கடலடித் தரையையே தூக்கிப் போடும் இந்தோனேசிய பூகம்பங்களும் சுனாமிகளும் ஏன் படுபயங்கரம்?

By இரா.முத்துக்குமார்

இந்தோனேசியாவின் சுலாவேசியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் பூகம்பம் மற்றும் சுனாமியினால் பலு நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சுமார் 1200 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகாரிகள் இன்னமும் கூட சேதத்தின் அளவை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது இந்தோனேசியாவில் முதல் முறையல்ல என்றாலும் இது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து அஞ்சா ஸ்கெபர்ஸ் என்ற சதர்ன் கிராஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ‘தி கான்வர்சேஷன்’ என்ற இதழில் எழுதியுள்ள கட்டுரையில் விளக்கியுள்ள காரணங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துபவை.

கண்டத்தட்டுக்களின் நகர்வில் பலவகைகள் உள்ளன. இந்தோனேசியாவில் கண்டத்தட்டுக்கள் (டெக்டானிக் பிளேட்டுகள்) நகர்வதில் பல்வேறு விதமான சேர்க்கைகள் உள்ளன. கடற்கரையின் வடிவம், கடற்கரை அருகே எந்தவிதப் பாதுகாப்பும் முன்னெச்சரிக்கையும் இல்லாத மக்கள் திரள், முன் கூட்டியே அறிவிக்கும் திறனின்மை ஆகியவை இந்தோனேசியாவில் பாதிப்படி ஏற்படுத்துகின்றன.

கண்டத்தட்டுக்கள் (டெக்டானிக் பிளேட்ஸ்)

இந்தோனேசியா எந்தக் கண்டத்தட்டின் மேல் உட்கார்ந்துள்ளதோ அதன் அடியில் பயங்கரமான புவியியல் பாறை நிகழ்வுகள் ஏற்படுகின்றன, இது சுலபத்தில் கண்டறிய முடியாதது. உலகில் மிகப்பெரிய பூகம்பங்கள் ‘சப்டக்‌ஷன் மண்டலம்’ என்று அழைக்கப்படும், கண்டங்களைத் தாங்கும், ஏன் கடலையே தாங்கும் கண்டத்தட்டுக்கள் ஒன்றின் அடியில் ஒன்று செல்லும் பூகம்பங்கள் பயங்கரமானவை.

 

டிசம்பர் 2004, மார்ச் 2005-ல் சுன்டா ட்ரெஞ்ச் அல்லது சுன்டாவில் இருக்கும் நீண்ட நெடும் பாறைப்பள்ளம் பகுதி சப்டக்‌ஷன் மண்டலமாகும் இங்கு ஒரு பிளேட் இன்னொரு பிளேட்டின் அடியில் சென்று விடும். இப்படித்தான் 2004ல் 9.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டு தெற்காசிய சுனாமியை ஏற்படுத்தி லட்சக்கணக்கானோர் பலியாகினர். இது மட்டுமல்ல கிழக்கு இந்தோனேசியாவில் சிறுசிறு நுண் தட்டுக்கள் உள்ளன. இவை ஆஸ்திரேலியா, சுன்டா மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் தட்டுக்கள் அல்லது பெரும்பாறைகள் நகரும்போது ஆட்டம் காண்கின்றன, உலுக்கப்படுகின்றன.

இந்த சுலாவேசி பூகம்பம் இத்தகைய சிறிய நுண் கண்டத்தட்டுக்களின் உள்பகுதியில் உள்ள ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் அதாவது கிடைக்கோட்டு பாறைநகர்வின் மூலம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக கிடைக்கோட்டு கண்டத்தட்டு நகர்வின் மூலம் பெரிய சுனாமிகள் உருவாவது அரிதே. அத்தகைய அரிதான சுனாமிதான் பலுநகரைச் சூறையாடியுள்ளது.

பெரும்பாறை பிளவு அமைப்புகள் மிகப்பெரியது, இவை அரிப்பு நடவடிக்கைகளினால் அகலமான நதிப்பள்ளத்தாக்குகளையும் முகத்துவாரங்களையும் உருவாக்குகின்றன. பலு நதியின் பள்ளத்தாக்கு அதன் முகத்துவாரம், இதில்தான் பலுநகரம் உள்ளது. பலு உட்கார்ந்துள்ள புவிப்பகுதியே இப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த பெரும்பாறைப்பிளவு அமைப்பினால் உருவானதே. இப்பகுதியில் வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் ஏற்பட்ட பூகம்பம் பற்றிய ஆய்வுகளில் இந்தபெரும்பாறைப் பிளவுகளே ரிக்டர் அளவுகோலில் 7-8 என்று பதிவாகும் பூகம்பங்களை உருவாக்குகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடலடித் தரை சுனாமி அலைகளைத் தீர்மானிக்கிறது:

கடலடித் தரையின் வடிவம் மற்றும் ஆழம் சுனாமிப் பேரலைகளைத் தீர்மானிக்கிறது. தொடக்க சுனாமி அலைகளின் வேகத்தையும் இவை தீர்மானிக்கின்றன. கடலடித் தரையின் மேல் வலுவான சப்டக்‌ஷன் மண்டல, கண்டத்தட்டுக்கள் ஒன்றின் அடியில் ஒன்று செல்லும் பூகம்பங்கள் ஏற்படும்போது கடல் தரையையே அவை தூக்கிப் போடுகின்றன, இதனையடுத்து கடல்நீர் பெரிய அளவில் நினைத்துப் பார்க்க முடியாத வால்யூமில் மேலேறி பிறகு மீண்டும் கீழிறங்குகின்றன.

 

எனவே பூகம்பம் ஏற்பட்ட மையத்திலிருந்து வெளியே பாய்ந்து வரும் கடல்நீர் வரம்புக்குட்பட்ட உயரம் கொண்டதே. ஒரு மீட்டருக்கு மேல் அரிதாகவே இருக்கும். ஆனால் இடம்பெயரும் கடல்நீரின் அளவு மிகப்பெரியது, நினைத்துப் பார்க்க முடியாதது, அளவிட முடியாதது. கடலடித் தரையை எந்த அளவுக்கு பூகம்பம் நகர்த்தியுள்ளது என்பதைப் பொறுத்து இடம்பெயரும் கடல்நீரின் அளவு இருக்கும். சுனாமி அலைகள் ஜெட் வேகத்தில் நகரும். தண்னீருக்குள் 2 கிமீ ஆழத்தில் ராட்சத அலைகள் பயணிக்கும். இந்த 2 கிமீ ஆழத்தில் அவை மணிக்கு 700கிமீ வேகத்தில் பாயும். இன்னும் ஆழத்தில் பயணிக்கும் பேரலைகள் மணிக்கு 1000 கிமீ வேகத்தில் பாயும்.

ஆனால் கடற்கரையை அது அடையும் போது ஆழம் குறைவான பகுதி என்பதால் அதன் வேகம் குறையும் அதன் உயரம் அதிகரிக்கும். திறந்தகடல் வெளியில் பார்க்கும்போது 1 மீ உயரமாக இருப்பது கரையை மோதும்போது 5-10 மீ உயரம் வரை ராட்சத அலைகள் எழும்பும். கடற்கரைக்கு வரும் பாதை இன்னும் மேடாக இருக்குமானால் இன்னும் சிலபல மீட்டர்கள் உயரம் எழும்பும். கடற்கரை அருகே சுனாமி வேகம் குறைந்தாலும் அதன் தொடக்க வேகத்தினால் கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் பல கிமீகள் வரை கடல்நீரில் மூழ்கும்.

இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில் கடற்கரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, குறிப்பாக சுலாவேஸி முக்கியமானது. பலுவில் குறுகலான, ஆழமான நீளமான விரிகுடா கொண்டது. அதாவது சுனாமி அலைகளைத் தீவிரப்படுத்துவதற்கான அத்தனை அம்சங்களையும் அது கொண்டுள்ளது. அதனால்தான் கடல் அலை உயரம் போன்றவற்றை எளிதில் கணிக்க முடியாது.

கடற்கரைப் பகுதி மக்கள் உயரமான இடங்களுக்குச் சென்று அங்கு 2 மணி நேரம் வரையிலும் இருப்பது அவசியம். ஆனால் எதார்த்தத்தில் இது மிகவும் சிக்கலான ஒரு நடைமுறையாகும். ஹவாயிலும் ஜப்பானிலும் மிகவும் திறம்பட்ட, மேம்பட்ட சுனாமி எச்சரிக்கை அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தோனேசியாவில் இவற்றை அமைப்பது மிகவும் சவாலானது.

ஆனால் 2004 கொலைகார சுனாமிக்குப் பிறகே சர்வதேச நாடுகளின் முயற்சியினால் இந்தோனேசியாவில் 134 ஆழிப்பேரலை கணிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடலடித் தரை செயல்களை கண்டுணரும் சென்சார்களும் உள்ளன. இதை இன்னும் மேம்படுத்த வேண்டுமெனில் 250000 அமெரிக்க டாலர்களைச் செலவு செய்வதோடு, ஆண்டுக்கு 50,000 டாலர்கள் செலவிட்டு இவற்றை பராமரிக்கவும் வேண்டும். இத்தகைய பூகம்பங்களே நீருக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கும் ராட்சத சுனாமி அலைகளுக்கும் காரணம். பலுவில் ஏற்பட்ட சுனாமி இதுவரையிலான சுனாமி ஆய்வு மாதிரிகளுக்கு சவால் விடுப்பதாகும்.

இவ்வாறு பேராசிரியர் அஞ்சா ஸ்கெஃபர்ஸ் தி கான்வர்சேஷன் என்ற இதழில் எழுதியுள்ள கட்டுரையில் விளக்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 mins ago

விளையாட்டு

52 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்