நாடியா முராத்: அமைதிக்காக இராக்கிலிருந்து ஒரு குரல்

By இந்து குணசேகர்

"ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து உயிர் பிழைத்து தப்பி வந்தவளான எனக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு  யாசிதி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது" என்கிறார் நாடியா முராத்.  2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இராக்கின் இளம் பெண் நாடியா முராத் என்பது குறிப்பிடத்தக்கது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு பெறுவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது. நீண்ட  நாட்களாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவர்களின் பரிந்துரைப் பட்டியலில் இருந்த காங்கோவைச் சேர்ந்த மருத்துவரான டெனிஸ் முக்வேஜாவும், இராக்கை சேர்ந்த நாடியா முராத்துக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இம்முறை அமைதிக்கான நோபல் விருதுகள் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள் வெளிச்சம் படும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு அமைதிக்கான விருது 133 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 89 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள். 27 தொண்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 17 பெண்களில் ஒருவராக விருதைப் பெற இருக்கிறார் இராக்கைச் சேர்ந்த குர்து இன மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத். இராக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளான இராக்கின் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் நாடியா.

வரலாற்று ஆசிரியர் கனவு

இராக்கின் கோஜோ கிராமத்தில் வரலாற்று ஆசிரியராக ஆக வேண்டும் என்ற கனவில்  தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த  நாடியா, 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் படை எடுப்பால் தாய் உட்பட தனது அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் இழந்து தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். நாடியாவுடன் யாசிதி சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான  இளம்பெண்களையும், குழந்தைகளையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். 

அங்கு அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அடிமைகளாக்கப்பட்டனர். அவர்கள் மீது  கூட்டு பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டது. சுமார் 8 மாதம் மொசூலில்  இந்த கொடுமைகளை அனுபவித்து வந்த நாடியாவுக்கு அன்புக் கரம் நீட்டியது அவர் சிறைக்கைதியாகப் பிடித்து வைக்கப்பட்ட இடத்தில் வசித்து வந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று. அந்தக் குடும்பத்தினர் யாஷிக்கு போலியான இஸ்லாம் அடையாளங்களை அழித்து ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து தப்பிக்க உதவி செய்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பின் பாலியல் துன்புறுத்தலிருந்து இருந்த தப்பித்து வந்து தற்போது அவர்களுக்கு எதிராகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகவும் தொடர் குரல் கொடுத்து தற்போது விருதுகளால் அடையாளப்படுத்தப்படும் நபராக வளர்ந்திருக்கிறார் நாடியா.

இந்த உலகம் அறியட்டும்

ஐஎஸ்ஸிடமிருந்து தப்பித்து வந்த நாடியாவை நேர்காணல் செய்ய விரும்பிய இராக் / சிரியா பிபிசி செய்தியாளர் நபிஷ்ஸ்,  நாடியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது குறித்து,  ''நான் நாடியாவை நேர்காணல் செய்ய விரும்பிய போது அவரிடம் உங்களின் இயற்பெயரையும், உங்கள் அடையாளத்தை மறைத்துத்துதான் இந்த நேர்காணல் நடக்கும் என்று கூறினேன். ஆனால் நாடியா சற்று யோசிக்காமல் ”வேண்டாம்... இந்த உலகம் எங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று அறியட்டும் ”என்றார். தற்போது அவள் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார்''  என்று கூறியிருக்கிறார்.

 

25 வயதான நாடியா, நோபல் பரிசு மட்டுமல்லாது, இதற்கு முன்னர் கிளிண்டன் க்ளோபல் விருது, ஸ்பெயின் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பாக அமைதிக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.

நாடியா ”The Last Girl" என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். இப்புத்தகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தனது போராட்டத்தைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

மனித நேயத்துக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.. போருக்கு அல்ல...

அமைதிக்கான நோபல் பரிசு வென்றது குறித்து நாடியா கூறும்போது, "நான் இதை கவுரவமாகக் கருதுகிறேன். ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து உயிர் பிழைத்து தப்பி வந்தவளான எனக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு யாசிதி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது. 

நாம் இனப்படுகொலைகளால் அழிக்கப்பட்ட சமூகத்தை மீண்டும் கட்டி எழுப்ப உறுதி எடுக்க வேண்டும். நாம் அரசியல் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை கடந்து  மனிதகுலத்தின் மீதும் மனிதத்தின் மீது கவனம்  செலுத்த வேண்டும். நாம் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினருக்கு சிறப்பான எதிர்காலம் அமைய தொடர்ந்து உழைக்க வேண்டும். 

இதில் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போருக்கு அல்ல.

அமைதிக்கான நோபல் விருதை என்னுடம் பெறவுள்ள, பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மருத்துவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இரு வழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள் ஒன்று தற்கொலை, மற்றொன்று குர்திஸ்தான். கிளர்ச்சியாளர்கள் படையில் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிட்டுப் பலியாகி வருகின்றனர்.

இவர்களிடமிருந்து தனது போராட்டத்தை இவ்வுலகுக்கு சற்று தனித்துக் காண்பித்து வருபவர்தான் நாடியா.

நாடியா ஒன்றைமட்டும்தான் வலியுறுத்தி வருகிறார்...''ஐஎஸ் தீவிரவாதிகள் நாம் கட்டாயப்படுத்தும்வரை அவர்களது ஆயுதங்களைக் கீழே போடமாட்டர்கள். இதனைச் செய்ய நாம் இன்னும் காத்திருக்க முடியாது'' என்கிறார்.

 நாடியாவின் அமைதிப் போராட்டம் தொடரட்டும்.

 

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்