அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் அதிரடி மாற்றம்: ட்ரம்ப் முடிவு மீது ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் விமர்சனம்

By செய்திப்பிரிவு

அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொண்டுவந்துள்ள மாற்றங்களை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் அகதிகளுக்கான குடியுரிமைக் கொள்கையில் பல்வேறு அதிரடி மாற்றங்களைப் புகுத்திய அதிபர் ட்ரம்ப் அதற்கான செயலாக்க உத்தரவை வெள்ளிக்கிழமையன்று பிறப்பித்தார்.

அவரது இந்தக் கொள்கையை உலகம் முழுவதும் பலரும் பரவலாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு நிலைத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது தாத்தா, பாட்டி ஜெர்மனி, ஆஸ்த்ரியா, போலந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். பிரிஸில்லாவின் (மார்க்கின் மனைவி) பெற்றோர் சீனா, வியட்நாமைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா புலம்பெயர்ந்தவர்களால் ஆன நாடு. அதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் கவலை என்னையும் ஆட்கொண்டிருக்கிறது. அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள அகதிகள் தொடர்பான புதிய குடியுரிமைக் கொள்கை செயலாக்க உத்தரவு வேதனை அளிக்கிறது.

இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், அதற்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களையே குறிவைக்க வேண்டும். அதைவிடுத்து அமெரிக்காவில் வசிக்கும் எல்லா மக்கள் மீதும் சட்ட கண்காணிப்புகளை நீட்டிப்பது அமெரிக்கர்களின் பாதுகாப்பை எந்தவகையிலும் உறுதிப்படுத்தாது. இதனால், நம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அறிவுசார் வளம் கிடைக்காமல் போகும். அமெரிக்க குடியுரிமைக்காக இன்னும் சரியான ஆவணங்களைப் பெற முடியாமல் அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கானோர் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படக்கூடும் என்ற அச்சத்திலேயே வாழ்வர்.

உதவி தேவைப்படுபவர்களுக்கும் அகதிகளுக்கும் நமது நாட்டின் கதவுகளை எப்போதுமே திறந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் நமது அடையாளம்.

அகதிகளை புறக்கணித்து இப்படி ஒரு கொள்கையை நாம் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேற்றியிருப்போம் என்றால் இன்று பிரிஸில்லா இங்கு இருந்திருக்க மாட்டார்.

மிகச் சிறிய வயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சிறார்களுக்காக தன்னிடம் திட்டம் இருப்பதாக ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

இப்போதைக்கு அமெரிக்காவில் 7 லட்சத்து 50,000 குழந்தைகள் அத்தகைய அந்தஸ்தில் இருக்கின்றனர். மேலும், நம் நாட்டுக்கு வரும் நல்ல அறிவுஜீவிகளை வரவேற்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருப்பதும் மகிழ்ச்சியே. அதே வேளையில் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சிறார்களுக்கு அவர்கள் அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியமர்த்தப்பட்டு வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

என் குடும்பத்தில் பலர் புலம்பெயர்ந்து அமெரிக்கா வந்தவர்கள் என்பதால் மட்டுமல்ல எனக்கு இப்பிரச்சினையில் உண்மையிலேயே கூடுதல் அக்கறை இருக்கிறது.

நான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். அங்கேயிருந்த எனது மாணவர்களில் சிலருக்கு குடியேற்றத்துக்கான உரிய ஆதார ஆவணங்கள் இல்லை. அவர்களும் நம் எதிர்காலம்தானே.

நம் நாடு புலம்பெயர்ந்தவர்களால் ஆனது. அவ்வாறு குடியேறியவர்களின் மதுநுட்பத்தால் நாம் பயனடைந்திருக்கிறோம். எனவே, அகதிகளை ஏற்றுக் கொள்ளும் மன தைரியத்தையும் இரக்க குணத்தையும் பெற்று இந்த உலகை எல்லோரும் வாழக் கூடிய இடமாக மாற்றுவோம் என நான் நம்புகிறேன்"

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ள அகதிகள் கொள்கை என்ன?

ட்ரம்ப் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, சிரிய அகதிகளுக்கு விசா வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படுகிறது. ட்ரம்ப்பிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை சிரியர்களுக்கு அமெரிக்க விசா கிடையாது. தற்போது, பரிசீலனையில் இருக்கும் விசா படிவங்கள்கூட கருத்தில் கொள்ளப்படாது.

மேலும், பார்டர் ரெஃப்யூஜி புரோகிராம் எனப்படும் எல்லையில் காத்திருக்கும் அகதிகள் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கான திட்டத்தை 4 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

இது முஸ்லிம்களை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் ட்ரம்ப் நிகழ்த்தும் கெடுபிடி என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

29 mins ago

தமிழகம்

31 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்