஸ்கோபார்.

கொலம்பியாவின் மிகப் பெரும் போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார்.

வெறும் 30 டாலர் மதிப்புள்ள கொக்கெய்ன் பேஸ்டை வாங்கி விற்கத் தொடங்கினான் பாப்லோ எஸ்கோபார். பின்னால் ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் எழும்பு வதற்கான முதல் அடியாக இது இருந்தது. பழைய விமானங்களின் டயர்களுக்குள் இந்த போதைப் பொருளை வைத்துக் கடத்தத் தொடங்கினான். அமெரிக்காவில் போதைப் பொருளுக்கான டிமான்ட் அதிகமாகிக் கொண்டே வந்ததால் அங்கு தன் கடத்தலைக் குறியாக்கிக் கொண்டான்.

நாளடைவில் அவன் கடத்தல் வணிகம் கடத்தல் சாம்ராஜ்யமாக விரிவடைந்தது.

விமானம் ஓட்டத் தெரிந்தவன் என்பதோடு பல விமானங்களுக்குச் சொந்தக்காரனும் ஆனான். எல்லாமே போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்தவை.

எதற்கும் இருக்கட்டுமே என்று ஆறு ஹெலிகாப்டர்களையும் வாங்கி வைத்துக் கொண்டான்! கொலம்பியாவுக்கும், பனாமாவுக் குமாக இவன் செய்த பயணங் களும், கள்ளப் பயணங்களும் ஏராளம்.

நாளடைவில் விமானங்களுடன் இரண்டு நீர்முழ்கிக் கப்பல்களையும் வாங்கிக் கொண்டான்.

இவனுக்கெதிரான வழக்குகளுக்குக் குறைவில்லை. தொடக்கத்தில் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து சரிகட்ட இவன் முயல, அது முடியாமல் போனது. என்றாலும் காவல் அதிகாரிகளுக்கு அதிகத் தொகை கொடுத்து வழக்கை நீர்த்துப் போகச் செய்தான்.

‘வெள்ளியைப் பெற்றுக் கொள் அல்லது ஈயத்தைப் பெற்றுக் கொள்’’ என்பதுதான் அவன் சித்தாந்தம். ஸ்பானிஷ் மொழியில் இதை ‘ப்ளாடா ஓ ப்ளோமோ’’ என்பார்கள். அதாவது பணத்தை வாங்கிக்கொள் அல்லது துப்பாக்கிக் குண்டுகளை வாங்கிக் கொள். 1983-ல் கொஞ்சமாக அரசியலில் கால் பதித்தான்.

கொலம்பிய லிபரல் கட்சியில் சேர்ந்து அதன் மேல்சபை போன்ற அமைப்பில் உறுப்பினராக எஸ்கோபார் விளங்கும் கூத்தும் நடைபெற்றது. ஸ்பெயின் மூலமாக ஐரோப்பாவுக்கும் போதைப் பொருள்களை கடத்தத் தொடங்கினான்.

எக்கச்சக்கமான ஒரு கலக்கமும் கொடுத்தான். நூற்றுக் கணக்கானவர்களைக் கொலை செய்தான். 1989ல் ஐனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட லூயி கார்லோஸ் கலன் என்பவர் படுகொலை செய்யப்பட்டதில் பாப்லோ எஸ்கோபாருக்குப் பங்கு உண்டு என்று பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றத்தை (உள்ளே இருக்கும் நீதிபதிகளுடன் சேர்த்து) தகர்க்கச் செய்தானாம்.

வியாபாரத்தின் உச்சகட்டத்தில் ஒரு நாளைக்கு ஆறு கோடி டாலர் சம்பாதித்தது எஸ்கோபாரின் கூட்டம்.

கொலம்பியா மற்றும் அமெரிக்க அரசுகளின் கடும் பகைவனாக இருந்தான் என்றாலும் உள்ளூர் ஏழைகளின் மத்தியில் கதாநாயகனாகவே விளங்கினான் ’நாயகன்’ பாப்லோ எஸ்கோபார். மேற்கு கொலம்பியாவில் மருத்து வமனைகள், பள்ளிகள், மாதா தோவில்கள் ஆகியவற்றைக் கட்டினான். எனவே, இந்த ‘’ராபின் ஹுட்டை’’ சட்டத்திலிருந்து பாது காக்கப் பலரும் உதவினார்கள்.

(இன்னும் வரும்..)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்