உலகம்

பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானியைக் கொல்வதே இலக்கு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானியை கொல்வதே தங்கள் இலக்கு என பாகிஸ்தான் தலிபான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தெஹ்ரிக்-இ-நபேஸ்-இ-ஷரியத்-இ-முகமதியின் தலைவர் முல்லா பஸ்லுல்லா கூறியுள்ளார்.

கடந்த மாதம் ராணுவ உயர் அதிகாரி ஒருவரைக் கொன்றதும் தாங்கள்தான் எனவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அந்த அமைப்பு ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளது. அதில் பஸ்லுல்லா தோன்றி பேசுகிறார். தங்கள் குருவாக விளங்கிய ஷேக் வலியுல்லா கபல்கிராமி ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக ராணுவ மேஜர் சனாவுல்லா கான் நியாசியை கொன்றதாகக் கூறியுள்ளார்.

நியாசி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். முல்லா ரேடியோ என்று அழைக்கப்படும் அவர், பயங்கரவாதிகளால் நடத்தப்படும் எப்.எம். ரேடியோவுக்கு பேட்டி அளிக்கும் வகையிலும் வீடியோவில் காட்சிகள் பதிவாகி உள்ளன.

ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு ராணுவம் மேஜர் சனாவுல்லா கான் தலைமையில் அதிரடிப்படையை அமைத்தது. இதையடுத்து, பஸ்லுல்லா அப்பகுதியிலிருந்து வெளியேறி ஆப்கனில் தஞ்சமடைந்தார்.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஸ்வாட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நியாசி யுடன் மற்றொரு அதிகாரியும் ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT