உலக மசாலா: கால்கள் இல்லாமல் சிகரம் தொட்ட முதியவர்

By செய்திப்பிரிவு

சீ

னாவைச் சேர்ந்த 69 வயது ஸியா போயு இரண்டு கால்களையும் இழந்தவர். சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியிருக்கிறார். இது இவருடைய ஐந்தாவது முயற்சி. 1975-ம் ஆண்டு சீன அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட மலையேற்றக் குழுவில் ஸியாவும் பங்கேற்றார். உச்சியை அடைவதற்கு 250 மீட்டர் தூரம் இருக்கும்போது, மிக மோசமான வானிலை. 3 இரவு, 2 பகல் கூடாரத்தை விட்டு நகர முடியவில்லை. இனியும் இங்கே இருந்தால் உயிர் தப்பாது என்று எண்ணிய குழுவினர், கீழே இறங்க முடிவெடுத்தனர். அடுத்த தடவை தன்னுடைய கனவை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்தார் ஸியா. வழியில் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது, குழுவில் இருந்த ஒருவரின் ஸ்லீபிங் பேக் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அவரைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுடைய ஸ்லீபிங் பேகைக் கொடுத்து உதவினார். அன்று இரவு உருவான கடினமான வானிலையால் அவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு ஒரு வகை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், இவரது கால்கள் மேலும் மோசமடைந்து, செயலிழந்துவிட்டன.

“என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் என் கனவு நிறைவேறாமல் போய்விட்டதே என்று கவலைப்பட்டனர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் உச்சியை எட்ட முடியாமல் போவது எவ்வளவு பெரிய துயரம் என்பதை, ஒரு மலையேற்ற வீரரால் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். சில நாட்கள் வருத்தத்தில் இருந்தேன். திடீரென்று என் கனவை நிறைவேற்றும் வாய்ப்பு இருப்பதாகத் தோன்றியது. மனதை ஒருமுகப்படுத்தினேன். என்னால் மலையேறமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினேன். எனக்கு நானே சவால் விடுத்துக்கொண்டேன். என்னுடைய விதியை மாற்ற முடிவெடுத்தேன். 18 ஆண்டுகள் முயற்சி செய்து, 2014-ம் ஆண்டுதான் எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டு ஏற முடிந்தது. மோசமான வானிலையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்த ஆண்டும் வானிலை சரியில்லாததால் ஏற முடியவில்லை. 2016-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்ட 100 மீட்டர்களே இருந்தன. கடினமான வானிலையால் திரும்பி விடலாம் என்றார்கள் எனக்கு வழிகாட்டியாக வந்த ஷெர்பாக்கள். இவ்வளவு அருகில் வந்த பிறகு திரும்புவதற்கு எனக்கு விருப்பமில்லை. என்ன ஆனாலும் உச்சியை எட்டிவிடுவது என்று நினைத்தேன். ஆனால் ஷெர்பாக்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை எண்ணி, திரும்பிவிட்டேன். 5-வது முறை ஏற நினைத்தேன். ஆனால் நேபாள அரசாங்கம் இரண்டு கால்களை இழந்தவர்கள் மலையில் ஏறக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்துவிட்டது. என்னுடைய 40 ஆண்டுகால முயற்சி தோல்வி அடைவதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. திடீரென்று நேபாள நீதிமன்றம் எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. இதை விட்டால் வேறு வாய்ப்பு வராது என்று, ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்து வைத்தேன். எவரெஸ்ட் உச்சியை அடைந்தேன்! எனக்கு முன்பாக இரண்டு கால்களையும் இழந்த நியூசிலாந்தைச் சேர்ந்த மார்க் இங்லிஸ், 2006-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டியிருக்கிறார். நான் இரண்டாவது ஆள்” என்கிறார் சாதித்த மகிழ்ச்சியில் ஸியா போயு.

மாபெரும் சாதனையாளருக்கு ஒரு பூச்செண்டு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

இந்தியா

24 mins ago

வணிகம்

57 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

மேலும்