விரல் சொடுக்கும் வடகொரியா - 2

By ஜி.எஸ்.எஸ்

வட கொரியாவும் தென் கொரியாவும் மோதிய கொரியப் போரில் முதன்முதலாக வேறொரு திருப்புமுனையும் நிகழ்ந்தது.

இந்தப் போரில்தான் ஐ.நா.சபை தனது ராணுவத்தை முதன் முதலாக இறக்கியது. ஆம், ஐ.நா.சபைக்கென்று ராணுவம் உண்டு. ஆனால் இந்த ராணுவத்தினர் எல்லாம் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டவர்களே தவிர, ஐ.நா.வால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. உலக அமைதிக்காக இந்த ராணுவத்தினரைப் பயன்படுத் தப்போவதாக ஐ.நா.சபை குறிப்பி டுவதுண்டு.

அதை அப்போதும் குறிப்பிட்டது. கொரியாவின் வடக்குப் பகுதியை ஆட்சி செய்த கம்யூனிஸ்டுகளுக்கு ஐ.நா. அறிவுரை கூறியது. ‘’நீங்கள் உலக அமைதிக்கு இடைஞ்சல் ஏற்படுத் துகிறீர்கள். அமைதியாய் இருங்கள்’’ என்றது. ‘’முடியாது. என்ன செய்யணுமோ செஞ்சுக்க’’ என்று முறைப்பு காட்டியது வட கொரியா.

முடிந்ததைச் செய்து காட்டியது ஐ.நா. தனது உறுப்பினர் நாடு களுக்கு உடனடியாக ஓர் அறிக்கை விட்டது. ‘‘தெற்கு கொரியாவில் அமைதியை ஏற்படுத்த உங்கள் ராணுவ உதவி தேவை’’.

இதற்குத்தானே காத்திருக்கி றோம் என்கிற வகையில் 16 நாடுகள் தங்கள் ராணுவத்தை அனுப்பின. ‘’ராணுவம் இருக்கட்டும் எங்கள் போர்க் கருவிகளைத் தருகிறோம்’’ என்று முன்வந்த நாடுகளின் எண்ணிக்கை பலமடங்கு. மிக அதிகமான ஆயுதங்களை எந்த நாடு அளித்தது தெரியுமா என்று கேட்டால் அமெரிக்கா என்ற சரியான விடையை நீங்கள் கூறிவிடுவீர்கள்.

வால்டன் வாக்கர் குள்ளமான வர், குண்டானவர். ஒருவேளை இன்றைய அமெரிக்க ராணுவத்தில் தோற்றத்தின் காரணமாகவே தேர்வு செய்யப்பட்டிருக்கமாட்டாரோ என்னவோ! ஆனால் அன்று ஐ.நா. ராணுவத்தை (அதில் 80 சதவிகிதம் பேர் அமெரிக்க ராணுவத்தினர்) வழி நடத்தியவர் இவர்தான்.

இவர் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் பகுதியில் பிறந்தவர், படித்தவர். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் இரண்டிலுமே கலந்து கொண்டவர். அதுவும் இரண்டாம் உலகப்போரில் பிரபல ராணுவத் தளபதி பேட்டனின் மிக வீரமான பிரிவுக்குத் தலைமை தாங்கியவர். தன் படையை மின்னல் வேகத்தில் இயக்கக் கூடியவர் என்ற புகழ் கொண்டவர்.

எதிர்த் தரப்புக்கு மட்டும் ஆதரவு இருக்காதா என்ன? சீனா தனது ராணுவத்தை வட கொரியாவுக்கு ஆதரவாகக் களம் இறக்கியது. சோவியத் யூனியன் நிறைய போர்க் கருவிகளை வட கொரியாவுக்குள் இறக்கியது.

சோவியத்தை ஆட்சி செய்த ஸ்டாலின் தங்களது ஆதரவு பெற்ற வட கொரியாவுக்கு நிச்சயம் வெற்றி என்றே கருதினார். அதற்குப் பல காரணங்கள்.

செப்டம்பர் 1949-ல் தங்கள் முதல் அணுகுண்டை வெற்றிகரமாக சோதனை செய்திருந்தது சோவியத் யூனியன். தவிர கொரியா விலிருந்து அமெரிக்கா தனது ராணுவ வீரர்களை அப்போது தவணைகளில் வாபஸ் பெற்றுக் கொண்டிருந்தது.

சீனாவில் கம்யூனிஸம் வேரூன்றத் தொடங்கியிருந்தது. அதில் அமெரிக்கா தலையிட்டதா கத் தெரியவில்லை. சீனா விஷயத்திலேயே அமெரிக்கா தலையிடவில்லை என்றால் கொரியாவில் அதற்கு அதைவிட ஈடுபாடு இருந்து விடுமா என்ன? அப்படியொன்றும் புவியியல் கோணத்தில் கொரியா அதற்கு இன்றியமையாத பகுதி இல்லையே! இப்படியெல்லாம் யோசித்த ஸ்டாலின் வட கொரியா வுக்கு ராணுவ, பொருளாதார உதவி களை நிச்சயம் அளிப்பதாக உறுதி அளித்தார்.

அதற்கு முன்னோட்டம் போல 1949 மற்றும் 1950ல் வட கொரியா வில் தன் போர்த்தடவாளங்களை நிரப்பியது சோவியத் யூனியன்.

1950 ஜூன் 25 அன்று தொடங்கியது கொரியப் போர். போர் தொடங்கிய முதல் இரு மாதங்களில் தென் கொரிய ராணுவம் கடும் இழப்புகளை சந்தித்தது.

ஐ.நா.வின் ஆதரவு, 21 நாடுகளின் பங்களிப்பு, ராணுவத் தில் 88 சதவிகிதம் பயிற்சி பெற்ற அமெரிக்க சிப்பாய்கள் - இத்தனையும் இருந்தும் தென் கொரிய ராணுவம் பூசன் பகுதிக்குப் பின்வாங்கும்படி ஆனது. (பூசன் என்பது தென் கொரியாவில் உள்ள ஒரே பெரிய இயற்கைத் துறைமுகம்).

இந்தக் காலகட்டத்தில் யாலு நதியைக் கடந்து சீன ராணுவம் வட கொரியாவின் உதவிக்கு வந்தது. இதன் காரணமாகவும் ஐ.நா. படைகள் பின்வாங்குவது அவசியமாகிவிட்டது.

வாக்கர் பதுங்கிப் பாய வேண்டும் என நினைத்தார். அந்தக் கால கட்டத்தில் தாக்குதலுக்கான எல்லா ஏற்பாடுகளை யும் முழு வீச்சில் செய்ய வேண்டு மென்று தீர்மானித்தார். முக்கியமாக பூசன் தென்கொரியாவின் கையைவிட்டு போய்விடக் கூடாது என்பதில் மிக உறுதியாகவே இருந்தார்.

ஜூலை 29 அன்று அவர் தன் வீரர்களிடம் ஆற்றிய உரை ‘’ஸ்டாண்ட் ஆர் டை’’ (அதாவது ‘வெற்றி அல்லது வீர மரணம்’) என்பது கொஞ்சம் பிரபலமானது.

‘’நாம் நேரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு மேல் நாம் சிறிதும் பின்வாங்க முடியாது. பின்வாங்க பின்புறமாக எந்தப்பகுதியும் இல்லை என்றே மனதில் கொள்ளுவோம். பூசனையும் தாண்டி பின் வாங்கினால் அது சரித்திரத்தின் மாபெரும் தற்கொலைகளில் ஒன்றாக இருக்கும். இறுதிவரை போராடுவோம். குழுவாகப் போரா டுவோம். இந்தப் பகுதியிலிருந்து ஓரடி கூட பின்வாங்கக் கூடாது. விரைவில் வெல்வோம்’’ என்றார்.

தொடர்ந்தது கடுமையான யுத்தம். ஐ.நா.ராணுவம் மெல்ல மெல்ல முன்னேறியது. வடகொரிய ராணுவத்தில் பெரும் சேதங்கள் உண்டாயின. எதிர்த்தரப்பிலும் இழப்புகள் கணிசமாகவே இருந்தன.

‘’பதினாறு லட்சம் கம்யூனிஸ்டு கள் இறந்தனர். அல்லது தொலைந்தனர். தென் கொரிய ராணுவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பலப்பல லட்சம். போரில் சம்பந்தப்படாத அப்பாவித் தென் கொரிய மக்களிலும் பத்து லட்சம் பேர் க்ளோஸ்’’. இப்படி ரத்தக்களரியான புள்ளி விவரங்கள் ஏராளமாக வெளியாயின. முதன்முறையாக ஜெட் விமானத் தாக்குதல் வேறு.

மூன்று வருடங்கள் கழித்து 1953 ஜூலை 27 அன்று ஒரு வழியாகப் போர் நின்றது. எந்தத் தரப்புக்குமே முழு வெற்றி இல்லை. நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் எதுவுமேயில்லாமல் ஒரு முடிவுக்கு வந்தது கொரியப் போராகத்தான் இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்