உலக மசாலா: மனிதர்களையே அச்சுறுத்தும் பலே கழுகுகள்!

By செய்திப்பிரிவு

மெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலை கழுகு (Bald Eagle). ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்தக் கழுகை நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அலாஸ்காவிலுள்ள அனலாஸ்கா தீவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்கள் குடியிருப்புகளிலேயே, புறாக்களைப்போல வெண்தலை கழுகுகளைத் தினமும் தரிசித்துவருகிறார்கள். இங்கே 4,700 மக்களும் அழகான 600 வெண்தலை கழுகுகளும் வசித்துவருகின்றன. இங்குள்ள மக்கள் கழுகுகளை மற்றவர்களைப்போல அழகாகவும் ஆச்சரியமாகவும் கண்டுகளிப்பதில்லை. ஏனென்றால் எந்த நேரமும் கழுகுகளால் மனிதர்கள் தாக்கப்படலாம். அமெரிக்காவிலேயே கழுகுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தத் தீவுவாசிகள்தான். மனிதர்கள் வசிப்பிடங்களிலேயே கழுகுகளும் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. சாதாரணமாக வெளியே வந்தாலும் கூடுகளுக்கு ஆபத்து என்று நினைத்துக்கொண்டு, ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. வெண்தலை கழுகுகள் பெரும்பாலும் உயரமான மரங்களில்தான் கூடுகளைக் கட்டக்கூடியவை. ஆனால் அனலாஸ்கா தீவில் மரங்கள் அதிகம் இல்லை. அதனால் மனிதர்களின் கட்டிடங்கள், கப்பல்கள், இயந்திரங்கள் போன்றவற்றில் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. இவை மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பதால் பிரச்சினைகள் உருவாகின்றன. தீவு முழுவதும் கழுகுகள் இருக்கின்றன என்ற எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் தெரியாமல் சில இடங்களில் நுழைந்துவிட்டால், அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது. கழுகுகளால் தாக்கப்படும் 10 மனிதர்களில் 6 பேருக்குத் தீவிரமான சிகிச்சை தேவைப்படுகிறது. “ஆண்டு முழுவதுமே கழுகுகளால் எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தாலும் அடை காக்கும் காலமான கோடையில்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிறோம். அனலாஸ்கா தீவு 80 மைல் நீளம் கொண்டது. இதில் மனிதர்கள் வசிக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கழுகுகள் வசிக்கின்றன. இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால், கழுகுகளுக்கு உணவுப் பிரச்சினை ஏற்படுவதில்லை. படகுகள் மீன்களைப் பிடித்துக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்ததும் கழுகுகள் தங்களுக்குத் தேவையான இரையை எடுத்துக்கொள்கின்றன. பெரும்பாலான அனலாஸ்கா மக்கள் கழுகுகளை நேசிக்கவே செய்கிறார்கள். சிலர் புறாக்களைப்போல் கழுகுகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புறா மனிதர்களைக் கண்டதும் பறந்துவிடும், ஆனால் இந்தக் கழுகுகள் சிறிதும் மனிதர்களுக்குப் பயப்படுவதில்லை. அதிலும் இங்கிருக்கும் தபால் நிலையத்தில்தான் அதிக அளவில் கழுகுகள் கூடுகளைக் கட்டியிருக்கின்றன. தலைக்கவசம், தோல் ஆடைகள் இன்றி தபால் நிலையத்துக்குள் செல்பவர்களை, நிச்சயம் மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்குக் கழுகுகளின் தாக்குதல் ஆக்ரோஷமாக இருக்கும். இந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தந்திக் கம்பங்கள், வீடுகளின் கூரைகள், வாகனங்களில் அமர்ந்திருக்கும் கழுகுகளைக் கண்டு ஆச்சரியமடைகிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு கழுகால் தாக்கப்படும்போதுதான் இந்த மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார்கள்” என்கிறார் காவல்துறை அதிகாரி ஜெனிஃபர் ஷாக்லே.

மனிதர்களையே அச்சுறுத்தும் பலே கழுகுகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்