உலக மசாலா: திட மழை

By செய்திப்பிரிவு

மெக்ஸிகோ விவசாயிகள் திட மழையைப் (Solid Rain) பயன்படுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக வறட்சியில் இருந்து தப்பி வருகின்றனர். திட மழை என்பது பாலிமர் தூள். இந்தத் தூளைத் தண்ணீரில் நனைத்தால் 500 மடங்கு பெரிதாகிவிடும். அதாவது தண்ணீரை உள் இழுத்துக்கொள்ளும். வறட்சி நிலவும் இடங்களில் இந்தத் தூளைச் செடிகளுக்கு இட்டு, வெற்றிகரமாக விவசாயம் செய்திருக்கிறார்கள் விவசாயிகள். 1970-ம் ஆண்டு அமெரிக்காவில் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டயாபர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. மெக்ஸிகோவைச் சேர்ந்த ரசாயன பொறியாளர், ஈரத்தை உறிஞ்சும் பாலிமர் தூளை வைத்து, தங்கள் நாட்டின் வறட்சியை ஒழிக்க முடிவு செய்தார். செர்கியோ ரிகோ வெலஸ்கோ என்பவர் இதை மேலும் பலவிதங்களில் முன்னேற்றினார். திட மழைத் தூளை உருவாக்கினார். இந்தத் தூளைச் செடிகளைச் சுற்றிப் போட்டு, குறைவாகத் தண்ணீர் விட்டால் போதும். நீண்ட காலத்துக்குச் செடிக்குத் தண்ணீர் கிடைத்துக் கொண்டே இருக்கும். 10 கிராம் திட மழைத் தூள் ஒரு லிட்டர் தண்ணீரைச் சேமிக்கும். செடிகளுக்கு விடும் நீர், மண்ணுக்குள் வழிந்து ஓடாமலும் ஆவியாகாமலும் பார்த்துக்கொள்கிறது. மெக்ஸிகோ அரசாங்கம் ஓர் ஆண்டு முழுவதும் ஆராய்ந்தது. ஒரு ஹெக்டேரில் 1000 கிலோ சூரிய காந்தி விளையும் மண்ணில், திட மழை மூலம் 3000 கிலோ சூரியகாந்தி விளைந்தது. 450 கிலோ பீன்ஸ் விளையக்கூடிய மண்ணில், 3000 கிலோ பீன்ஸ் விளைந்தது. திட மழை வறட்சியான மெக்ஸிகோ பகுதிகளில் அற்புதமாகப் பலன் தருகிறது. இதை உலகம் முழுவதும் வறட்சியான பகுதிகளுக்குக் கொண்டு சென்று, விவசாயிகளை மகிழ்விக்கலாம் என்கிறார்கள். ‘திட மழை நச்சுத் தன்மைகொண்டதல்ல. பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் விருதுகளைப் பெற்றிருக்கிறது’ என்கிறார் நிறுவனத்தின் உதவித் தலைவர் எட்வின் கோன்ஸாலெஸ். பல ஆண்டுகள் பயன்படுத்தும்போது மண் வளம் பாதிக்கப்படும், தண்ணீர் கிடைக்காதபோது, அருகில் உள்ள நீர் வளங்களையும் உறிஞ்சிவிடும் என்றெல்லாம் எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன.

திட மழை வரமா, சாபமா?

ரஷ்யாவின் வோல்கோக்ராட் பகுதியில் வசிக்கிறார் 76 வயது மருத்துவர். அக்கம் பக்கத்தில் யாருடனும் பேச மாட்டார். எப்பொழுதாவது 87 வயது கணவருடன் வெளியே செல்வார். 4 மாதங்களாக மருத்துவர் மட்டுமே வெளியே சென்று வருவதைப் பார்த்து, கணவர் பற்றி விசாரித்தனர். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை. திடீரென்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். வீட்டைத் திறந்து பார்த்தபோது, மருத்துவரின் கணவர் உடல் மட்கி, மம்மியாக மாறியிருந்தது. ‘என் கணவர் இறந்துவிட்டார். எனக்கு மருத்துவத்தைவிட மந்திரங்களில் நம்பிக்கை அதிகம். புனித மந்திர நீரைக் கொண்டு உடல் மீது தெளித்து வந்தால், என் கணவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று நம்பினேன். அதற்குள் இப்படி நுழைந்துவிட்டீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். கணவர் இயற்கையாக மரணம் அடைந்திருக்கிறார் என்பதை உறுதி செய்த காவல்துறை, மருத்துவரை மனநல மருத்துவமனையில் சேர்த்தி ருக்கிறது.

மருத்துவரே மந்திரத்தை நம்பலாமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

இந்தியா

6 mins ago

சினிமா

11 mins ago

உலகம்

14 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

மேலும்