புதினை விமர்சித்து ரஷிய நாளேட்டுக்கு அமெரிக்க எம்.பி. கட்டுரை

By செய்திப்பிரிவு

நியூயார்க் டைம்ஸில் புதின் எழுதிய கட்டுரைக்கு பதிலடி

ரஷிய அதிபர் அதிபர் விளாதிமிர் புதின், தன்னையோ, தனது அரசையோ விமர்சித்துப் பேசுபவர்களை ஒடுக்கக்கூடிய கொடுங்கோல் ஆட்சியாளர் என விமர்சித்து ரஷியாவின் கம்யூனிஸ்ட் பத்திரிகையான பிராவ்தா-வுக்கு கட்டுரை எழுதியுள்ளார் அமெரிக்க செனட் அவை உறுப்பினர் ஜான் மெக்கைன்.

சிரியா விவகாரம் தொடர்பாக அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்து அமெரி்க்காவைச் சேர்ந்த நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு புதின் கட்டுரை எழுதியதற்கு பதிலடியாக ரஷிய ஊடகங்களுக்கு மெக்கைன் இந்த கட்டுரையை அனுப்பியுள்ளார்.

மெக்கைன் எழுதியுள்ள கட்டுரை விவரம்: நான் ரஷியர்களுக்கு எதிரானவன் அல்ல. சொல்லப்போனால் தவறாக ஆட்சி புரியும் புதினை விட நான் ரஷியர்களுக்கு ஆதரவானவன். புதினும் அவரது கூட்டாளிகளும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்பவர்கள். அரசு எதிர்ப்பாளர்களை சிறையில் அடைக்கிறார்கள், கொலை செய்கிறார்கள்.

ரஷியாவில் ஊழல் அதிகரித்துத் அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது.

ரஷியர்கள் மீது எனக்கு எவ்வித வெறுப்புணர்வும் இல்லை. அந்த நாட்டு அரசு மனித குலத்துக்கே உரித்தான வாழ்வுரிமை, பேச்சுரிமை போன்ற மறுக்கப்பட கூடாத உரிமைகளைத் தர மறுக்கிறது. மனசாட்சிக்குத்தான் நாம் பயப்படவேண்டும்.

புதினும் அவரது சகாக்களும் சமூக நெறிகளுக்கு மதிப்பு தருவதில்லை. அவர்களை மற்றவர்கள் அதிகாரம் செய்ய அனுமதிப்பதில்லை. எதிர்ப்புக் குரல் கொடுத்தால் அதை ஒடுக்குகின்றனர். தேர்தலில் எல்லா முறைகேடுகளும் நடக்கின்றன. ஊடகங்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மக்களின் சுயாட்சி உரிமைக்காக போராடும் அமைப்புகளை நாட்டைவிட்டு துரத்துவதுடன் அவற்றுக்கு மிரட்டல் விடுத்து பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள்.

உதாரணத்துக்கு வழக்குரைஞர் செர்ஜி மாக்னிட்ஸ்கி விவகாரத்தை குறிப்பிடலாம். தனியார் சம்பந்தப்பட்ட சொத்துகளை அரசே பெரிய அளவில் பறித்துக்கொண்டது பற்றி அம்பலப்படுத்தியவர் மாக்னிட்ஸ்கி. அது அரசே நடத்திய மாபெரும் கொள்ளை என்றே சொல்லவேண்டும். அவரிடம் விசாரணை நடத்தாமல் சிறையில் அடைத்தனர். சிறைக்குள் காவலர்களால் அடித்து உதைக்கப்பட்ட அவர் உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.

அதன்பிறகு ஒப்புக்கு விசாரணை நடத்தி அவரை குற்றவாளி என அறிவித்தனர்.

அவர் மனித உரிமைப் போராளி அல்ல. சட்டத்தின் ஆட்சிதான் உயர்ந்தது என்பதை வலியுறுத்தியவர் என்று குறிப்பிட்டுள்ளார் மெக்கைன்.

800 வார்த்தை கொண்ட அவரது கட்டுரை கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மற்றும் அதன் இணையதள பத்திரிகைகளுக்கு பிரசுரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மெக்கைன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மெக்கைன் 2008ம் ஆண்டில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்