அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் கான்சாஸ் நகரத்தில் இந்திய பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இனவெறி காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, கான்சாஸ் நகரத்தின் ஒலாதே பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸை, அங்குவந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

''என் நாட்டை விட்டு வெளியேறு'' என்று கூறிக்கொண்டே இந்தியப் பொறியாளரை அந்த நபர் சுட்டதாகக் கூறப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட நபர் அமெரிக்க நிறுவனமொன்றில் விமானப் போக்குவரத்து பொறியாளராகப் பணிபுரிந்த 32 வயதான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா எனத் தெரியவந்துள்ளது. இந்த கொலையை செய்தவர் ஆடம் பூரிண்டன் எனும் கடற்படை வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "புதன்கிழமை மாலை ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா, தன்னுடைய நண்பருடன் ஆஸ்டின் மதுபான விடுதியில் அமர்ந்தபடி, கான்சாஸ் பல்கலைக்கழக அணி விளையாடிய கூடைப் பந்தாட்டப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது 51 வயது மதிக்கத்தக்க கடற்படை வீரர் ஆடம், தனது கைத்துப்பாக்கியை ஏந்தியபடி ஆவேசமாக அங்கு வந்தார். வந்து 'என்னுடைய நாட்டை விட்டு வெளியேறு' என்று இந்தியர்களைப் பார்த்துக் கூறிக்கொண்டே சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர் அலோக் மதாசனி மற்றும் தாக்குதலைத் தடுக்க வந்த இயன் கிரில்லாட் ஆகிய இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலைத் தடுக்க முயன்றபோது காயமடைந்த இயன் கிரில்லாட்

கான்சாஸ் விரைந்தார் இந்தியத் தூதர்

இனவெறித் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், சம்பவம் நடைபெற்ற கான்சாஸ் நகரத்துக்கு விரைந்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தாக்குதலில் காயமடைந்த மற்றொரு இந்தியரான அலோக் மதாசனி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

''இறந்தவரின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்'' என்று இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு இந்தியர்களும் ஹெச்1 பி விசாவில் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

தமிழகம்

20 mins ago

க்ரைம்

6 mins ago

சினிமா

34 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

51 mins ago

க்ரைம்

44 mins ago

இந்தியா

49 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்